குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலைப் புதிய நோக்குடன் அணுகவிருக்கிறது அமெரிக்கா. பலரும் நினைத்திருப்பதற்கு மாறாக, இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது. 1952 தேர்தலிலிருந்து நடந்த 16 தேர்தல்களைப் பார்க்கும்போது, 15 தேர்தல்களின்போது வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிந்த இரண்டு வாரங்களில் கருத்துக் கணிப்புகளில் யார் முன்னிலையில் இருக்கிறாரோ, அவர்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பைவிட சில புள்ளிகள் பின்தங்கியிருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், இன்னும் இரண்டு வாரங்களில் அந்த இடைவெளியை நிரப்பிவிடுவார் என்பதை இது காட்டுகிறது. தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, செப்டம்பர் 26-ல் ஹிலாரிக்கும் டிரம்புக்கும் இடையில் நடக்கப்போகும் நேரடி விவாதத்துக்கு முன்பாகவே, இருவரில் ஒருவர் முன்னிலைக்கு வந்துவிடுவார் என்று தோன்றுகிறது.
உலகளாவிய தாக்கம்
அமெரிக்கத் தேர்தலில், உலகின் பிற நாடுகளுக்குப் பங்கில்லாமல் இருக்கலாம். ஆனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் வடிவத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றம், உலக அளவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. எனவே, வெளியுறவுக் கொள்கையில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் பார்வையை ஆராய்வது அவசியம். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட்டபோது உலகமெங்கும் பரவியிருந்த உற்சாகத்தைப் பலர் மறந்திருக்க மாட்டார்கள்.
அமெரிக்காவைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான கொள்கை என்று ஒபாமா முன்வைத்த ஐந்து அம்சக் கொள்கை, அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் அவசியமான ஒன்றாகவே கருதப்பட்டது. ‘இராக்கில் போரைப் பொறுப்புடன் முடிவுக்குக் கொண்டுவருவது; அல்-கொய்தா மற்றும் தலிபான் ஆகிய அமைப்புகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது; பயங்கரவாதிகள் மற்றும் ஆபத்தான நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்களைப் பாதுகாப்பது; ஆற்றல் பாதுகாப்பைச் சாத்தியமாக்குவது; 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு உதவுவது’ ஆகியவையே அந்த ஐந்து கொள்கைகள். ஒபாமா முன்வைத்த கொள்கைகளை அங்கீகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்காவே முக்கியம்
அதிபர் தேர்தலின் தொடக்கக் கட்டத்தில், வெளியுறவுக் கொள்கை தொடர்பான தனது விரிவான முதல் உரையில், ஒபாமாவின் இந்த இலக்குகளையும், வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலாரி கிளின்டனின் செயல்பாடுகளையும் விமர்சித்துப் பேசினார் டொனால்டு டிரம்ப். அமெரிக்க ராணுவ வளங்கள் எல்லை மீறிப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், அமெரிக்காவின் நட்பு நாடுகள் பதிலுக்கு ஒன்றும் செய்வதில்லை என்றார். எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் தொடங்கி, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின்போது, இஸ்ரேல் காட்டிய எதிர்ப்பு வரை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “அமெரிக்காவை நம்ப முடியாது என்றே நமது நட்பு நாடுகள் நினைக்கின்றன. ரஷ்யா, சீனா போன்ற எதிரி நாடுகள் நம்மை மதிப்பதில்லை” என்று குறிப்பிட்டார். “இராக், லிபியா மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப் பினரின் ஆதிக்கத்தைக் குறைப்பதில் நமது நடவடிக்கைகள் உதவியிருக்கின்றன” என்று சொன்ன டிரம்ப், ‘அமெரிக்க நலன்தான் முக்கியம்’ என்பதே தனது நிர்வாகத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று அறிவித்தார்.
அதற்குப் பிறகு வந்த மாதங்களில், இந்தக் கொள்கையை அழுந்தப் பற்றியபடி, தனக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையிலான விவாதத்தை ‘அமெரிக்கத்துவ’த்துக்கும் உலகமயமாக்கலுக்கும் இடையிலான விவாதமாகவே மாற்றினார். இந்த விவாதத்தில் பல்வேறு பகுதிகள் உண்டு. குடியேற்றத்தைப் பொறுத்தவரை, தனது கெடுபிடியான நிலைப்பாட்டை டிரம்ப் உணர்த்தியிருக்கிறார். தனது உரையில் முஸ்லிம்களையும், மெக்ஸிகோ குடியேறிகளையும் குறிப்பிட்டுக் கடுமையாகப் பேசினார்.
