கோவை காரமடைச் சரகத்தில் முதல்மான் கொம்பை என்ற இடத்தில் வன உயிரினக் கணக்கெடுப்புக்காகப் போயிருந்தோம். அதிகாலையில் கிளம்பினோம். நண்பர் துரை பாஸ்கரன், நான், வனப் பணியாளர் ஒருவர், பழங்குடி வழிகாட்டி என்று நால்வர் அணி. பெயரறியாப் பறவைகளின் குரல்களுக்குள்ளிருந்து பொழுது விடிந்துகொண்டிருந்தது. ஓடை ஒன்றின் மறுபுறம் தயங்கித் தயங்கி நீரருந்த வந்த மான்கள், இலைகளைப் பறித்துப் போட்டவாறே மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருந்த குரங்குக் கூட்டம், குறுக்கே மெதுவாய்த் தலைதூக்கி நகர்ந்து சென்ற உடும்பு என்று வன விலங்குகள் பல எங்கள் கணக்கேட்டில் சேர்ந்துகொண்டிருந்தன.
பொட்டல உணவைச் சுனையொன்றின் அருகே வைத்து உண்டபின் மலையேறத் தொடங்கினோம். மலையுச்சியை அடையும்போது பத்து மணி இருக்கும். வரிசையாக நான்கு குடிசை வீடுகள். அருகே சிறியதாய் ஒரு தினைப்புனம். ஒரு பாட்டி எதிர்ப்பட்டார். நெருங்கியபோது எல்லாரையும் அழைத்து வீட்டின் முன் பகுதியில் உட்காரச் சொன்னார். ஒரே ஓர் அறை கொண்ட வீடு அது. முன் தரை சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தது. ஓரமாகச் சிறு திண்ணை. உழுகருவிகள் அங்கிருந்தன. எங்கள் ஒட்டர்பாளையத்து அம்மிச்சியைப் போலவே இருந்தார் அவர். தனது பெற்றோர்கள், கிழங்கும் தேனும் தேடக் காட்டுக்குள் போவது, தங்களின் குலதெய்வங்கள் என்று அவரின் விவரிப்பில் குழந்தையொன்றின் பரவசம். ஒருகாலத்தில் யார் குரல்கொடுத்தாலும் நகர்ந்து சென்றுவிடுகிற யானைகள் இப்போது மாறிவிட்டதைச் சொன்னார். கூட்டமாய்ச் சேர்ந்து தீவட்டியைக் காட்டியும் கொட்டு முழக்கியும் அவற்றை விரட்ட நேரும் அவலத்தை விளக்கினார்.
கிளம்பும்போது ஒன்றைக் கவனித்தேன். வாசலில் நெடிதாய் ஒரு பலா மரம். உயரத்தில் கனிகள். 15 அடி உயரத்தில் சிறு துணி மூட்டைபோல் ஒரு பழம். அதன் முன்பகுதி பிய்த்துப் போடப்பட்டு மஞ்சள் நிறச் சுளைகள் தெரிந்தன.
பாட்டியை அழைத்துக் காட்டினேன். "இதப் பார்க்கலயா? பழம் தேவையில்லையா உங்களுக்கு?" என்றேன்.
அதற்கு அந்தப் பாட்டி சொன்னாள்: "இதப் பாரு சாமி, அந்தப் பழம் கைக்கு எட்டினா கொம்பனுக்கு... எட்டாமப் போனா கொரங்கனுக்கு... கீழ விழுந்தா அதுதான் நமக்கு!"
வியந்துபோனார்கள் அனைவருக்கும்.
சட்டம் இயற்றி உணவைப் பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இதில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் அளவு, அதை உறுதியாக வழங்க வேண்டிய முறைகள் என்றெல்லாம் விவாதிக்கிறோம். மலையுச்சிக் கிராமம் ஒன்றில் வாழும் பழங்குடிப் பெண்ணின் எளிய வாழ்வு முறை நம் உணவுப் பங்கீட்டு முறைபற்றிய முக்கியமான கேள்வியொன்றைச் சலனமின்றி வைக்கிறது.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் காட்டுயிர்களுக்கு உண்டு. இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருள்களை அவை பகிர்ந்துகொள்கின்றன. யானைக்குத் தீனி ஒரு நாளைக்கு 200 கிலோ. ஒரே இடத்தில் கிடைக்காதென்பதால் அது நகர்ந்துகொண்டேயிருக்கும். கொஞ்சம் இலைதழைகள், கொஞ்சம் புற்கள், மரப்பட்டைகள், சருகுகள் என்று அனைத்தையும் உண்டாலும் பிற விலங்குகளுக்கும் பங்கு வைத்துவிடும். உயர்ந்த மரக்கிளையை ஒடித்து உண்ணும்போது மிச்சமிருக்கும் இலைகளைக் காட்டு மாடுகளும், மான்களும் பகிர்ந்துகொள்ளும். இதற்காகவே யானை போகும் பாதையைப் பிற விலங்குகள் தொடர்ந்து செல்கின்றன.
மரமேறும் பழக்கமில்லாத மானுக்கு உச்சியில் நண்பர்கள் உண்டு. தேக்கு மரத்தின் மேல் தாவும் குரங்குகள் இலைகளைப் பறித்துப் போட, மான்கள் கூட்டமாய்க் கீழே இருந்து உண்ணும். இறந்துபட்ட விலங்குகளின் சதைப் பகுதியைப் புலியும் நரியும் புசித்தபின், மிச்சமிருக்கும் துணுக்குகளை வட்டமிடும் கழுகுகள் கொத்திக் கிழித்து உண்டு முடிக்க , எஞ்சும் எலும்பைச் சுவைப்பதற்கென்றே கழுதைப்புலி இருக்கிறது. காட்டின் சுத்தமும் உத்தரவாதமாகிறது.
பழங்குடிகளுக்குக் கிடைத்திருப்பது காடுபேறு. காடு அவர்களுக்கு எல்லா தர்மங்களையும் கற்றுக்கொடுக்கிறது.
அவைநாயகன், கவிஞர், தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com