வெனிசுலாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கு, பல்வேறு வன்முறைத் தந்திரங்களை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தியிருக்கின்றன. 2002-ல் ஹியூகோ சாவேஸின் ஆட்சி, 47 மணி நேரத்துக்குக் கவிழ்க்கப்பட்ட சம்பவத்தில், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.
ஆனால், பிரதானமான ஊடகங்களில் இந்த வன்முறை வரலாற்றில் எதிர்க்கட்சிகளின் பங்கு பெரும்பாலும் இடம்பெறுவதேயில்லை. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை எதிர்க்கட்சிகள் கொண்டாடுவதும் கவனம் பெறுவதில்லை. சமீபத்தில், அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக, தலைநகர் காரகாஸில் நடந்த போராட்டங்களைப் பற்றி ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘பி.பி.சி.’ போன்ற பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்க் கட்சிகள் அமைதியான முறையில் போராடின என்றே தெரிவித்தன.
இந்தப் போராட்டங்களைப் பற்றிய பிரதான ஊடகங்களின் செய்திகளின் சாராம்சம் இதுதான்: ‘எதிர்க்கட்சிகள் அமைதியானவை. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அச்சுறுத்தல் இருக்கிறது எனும் வெனிசுலா அரசின் அச்சம் நம்பக் கூடியதல்ல’.
ஆனால், பிரதான ஊடகங்கள் சொல்லும் விஷயங்களைத் தாண்டியும், கவலைப்படுவதற்கு வெனிசுலா அரசுக்கு எல்லா நியாயங்களும் இருக்கின்றன என்பதை, எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து வெளிவரும் அறிக்கைகள் காட்டுகின்றன.
2012, 2013 அதிபர் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக இருந்த ஹென்ரிக் கேப்ரில்ஸ், “அரசியல் சாசனத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டுமா அல்லது நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று கடந்த மே மாதம் ராணுவத்தை அறிவுறுத்தினார்.
நிக்கோலஸ் மதுரோ அரசைத் தூக்கியெறிய வேண்டும் என்று ராணுவத்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கும் அறிக்கைகளை ஜீஸஸ் டோர்ரியல்பா போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து இதுபோன்ற அறிக்கைகள் வெளிவந்தால், அந்நாடுகளின் அரசு அதிகாரிகள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
ஊடகங்கள் சொல்வதைப் போல, எதிர்க்கட்சித் தலைவர்கள் உண்மையிலேயே ‘அமைதி’யானவர்கள்தானா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், வன்முறைச் சம்பவங்களைப் பற்றி அவர்கள் சொன்ன கருத்துகள் என்ன என்று பார்க்க வேண்டும். 2002 ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவம் போன்ற நிகழ்வுகள் தொடர்பாக அவர்கள் வருத்தமோ குற்ற உணர்ச்சியோ காட்டவில்லை என்றும், மாறாக இந்நிகழ்வுகளை வெளிப்படையாக அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் தெரியவரும்.
வெனிசுலா அரசு தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஊழலைக் கட்டுப்படுத்தத் தவறுவது, நிதிநிலைமையை முறையாகக் கையாளாதது போன்ற காரணங்களால் இந்த அரசு நிச்சயம் விமர்சனத்துக்குரியதுதான்.
அரச வன்முறை நிகழ்வதும் கண்டனத்துக்குரியதுதான். ஆனால், ஊடகங்கள் நம்மிடம் விற்கும் கதைகள், எதிர்க்கட்சிகளுக்கு வரம்பற்ற அனுமதியை வழங்குகின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!
வெனிசுலா இணைய இதழ் | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்