சிறப்புக் கட்டுரைகள்

நூலகம் தந்த நல்வாழ்வு!

செய்திப்பிரிவு

வாழ்க்கையை மாற்றிய வாசிப்பு!

வகுப்பு நேரத்தில் அதிகம் பேசியதால் என் வாழ்க்கை மாறியது என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மையில் அதுதான் நடந்தது. ஏழாம் வகுப்பில் அதிகம் பேசும் மாணவர்களின் பட்டியலில் என் பெயர் அடிக்கடி வந்தது. ஒருநாள் எங்கள் பள்ளியில் புதிய நூலகம் திறப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. நூலக ஆசிரியர், வாயாடிகளான நால்வரை நூலக வேலைகளுக்காக அழைத்துச் சென்றார்.

புத்தகங்களைப் பழைய கட்டிடத்திலிருந்து புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும். இதுதான் எங்களுக்குத் தரப்பட்ட பணி. முதன்முதலாக அந்த நூலகக் கட்டிடத்துக்குள் நுழைந்தால், எங்கு பார்த்தாலும் தூசு. அன்று வேலைக்கு இடையே ஈசாப் நீதிக் கதைகளும், அலிபாபாவும் 40 திருடர்கள் கதையும் என்னை ஈர்த்தன. வீட்டுக்கு எடுத்துப்போய் வாசித்தேன். நான் கதைப் புத்தகம் வாசிப்பதைப் பார்த்து அப்பாவுக்கு ஒரே ஆச்சரியம். கூட்டுறவுத் துறையில் கிளர்க்காகப் பணிபுரியும் அவர் கல்லூரி செல்லாதவர். ஆனால், தமிழ் மீது அத்தனை பிடிப்பு அவருக்கு. மேலும், பெரிய அளவில் வாசிக்க என்னை உற்சாகப்படுத்தியவரும் அவரே.

தேனி மாவட்டத்தில், கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள கெங்குவார் பட்டிதான் எனது சொந்த ஊர். பள்ளிப் படிப்பெல்லாம் கிராமத்தில்தான். தமிழ்வழிக் கல்வி பயின்று, குடிமைப் பணிக்கான தேர்வையும் தமிழிலேயே எழுதி, தமிழ்நாட்டிலேயே முதல் நபராகத் தேர்வானதற்கு அன்று நூலகத்தில் நுழைந்த கணம்தான் காரணம்!

ப்ளஸ் 1 படித்தபோது தமிழாசிரியர் சுந்தர் வகுப்பில் வைரமுத்துவின் ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ புத்தகத்தின் சிலேடையான சில வரிகளை மேற்கோள்காட்டிப் பேசினார். அந்தப் புத்தகத்தையும், வைரமுத்துவின் முதல் புத்தகமான ‘வைகறை மேகங்க’ளையும் வாங்கி வாசித்தேன். அது எனது வாசிப்புலகத்தின் புதிய ஜன்னலைத் திறந்தது. பின்னர், மதுரை வேளாண்மைத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண்மை படித்தபோது பத்திரிகைகள், பலதரப்பட்ட புத்தகங்கள் வழியே என் வாசிப்பின் வட்டம் விரிவடைந்தது.

கல்லூரிப் படிப்புக்குப் பின்னர் குடிமைப் பணித் தேர்வுகளுக்காகத் தயாரானபோது, ராமச்சந்திர குஹாவின் ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ வாசித்தேன். மிகுந்த உத்வேகம் தந்த புத்தகம் அது. தொடர்ந்து ஜெயமோகன், சி.சு.செல்லப்பா என்று பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளும் எனக்குள் படைப்பூக்கத்தைத் தந்தன. அரசியல், ஆளுமைகள், அரசு நிர்வாகம் என்று பல்வேறு வகைப் புத்தகங்களை வாசித்தேன். வேளாண்மை பட்டப் படிப்புக்குப் பின்னர், தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இறங்கினேன்.

குடிமைப் பணித் தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்தேன். திருப்பாவை, திருவாசகம், கம்பராமாயணம் போன்றவற்றை முழுமையாகப் படித்தேன். இன்றைக்கு அரசுப் பணிகளுக்கு இடையிலும் மனதை அமை தியாகவும் உயிர்ப்போடும் வைத்துக்கொள்ள இவை யெல்லாம் எனக்குக் கைகொடுக்கின்றன. மக்களின் பிரச்சினையை நம்முடைய பிரச்சினையாகக் கருதி, உள்ளார்ந்த அக்கறையுடன் அதற்குத் தீர்வு காண முயற்சி எடுக்கவும் உதவுகின்றன.

முனைவர் பட்ட ஆய்வின்போது எனது வழிகாட்டியாக இருந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். சிறை இலக்கியம் என்ற தலைப்பில் எனது ஆய்வு அமைந்தது. தமிழில் அரிதான இலக்கிய வகை அது. கிராமத்துப் பள்ளியில் படித்துவந்தாலும், பெரிய உயரத்துக்கு என்னைப் போன்றவர்களை இட்டுச் சென்றிருப்பது வாசிப்பு என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாக வாசிக்கும் போது நமது அறியாமை நமக்குத் தெரியவரும். அதுதான் வாசிப்பின் பெருமை!

வீ.ப.ஜெயசீலன்,

இ.ஆ.ப., உதவி ஆட்சியர், விழுப்புரம் மாவட்டம்

SCROLL FOR NEXT