அடுத்ததாக, நேட்டோ, தென் கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உள்ளிட்ட அமெரிக்காவின் கூட்டணி சக்திகளையும் நட்பு நாடு களையும் கடும் வார்த்தைகளில் விமர்சித்த அவர், அமெரிக் காவின் ராணுவ வளங்களை அவை இலவசமாகப் பயன் படுத்திக்கொள்வதாகக் குற்றம்சாட்டினார். தென் கொரியா விலும் ஜப்பானிலும் 60,000 அமெரிக்கத் துருப்புகளை நிறுத்தியிருப்பது, அந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவரவில்லை என்றும், மாறாக, வட கொரியா மேலும் மூர்க்கமாகவும், அணுசக்தி பலத்துடன் வளர்ந்துவருவதை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு அமெரிக்க வீரர்களைத் தள்ளியிருக்கிறது என்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழுக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.உள்நாட்டுக் குழப்பங்களின் அடிப்படையில் பிற நாடுகளில் அமெரிக்கா தலையிடுவதை டிரம்ப் உறுதியாக எதிர்க்கிறார்.
அனுபவம் கைகொடுக்குமா?
ஹிலாரி கிளின்டனைப் பொறுத்தவரை, வெளியுறவுக் கொள்கை தொடர்பாக, தான் பேசுவதை விடவும், வெளியுறவுத் துறையில் இதுவரையிலான தனது பங்களிப்பே போதும் என்று கருதுகிறார். அரசு நிர்வாகத்தில் அவரது அனுபவங்கள் டிரம்பின் அனுபவங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும். “மிஸ் யூனிவர்ஸ் போட்டி நடத்துவதற்கு ரஷ்யா சென்றதால், வெளியுறவுக் கொள்கையில் தனக்கு அனுபவம் இருப்பதாக டிரம்ப் சொல்கிறார்” என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் ஹிலாரி. உலக நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடு தொடர்பான டிரம்பின் கருத்துக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் ஹிலாரி, லிபியா விஷயத்தில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் நட்பு நாடுகள் விஷயத்தில் டிரம்பின் கருத்தை மறுத்துப் பேசிய ஹிலாரி, “நமது நட்பு நாடுகளுடன் இணைந்து பணிபுரியும்போது, நாம் வலுவான நாடாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டிருக்கும் ஒரு தலைவர்தான் உங்களுக்குத் தேவை” என்றார். அதேபோல், குடியேற்றத் தடை, மெக்ஸிகோ எல்லையில் எல்லைச் சுவர் என்பன போன்ற டிரம்பின் திட்டங்கள் அமெரிக்கத்தன்மை இல்லாதவை என்று குறிப்பிட்ட ஹிலாரி, குடியேறிகளின் குடியுரிமைக்கு வழிவகுக்கும் வகையில், குடியேற்றக் கொள்கையில் விரிவான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதிகாரம் தரும் நிதானம்
அதிபர் பதவிக்கான போட்டி மற்றும் அமெரிக்காவின் கொள்கையில் அதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி உலகம் எந்த அளவுக்குக் கவலைப்பட வேண்டும்? வெளியுறவுத் துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்டவர், முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி என்ற வகையில் உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஹிலாரி கிளின்டனுடன் நல்ல புரிதல் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மாறாக, கடந்த ஓராண்டுக்கு முன்னர், டிரம்ப் என்றால் யாரென்றே தெரியாது. அவரது சில கருத்துகள் அபத்தமானவை. அவற்றைப் புரிந்துகொள்ள கடும் பிரயத்தனம் தேவை.
மேலும், உலகமயமாக்கலை விட அமெரிக்கமயம்தான் முக்கியம் என்று டிரம்ப் வலியுறுத்துவதும் சர்வதேச அளவில் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயம். உலகமயமாக்கலுக்கு எதிரான நிலைப்பாடு என்பது தற்போது உலகளாவிய போக்காக, தீவிர வலதுசாரிகளும் தீவிர இடதுசாரிகளும் சந்திக்கும் புள்ளியாக - இருக்கிறது. ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று பிரிட்டன் மக்கள் வாக்களித்ததை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். சொல்லப் போனால், உலகின் பல நாடுகள் வலதுசாரி அரசைத் தேர்ந்தெடுத்துவருகின்றன. மேலும், குடியேற்றம், வர்த்தகம், வெளிநாடுகளில் ராணுவத் தலையீடு போன்ற விஷயங்களில் பல நாடுகளின் அரசுகள் பழைமைவாத நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
இறுதியாக, ஜனநாயக நாடுகளின் வேட்பாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பதவிக்கு வந்த பின்னர், அவர்களின் ஆவேசமான தேர்தல் முழக்கங்களை அவர்கள் வகிக்கும் பதவியே மட்டுப்படுத்திவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. இராக், லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் தலையீடு, அதிகபட்ச விலை கொடுக்க வேண்டிவந்ததை ஹிலாரி கிளின்டன் அருகில் இருந்து கவனித்திருக்கிறார் என்பதால், எதிர்காலத்தில் அதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ஆழமாகச் சிந்திப்பார். அதேபோல், வங்கதேசத்துடனான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதன் மூலம், சட்டவிரோதக் குடியேற்றங்கள் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தீர்வு கண்டதைப் போல், மெக்ஸிகோவுடனான விவகாரங்களை டிரம்பும் கையாளக் கூடும்!
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
‘தி இந்து’ (ஆங்கிலம்)