இந்த வாக்கியங்களைப் பாருங்கள்:
“எனக்குக் கிடைக்குமா?” என்று அவன் கேட்டான்.
தனக்குக் கிடைக்குமா என்று அவன் கேட்டான்.
முதல் உதாரணத்தில், ஒரு பேச்சு அது வெளிவந்த வடிவில் நேரடியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இரட்டை மேற்கோள் குறிகளும் கேள்வியின் முடிவில் கேள்விக்குறியும் உள்ளன. இது நேர்க் கூற்று.
இரண்டாவது வாக்கியம் அயல் கூற்று. கேள்வியானது அதை நமக்குச் சொல்பவரின் பார்வையில் மாறி, வேறு வடிவம் எடுக்கிறது. எனக்கு என்பது தனக்கு என்று ஆவது இதனால்தான்.
“நீ வராதே” என்று அவன் என்னிடம் சொன்னான் என்பதை நாம் அயல் கூற்றாகச் சொன்னால், அவன் என்னை வராதே என்று சொன்னான் என்று சொல்வோம். நேர்க் கூற்றுக்கும் அயல் கூற்றுக்கும் உள்ள வித்தியாசம் இது.
அயல் கூற்றில் மேற்கோள் குறிகள் தேவையில்லை. அதுபோலவே கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தேவையில்லை. ஆனால், ஒரு சிலர் அயல் கூற்றிலும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாக, தனக்குக் கிடைக்குமா? என்று அவன் கேட்டான் - என எழுதுவதைக் காண முடிகிறது. இது தவறு. இங்கே கேள்விக்குறி தேவையில்லை.
“எவ்வளவு பழைய கட்டிடம் இது!” என்று என் தங்கை வியந்தாள்.
இதை அயல் கூற்றில் எழுதும்போது,
எவ்வளவு பழைய கட்டிடம் அது என்று என் தங்கை வியந்தாள்.
என்று எழுதினால் போதும்.
“உனக்குப் பழச்சாறு வேண்டுமா?” என்று அம்மா என்னைக் கேட்டார்.
எனக்குப் பழச்சாறு வேண்டுமா என்று அம்மா என்னைக் கேட்டார்.
இரண்டு உதாரணங்களிலும் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனித்திருப்பீர்கள். இவை எல்லாம் ஏட்டில் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டியவை அல்ல. பேச்சில் இயல்பாகவே இப்படித்தான் அமைகின்றன. “நீயும் வர்றியா?” என்று ஒருவர் நம்மைக் கேட்டிருப்பார். அதை நாம் இன்னொருவரிடம் சொல்லும்போது, என்னையும் வர்றியான்னு கேட்டான் என்று சொல்வோம்.
முன்னிலை தன்மையாவது உரையாடலில் இயல்பாக நடக்கிறது. எனவே, பேசும் விதத்தை அடியொற்றியே தன்மை, முன்னிலை, படர்க்கை மாற்றங்களையும் அங்கு, இங்கு, அது, இது என்பன போன்ற மாற்றங்களையும் நேர் - அயல் கூற்றுகளில் நாம் எளிதாகக் கொண்டுவந்துவிடலாம்.
ஆனால், கேள்விக்குறி, மேற்கோள், ஆச்சரியக்குறி போன்றவை எழுத்துக்கே உரியவை. அயல் கூற்றில் இவற்றைத் தவிர்த்தே எழுத வேண்டும். உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான் என எழுதுவதில் பிழை இருப்பது மட்டுமல்ல, அது வாசிப்பின் சரளத்தன்மையையும் பாதிக்கிறது.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in