காமினி பொன்சேகா - இலங்கை திரை உலகில் மிகவும் பிரபலமான இயக்குநராகவும் நடிகராகவும் இருந்தவர். அரசியலிலும் முக்கியப் புள்ளியாக இருந்தவர். வடகிழக்கு மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்தார். அவர் ஒருமுறை இந்தியா வந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
காமினி தங்கள் நாடு எப்படி இருந்தது என்பதைப் பற்றி எங்களிடம் விளக்கினார்.
“எங்கள் நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு. எங்கள் மக்களும் இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். உங்கள் ஊரில் இலுப்பமரம் உண்டு என்பது எனக்குத் தெரியும். எங்கள் ஊரிலும் உண்டு. எங்கள் நாட்டு இலுப்பம் விதையும் சரி, மரங்களும் சரி பிரம்மாண்டமானவை. விதை கிட்டத்தட்ட ஒரு விரல் நீளம் இருக்கும்.
எங்கள் மக்கள் அதனைப் பொறுக்கி காயப்போட்டு வைத்திருப்பார்கள். வீட்டில் மணலைக் குவித்து காய்ந்த இலுப்பம் விதைகளை அதன் கூர்மையான பகுதி மேலே தெரியுபடி மணல் குவியலில் நட்டுவிடுவார்கள். அதன் நுனியைக் கிள்ளி விட்டு நெருப்புப் பற்றவைத்தால் பிரகாசமாக எரியும். அதுதான் எங்கள் குடிசைகளின் விளக்குகள்.
ஒரு விதை ஒரு மணி நேரம்கூட எரியும். ஒரு வீட்டுக்கு நான்கு விதைகள் இருந்தால் இரவை ஓட்டிவிடலாம். காசு செலவும் கிடையாது. எங்கள் நாட்டுக்கு ஐரோப்பியர்கள் வந்தார்கள். விளக்கு எரிவதைப் பார்த்த அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். விதைகளை ஆராய்ந்தார்கள். ‘எல்லாம் சரிதான்.. ஆனால் விளக்கின் ஜ்வாலையால் குடிசைகள் பற்றி எரியும் வாய்ப்பு அதிகம். ஆகையால், உங்களுக்குப் பாதுகாப்பான விளக்குகளைத் தருகிறோம்’ என்றார்கள். கண்ணாடி சிமினி போட்ட மண்ணெண்ணெய் விளக்கைத் தந்தார்கள். பின்னர் அரிக்கேன் விளக்கைக் கொடுத்தார்கள்.
இலுப்பம் விதையை அவர்கள் ஊருக்கு எடுத்துச் சென்றார்கள். அதைச் சோப்பாக மாற்றி எங்களுக்குக் குளிக்கக் கொடுத்தார்கள்.
நாங்கள் பாதுகாப்பான மண்ணெண்ணெய் விளக்குகளோடும் சோப்புக் குளியலோடும் வாழ்கிறோம். மண்ணெண்ணெய்க்கும் சோப்புக்கும் சிம்னிக்கும் திரிக்கும் காசு கேட்கிறார்கள் .கொடுக்கிறோம்.’’
காமினி ஃபொன்செகா தன் போக்கை முடித்துக்கொண்டார். யாரும் எதுவும் பேசவில்லை. நிசப்தமாக இருந்தது.
தொடர்புக்கு: kashyapan1936@gmail.com