ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி அந்தக் கட்சி வட்டாரத்தில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “உண்மையிலேயே பலமான கட்சி என்றால், டெல்லியில் எங்களுடன் மோதிப்பாருங்கள்” என்று அந்தக் கட்சியைச் சவாலுக்கு அழைத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இரண்டாவது இடத்தில் இருந்த ஆஆக, அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சியமைத்தது. லோக்பாலை நிறைவேற்ற முடியாததால் கடந்த பிப்ரவரி மாதம் அவர் பதவிவிலகினார். அதற்குப் பிறகு, இன்று வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிதான் நடைபெறுகிறது.
பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பதுகுறித்து, கடந்த மாதம் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாஜகவுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக நஜீப் ஜங் மீது ஆஆக புகார் தெரிவித்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஆட்சியமைக்கும் வாய்ப்பு பாஜகவுக்குத்தான் இருந்தது. எனினும், “எங்களுக்கு மூன்று உறுப்பினர்கள் குறைவாக இருப்பதால் எங்களால் ஆட்சியமைக்க முடியாது” என்று அந்தக் கட்சி மறுத்துவிட்டது. இதற்கிடையே, பாஜகவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பிக்களாகிவிட்டனர்.
அரசியல்ரீதியாக காங்கிரஸ் வலுவிழந்து நிற்கும் நிலையில், தங்கள் கட்சியை பலப்படுத்தவும் ஆஆக திட்டமிட்டிருக்கிறது. இடையில், கட்சி மாறுவது தொடர்பாகத் தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்குப் பணம் கொடுக்க பாஜக முயல்வதாகப் பரபரப்பான குற்றச்சாட்டை ஆஆக முன்வைத்தது.
சமீபகாலமாக, பாஜக அரசின் செயல்பாடுகளில் குறைகண்டுபிடித்து விமர்சனம் செய்யும் வேலைகளில் காங்கிரஸைவிட முனைப்புடன் செயல் படுவதும் ஆஆகதான்.
சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித் ததை ஆஆக கடுமையாக விமர்சித்தது. ‘நாட்டு மக்களுக்கு இந்த ஆட்சி செய்யும் முதல் நம்பிக்கைத் துரோகம் இது’ என்று சில நாட்களுக்கு முன் காட்டமாக அறிக்கையும் வெளியிட்டது. ஊழலை ஒழிக்கவும், வெளி நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்கவும் அண்ணா ஹசாரே தலைமையில் அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர் நடத்திய மாபெரும் போராட்டங்கள், ஊழல் புகார்களில் விழிபிதுங்கிக்கொண்டிருந்த காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தியதுடன், பாஜகவின் எழுச்சிக்கும் காரணமாக அமைந்தன.
“அப்போது கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிய பாஜக, இப்போது பல்டி அடிப்பது ஏன்?” என்பது ஆஆக-வின் கேள்வி. அதேபோல், இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பாக, டெல்லியில் இரு கட்சிகளுக்கும் இடையில் புகைப்படப் போரே நடந்துகொண்டிருக்கிறது. இரு கட்சிகளின் எம்எல்ஏக்களின் தொகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் இடங்களின் படங்களை வெளியிட்டுப் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றனர்.
இந்நிலையில்தான், டெல்லியில் தேர்தலைச் சந்திக்குமாறு பாஜகவைச் சீண்டிவருகிறது ஆஆக. அதே சமயம், “இரு மாநில வெற்றிகளால் பலத்தை நிரூபித்திருக்கிறோம். டெல்லியில் தேர்தலைச் சந்திக்கத் தயார்” என்று டெல்லி மாநில பாஜக பொதுச் செயலாளரும் தெற்கு டெல்லி எம்பியுமான ரமேஷ் பிதூரி தெரிவித்திருக்கிறார். ஆனால், பாஜகவின் பெரிய தலைகள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in