இளங்கலை தமிழ் பாடத்திட்டத்திலிருந்த புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பில் இருந்து இரண்டு கதைகளை சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக நீக்கியுள்ளது. பொன்னகரம் மற்றும் துண்பக்கேணி ஆகிய கதைகள் தலித் மக்களை மோசமாகச் சித்தரிப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் கல்வி அலுவல் குழுவினர் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்பாக தமிழின் முக்கியமான விமர்சகர்களில் ஒருவரும் நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமனின் கட்டுரை இது.
இயற்கையில் மானாகப் பிறந்த பிறப்பு மான் இனத்தின் உயிர் வாழ்வைத் தீர்மானிக்கிற மாதிரி, விலங்குண்ணியாகப் பிறந்த பிறப்பு அவ்விலங்கினத்தின் உயிர் வாழ்வைத் தீர்மானிக்கிற மாதிரி, மனிதரின் சாதிப் பிறப்பு அந்தந்தச் சாதிக் குழுவின் வாழ்க்கையைச் சாதிய ஏறுவரிசை நிர்ணயிக்கிறபடி வாழத் தீர்மானித்து வந்துள்ளது. விலங்கு நிலை தொடர்கிறது. முழு மனிதராக மாற்றம் நடைபெறவில்லை.
இத்தகைய சாதி உறவுகளில் புலப்படுகின்ற மிருகத் தன்மைகளைப் படைப்புவழி அணுகி ஆராய்ந்த புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளில் பாதிக்கப்பட்ட சாதி மக்கள் அவமான உணர்வு பெறவோ அல்லது பாதித்த சாதி மக்கள் குதூகலமடையவோ எவ்விதத் தடயங்களும் இல்லை. சிறந்த இலக்கிய ஆக்கங்களின் பொதுப்பண்பு இது. இன்னும் சொல்லப்போனால் அபத்தமான இந்தச் சாதித் தகுதிக்காகச் சக மனிதரை ஒடுக்கிய சக்திகள் வெட்கப்படுகிற அளவிற்கு அவர் படைத்துள்ளார்.
சாதியத்தின் அபத்தத்தைப் போட்டு உடைப்பது சிறந்த கலை, இலக்கியக்காரர்களின் கடமை. ஏனெனில் அது மானுடத்திற்கு முற்றிலும் பாதகமானது.
இங்கே எந்த ஒன்றைப் பற்றிப் படைத்தாலும், சாதி வராமல் இருக்காது. இருக்கவும் முடியாது. வரத்தான் செய்யும். சாதி நீடிக்கும் வரை வரும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று தோளை உயர்த்துவது ‘பூனைக்கண்மூடி'ச் சித்தாந்தமே. நடைமுறை விவகாரம் பற்றிப் படைப்பில் பேசுவது ஒன்றும் பாவமில்லை.
சென்னைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப்பாடத் திட்டக் குழுவின் பட்டியலில் உள்ள புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி' (1935இல் வெளிவந்தது) என்ற சிறுகதையில் தலித்துகளின் அவலங்களும் மேற்சாதியரால் பட்ட கொடுமைகளும் விரிவாகச் சித்திரமாகியுள்ளன. இன்னொரு கதை ‘பொன்னகரம்' (1934), அன்றைய மதராஸ் பற்றியது. இக்கதையில் நோயாளி கணவனைப் பசியாற்ற அவன் மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுவது பேசப்படுகிறது. இரவில் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் மதராஸ் பட்டினத்தின் இருண்ட சந்துகளில் கற்பு விலை போவதைப் பற்றிப் பேசும் புதுமைப்பித்தன் கதை முடிவில் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்!' என்று விளாசுகிறார்! பிறப்பால் பெண்ணாகப் பிறந்தவளுக்குக் கற்பு வேலிபோட்டு உடலை விலை பேசும் கலாச்சார ஈனத்தைப் பற்றி அவரைப் போல வெளிப்படையாகப் பேச யாருக்கும் துணிவில்லை!
