சரக்குப் போக்குவரத்தில் நாடு முழுவதும் இயங்கும் லாரிகள் 75 லட்சம். இந்தத் தொழிலில் லாரி உரிமையாளர்கள் ஐந்து லட்சம் பேரும், லாரி உற்பத்தி மற்றும் கட்டு மானத்தில் 25 லட்சம் பேரும் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு இந்தத் தொழிலின் மிகப்பெரிய சவால், சுங்கச்சாவடிக் கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வு.
சுங்கச்சாவடிக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளை
சாலையைப் பயன்படுத்துவதற்கான சுங்கச் சாவடிக் கட்டணத்தை எடுத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு, தமிழகத்திலிருந்து டெல்லி செல்வதற்கு ஆகும் டீசல் செலவில் மூன்றில் ஒரு பங்கு சுங்கச்சாவடிக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது. மத்தியத் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோது, பொருளாதார மயமாக்கலைச் சார்ந்து சுங்கச்சாவடிக் கட்டண உயர்வு அமையும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சுங்கச் சாவடிக் கட்டணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
ஆனால், திட்ட மதிப்பீடு என்ன? அதற்காக எத்தனை ஆண்டுகளுக்குச் சுங்கச் சாவடிக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்? வசூல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு? வசூல் செய்யப்பட வேண்டிய தொகை எவ்வளவு? ஆகிய விவரங்கள் வெளியே தெரிவதில்லை. சீனா உள்ளிட்ட நாடுகளில் சுங்கச் சாவடி மையங்களிலேயே மேற்கண்ட விவரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இங்கு நாடு முழுவதும் பல இடங்களில் முறைகேடாகச் சுங்கச் சாவடி மையங்கள் இயங்கு கின்றன. ஆந்திராவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடாகச் செயல்பட்ட சுங்கச் சாவடியை அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அம்பலப்படுத்தியது. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ. 2.25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடிக் கட்டணம்
இதற்கெல்லாம் தீர்வாக ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், தற்போது சுங்கச் சாவடிகளில் நாள்தோறும் வசூலாவதைவிடக் கூடுதல் கட்டணம் வசூலாகும். எரிபொருள், நேர விரயமும் தடுக்கப்படும். காங்கிரஸின் சோனியா, ராகுல் ஆகியோரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையைத் தெரிவித்தோம். ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
டீசல் விலை உயர்வு
இந்தத் தொழிலின் அடுத்த பிரச்சினை டீசல் விலை உயர்வு. டீசல்மீது கல்வி வரி, கார்கில் போர்வரி உட்பட 40% வரி விதிக்கிறார்கள். டீசல் விலை மாதந்தோறும் 50 பைசா வீதம் உயரும் நிலையில், வரி 12 % சேர்ந்து அது 62 பைசாவாக விலை உயர்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், டீசல் விலை உயர்கிறது. அதேசமயம், அதன் மீதான வரி விதிப்புகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தினாலே எங்கள் சுமை குறையும். ஓட்டுநர் உரிமம் பெற எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு படிக்காதவர்கள் பலர் இருக்கின்றனர். 40 வயதில் போய் எட்டாம் வகுப்புப் படிக்க முடியுமா? எனவே, ஓட்டுநர் உரிமத்துக்கான தகுதியாக, தாய்மொழி பேசுவதையும் எழுது வதையும் நிர்ணயிக்க வேண்டும். இந்த நடைமுறைகூட சில மாநிலங்களில் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். இந்தத் தொழிலில் ஈடுபட்டி ருப்பவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்துக்கும் அதிகம் என்பதால், வரும் தேர்தலில் எங்கள் பிரச்சினைகளுக்காக உரக்கக் குரல்கொடுப்போம்.
என்.பி.வேலு, தென் மண்டலத் துணைத் தலைவர், அகில இந்திய மோட்டார்