சிறப்புக் கட்டுரைகள்

மாணவர் ஓரம்: பாறைகளாக மாறிய பாக்டீரியா கிருமிகள்!

செய்திப்பிரிவு

மனிதர்கள் உருவாவதற்குப் பல கோடி வருடங்களுக்கு முந்தைய தொல்லுயிர்ப் படிமங்களை கிரீன்லாந்து நாட்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 370 கோடி வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை அவை. இதுவரை கிடைத்ததிலேயே பழமையானவை. கிருமிகள் அப்படியே பாறைகளாக உறைந்து தொல்படிமங்களாக மாறியுள்ளன.

காற்று மாசுபடுதல் உள்ளிட்ட பல காரணங்களால் உலகின் வெப்பநிலை மாற் றங்கள் நிகழ்கின்றன. உலகத்தைக் கவலைப்பட வைக்கும் இந்த மாற்றங்கள், மறுபக்கத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழியையும் திறக்கிறது.

வெளித் தோற்றத்தில் பாறைகளாகத் தோன்றுகிற இவை, உண்மையில் அடுக் கடுக்கான பாக்டீரியா கிருமிகளின் கட்டமைப்புகள். இந்த பாறை படிமங்களை ஸ்ட்ரோமாடோலிட்ஸ் (stromatolites) என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். 370 கோடி வருடங்களுக்கு முன்னால் பூமியில் உயிர்கள் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளது உண்மைதான். தற்போது கிடைத்திருப்பது அந்தக் கணிப்புக்கான ஆதாரம். அதுதான் இந்த ஆய்வின் முக்கியத்துவம்.

220 கோடி வருடங்களுக்கு முந்தைய படிமங்களும், 350 கோடி வருடங்களுக்கு முந்தைய படிமங்களும் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்கிறது ‘ஹப்பிங்டன் போஸ்ட்’ இதழ். தற்போது கிடைத்துள்ள படிமங்களும் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள தொல்படிமங்கள் போலவே இருக்கின்றன. ஆனால், அவற்றில் இல்லாதவகையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளில் புடைப்புகள் உள்ளன. அவை இவற்றின் பழமையை நிரூபிக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலென் நட்மென் எனும் ஆய்வாளர், ‘நேச்சர்’ இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்தப் படிமங்களை இன்னும் ஆழமாக ஆய்வுசெய்தால் பூமியில் உயிர்கள் தோன்றியபோது எப்படி இருந்தன என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைக்கும். மேலும், செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்ற ஆய்வுக்கும் இந்தப் பாறைகள் தரும் தரவுகள் உதவும் என்கிறார்.

SCROLL FOR NEXT