ஜூனில் நடந்த இந்தக் புத்தகக் காட்சி நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளது. கடும் வெயில், அனத்தும் வெக்கை, திடீரெனக் கொட்டும் பேய்மழை என எதுவாக இருந்தாலும், முற்றிலும் புதிய இடமாக இருந்தாலும் சரி, புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. பேருந்திலோ, ஸ்கூட்டரிலோ, காரிலோ வந்துவிடுகிறார்கள். புத்தக விற்பனையாளர்களும் அப்படித்தான். ஜனவரிக்குப் பதில் ஜூன் என்பதால் கடைகள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையில் எந்தக் குறைவும் இல்லை. விண்ணப்பித்த சிலருக்குக் கடைகள் கிடைக்கவில்லை.
ஜனவரியில்தான் சென்னையின் பருவநிலை ஓரளவுக்குச் சாதகமானதாக இருக்கும். வெயிலின் கடுமை குறைவு. இரவில் லேசாகக் குளிரும். கூடவே, பொங்கல் எனும் கலாச்சார நிகழ்வுடன் புத்தகங்களுக்கு இருக்கும் தொடர்பு நாட்பட்டது. பல விடுமுறை நாட்கள் சேர்ந்துவரும். எனவே, ஆண்டுக்கு ஆண்டு ஜனவரியில் நடக்கும் புத்தகக் காட்சி தொடரவேண்டும். அது பிரம்மாண்டமாக நடக்கவும் வேண்டும்.
ஆனால், அத்துடன் நின்றுவிடாது, ஆண்டின் பிற மாதங்களில் சென்னையிலேயே மேலும் சில புத்தகக் காட்சிகளை நடத்தலாம். உதாரணமாக, ஜூன் போன்ற வெப்ப மாதங்களில் நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் முழுதும் குளிரூட்டப்பட்ட அரங்கில் ஒரு புத்தகக் காட்சியை நன்றாகவே நடத்தலாம். அரங்குகள் சற்றே குறைவாகத்தான் இருக்கும். வருவோர் எண்ணிக்கையும் சற்றே குறையலாம். ஆனால், இதனால் பதிப்பாளர்களும் பயனடைவர், வாசகர்களும் பயனடைவர்.
சென்னைப் பெருநகர் நாளுக்கு நாள் விரிகிறது. ஆவடி, அம்பத்தூர், வேளச்சேரி, தாம்பரம், திருப்போரூர் என ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாத இடங்கள் அனைத்தையுமே நாம் சென்னை என்றுதான் சொல்கிறோம். இவை அனைத்துக்குமாக ஒரே ஒரு புத்தகக் காட்சி என்று சென்னைக்கு நடுவே எங்கு நடத்தினாலும் அது பலருக்கும் அசௌகரியமாகத்தான் இருக்கும். ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் கிடைக்காமல் போனால் வேறு எங்கு நடத்தலாம் என்று யோசித்துபோது, ஒய்.எம்.சி.ஏ. கொட்டிவாக்கத்தில் நடத்தலாம் என்ற யோசனை தரப்பட்டது. மெட்ரோ பணிகள் முடிந்த பின் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகம் மீண்டும் கிடைக்கலாம். இவற்றையெல்லாம் மனத்தில் வைத்தால், இரண்டு அல்லது மூன்று புத்தகக் காட்சிகளை சென்னையில் ஓராண்டில் நடத்தலாம். இவற்றை பபாசியே முன்னின்று செய்யலாம். இவை தவிர, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மேலும் சில புத்தகக் காட்சிகளை நடத்த உள்ளூர் அமைப்புகளுக்கு பபாசி உதவி புரியலாம்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எண்ணற்ற சிறுவர்களையும் இளைஞர்களையும் புத்தக அரங்குகளை நோக்கி ஈர்க்க முடியும். தமிழ்ச் சூழலில் வாசிப்பை மேலும் பரவலாக்க முடியும். புத்தக விற்பனையையும் கட்டாயம் பெருக்க முடியும்!
பத்ரி சேஷாத்ரி பதிப்பாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: badri@nhm.in