‘துன்பக் கேணி' கதை இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் கூலிகளாகப் பஞ்சம் பிழைக்கத் தள்ளப்பட்டவர்களில் தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றியது. அந்தப் பெண்ணைக் ‘கெடுத்த' ஸ்டோர் மேனேஜர் அவளுடைய மகளையும் பலவந்தப்படுத்திக் ‘கெடுத்ததை' அறிந்ததும் பத்ரகாளியாகிறாள். ‘என்னைக் கெடுத்த பாவி என் மகளையும் குலைத்தாயே' எனக் கூவி அவனது நெற்றிப் பொருத்தில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லுகிறாள். யதார்த்தத்தில் இப்படி அந்தக் காலத்தில் (1935) நடக்குமோ இல்லையோ, ஆனால் கதையின் முடிவில் புதுமைப்பித்தன் பொறுக்க முடியாமல் இயற்கையான நியாயத்தை வழங்கியுள்ளார். இது அவரது படைப்புக் கலைக்கு ஒவ்வாத ஒன்று. வேறு கதைகளில் அவர் இப்படி ஆவேசப்பட்டு முடிவைத் தாமே வழங்கியதில்லை. இங்கே ‘துன்பக் கேணி'யில் தன்னையும் தன் மகளையும் கெடுத்தவனைத் தலித் பெண் கொலை செய்வதில் உச்சத்தைத் தொட்டுவிட்டது.
ஓர் இலக்கியப் படைப்பு எனும் கலைப்புனைவை எப்படி அணுகுவது என்பது வாசகன் கையில் உள்ளதேயன்றி, அதனை ஆக்கியோன் கையில் இல்லை. வாசகரின் பன்முக வாசிப்பிற்கு இடம் இருக்கிறது. இந்த வாசிப்பை உயர்தளத்திற்கு இட்டுச் செல்லுகிற பொறுப்பு விமர்சகருக்கம், கல்வியாளர்களுக்கும், ஊடகக்காரர்களுக்கும் கற்பிக்கும் ஆசியர்களுக்கும் உண்டு.
இந்த மலிவான செயலால் பாடப்புத்தகக் குழு சாதியத்தைக் கடந்து போகும் விடுதலையை, அதன் இலக்கினைச் சென்றடைய இயலாது. பாடத்திட்டக் குழுவிலுள்ள ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், பல்கலைக்கழகத் துணை வேந்தர்க்கும் நெஞ்சில் உரமும் செயலில் நேர்மையும் மற்றோரைவிட அதிகம் இருக்க வேண்டும்.
தலித்துக்களுக்கு ஒரு வார்த்தை: தலித் மாணவர்கள் சாதிய மனோபாவத்திலிருந்து முதலில் விட்டு விடுதலையாக வேண்டும். அப்போதுதான் போக வேண்டிய பாதை துலக்கமாகத் தெரியும். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது உரிமைக்குக் குரலிடும் போராட்டங்களில் சாதி அணியாக பாதிக்கப்பட்ட மனித அணியாகத் திரளவும் வேண்டும். அதே சமயத்தில் சாதி ஒழிப்பு என்கிற இலட்சியத்தை நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.
வேதங்களும் யாகங்களும், காவியங்களும் கோபுரங்களும், அறங்களும் கலைகளும் ஓங்கி வளர்ந்த இந்த 'புண்ணிய' புமியின் சாதியக் கேடுகளை மானுட நோக்குள்ள ஒரு படைப்பாளி அம்பலப்படுத்தவே செய்வான். அப்பேர்ப்பட்ட புதுமைப்பித்தனுடைய ‘துன்பக் கேணி'யைப் பாடமாகப் படிப்பதற்கு ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சங்கடப்பட ஏதுமில்லை. சங்கடங்கள் ஊட்டிவிடப்படுகின்றன. வருங்காலத்தை வளமாக்கும் மாணவர்கள் இன்றைய இரட்டை வேடமிடும் சாதி அரசியலை உதறத் தயங்கக் கூடாது. தங்களுடைய சமூக கலாச்சார வரலாற்றைக் கற்பது மாணவர்களுக்கு இன்றியமையாதது. இதற்குப் படைப்பிலக்கியம் உதவும். கற்பிதமான கதைகளால் தலித்துக்கள் மீது சுமத்தப்பட்ட கறைகள் நீங்காது. கற்பிதமான மாற்றுக் கதைகளால் தலித்துக்களின் விடுதலை அமையாது.