சிறப்புக் கட்டுரைகள்

அறிவோம் நம் மொழியை: செய்வதா, செய்துகொள்வதா?

செய்திப்பிரிவு

அன்றாடப் பயன்பாட்டு மொழியில் பல தவறுகள் கலந்துவிடுகின்றன. தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, அவை நிலைபெற்றும்விடுகின்றன. புரிதல் எனும் சொல் அத்தகையது. புரிந்துகொள் என்னும் வினைச்சொல்லை அடியொற்றி சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல் இது. புரிதல் என்றால் செய்தல் என்று பொருள் (உ-ம்: பணிபுரிதல், குற்றம் புரிந்தவன்…). Understanding என்பதற்கு இணையாகப் புரிந்துகொள்ளல், புரிந்துகொள்ளுதல், புரிந்துணர்வு ஆகிய சொற்கள் இருந்தும், யாரோ ஒருவர் புரிதல் என எழுதப்போக, சிறியதாகவும் எளிமையாகவும் இருப்பதால், பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பரவலான பயன்பாட்டால் அது நிலைபெற்றும்விட்டது.

ஒரு சொல், ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டால், அது வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். இப்படிப் பல சொற்களும் தொடர்களும் மாறியுள்ளன. கை கொடுத்தல் என்றால், உதவிசெய்தல் எனப் பொருள். ஆனால், சென்னை வட்டார வழக்கில் கை கொடுத்தல் என்றால் கைவிடுதல் (துரோகம் செய்தல்) என்று பொருள் உண்டு. பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ள இந்தப் பொருளை நாம் புறந்தள்ள முடியாது. ‘கை குட்த்துட்டா(ன்)’ என்று சென்னைத் தமிழில் ஒருவர் சொன்னால், அவர் துரோகத்தைப் பற்றிப் பேசுகிறார் என்றே பொருள்கொள்ள வேண்டும்.

சொற்களும் தொடர்களும் உருமாறுவது வேறு, தவறாகப் பயன்படுத்தப்படுவது வேறு. இன்றைய எழுத்துத் தமிழில் அப்படிப் பல தவறான பயன்பாடுகள் புழங்கிவருகின்றன. திருமணம் செய்தார், தற்கொலை செய்தார் (இரண்டும் அடுத்தடுத்துத் தரப்படுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை) என்றெல்லாம் எழுதுகிறார்கள். திருமணம், தற்கொலை இரண்டையும் செய்துகொண்டார் என்றுதான் எழுத வேண்டும். கொலை செய்தார் என்பது சரி. தற்கொலை செய்தார் என்பது சரியல்ல.

கொலை என்பது ஒருவர் பிறருக்குச் செய்வது. உதவி செய்தார், கெடுதல் செய்தார் என்பனபோல. திருமணமும் தற்கொலையும் ஒருவர் தனக்குத் தானே செய்துகொள்வது. சொல்லிக்கொண்டார், உறுதி எடுத்துக்கொண்டார் என்பவைபோல. எனவே, திருமணம் செய்துகொண்டார், தற்கொலை செய்துகொண்டார் என எழுதுவதே சரி.

திருமணம் செய்தார் என்று தொடர்ந்து எழுதிவந்தால், அது நிலைபெற்றுவிடும். அதன் பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படத்தானே வேண்டும் என்று வாதிடுவதில் பொருளில்லை. மாறுபட்ட பொருள் என்பது சமூகப் பின்புலம், பண்பாடு, வாழ்வியல் தேவைகள், படைப்பூக்கம் முதலான காரணிகளால் உருவாவது. “இன்றைய மாடிக்கு ஏன் இத்தனை படிகள்?” என லா.ச.ராமாமிர்தம் ஓரிடத்தில் எழுதுகிறார்.

அது என்ன இன்றைய மாடி என்று கேட்க முடியாது. இன்றைய மனநிலையைச் சொல்லும் கவித்துவமான பயன்பாடு அது. ஆனால், தவறான பயன்பாடு என்பது வேறு. அதன் பின்னணியில் சமூக, பண்பாட்டு, படைப்புக் காரணங்கள் எதுவும் இருக்காது. சரியானது எது என்பதை அறியாமல், அதற்கு மெனக்கெடாமல் இருப்பதால் இது நிகழ்கிறது. போதிய கவனம் எடுத்துக்கொண்டு இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

SCROLL FOR NEXT