உலகத்தில் மதம், இலக்கியத்துக்குப் பிறகு அதிக புத்தகங்களும் கட்டுரை களும் எழுதப்பட்டது பங்கு முதலீடு பற்றிதான் இருக்கும். பங்கு முதலீட்டில் என்ன செய்ய வேண்டும் என்று பலர் எழுதியதைப் படித்து முதலீடு செய்து, நஷ்டம் அடைந்தவர்கள் அதிகம். அதைவிட பங்குச் சந்தையில் என்ன செய்ய வேண்டாம் என்று எழுதினால் நல்லது.
வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் முழு புரிதலோடு செய்யுங்கள். இது பங்கு முதலீட்டுக்கு மிக அவசியம். ஒரு பங்கு முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கான காரணங்களை நீங்கள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.
முகவரின் ஆலோசனையால் எனக்கு நஷ்டம் வந்தது என்று நீங்கள் கூறினால், முகவர்களை மாற்றிக்கொண்டே இருப்பீர்களே தவிர, லாபத்தைப் பார்க்கமாட்டீர்கள். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, உங்களின் சுய சிந்தனையில் செயல்படுங்கள்.
பங்குகளை எப்படி வாங்குவது, விற்பது என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு பங்கின் விலையை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன, அவை எப்படி விலையின் போக்கை விளக்குகின்றன என்பது தெரியவேண்டும். ‘Accountancy is the language of business’ என்று பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதித்த உலகப் பணக்காரர்களில் ஒருவரான Warren Buffett கூறுவார்.
வியாபார நிறுவனங்களின் கணக்கு வைக்கும் முறை, அவர்களின் ஆண்டு அறிக்கை, பொருளாதாரம் என பல செய்திகளை படித்து தெரிந்து முதலீடு செய்ய வேண்டும். இது எதுவுமே எனக்குத் தெரியாது, புரியாது என்றால், நீங்கள் நல்ல வியாபாரி இல்லை. எனவே, பங்குச் சந்தையை மறந்துவிடுங்கள்.
ஒரு சாதாரண முதலீட்டாளர் நீங்கள். உங்களுக்கும் பங்குச் சந்தைக்கும் இடையே ஒரு முகவர் தேவை. உங்கள் முகவர் நேர்மையானவராக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நிறுவனம் நேர்மையாக நடத்தப்படவில்லை என்றால் நிச்சயமாக அது ஒரு நாள் கீழே விழும். அப்படிப்பட்ட நிறுவன பங்கினை வாங்காமல் இருப்பது நல்லது.
குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்த்து பங்கு முதலீடு செய்யாதீர்கள். ஒரு பங்கின் விலை குறுகிய காலத்தில் அதிகமாக உயர்கிறது என்றால், அது கீழே விழ அதிக நேரம் பிடிப்பதில்லை. சிறிய லாபம், நீண்ட காலத்துக்கு தொடர்ந்தால், உங்கள் செல்வம் பன்மடங்கு அதிகரிக்கும்.
பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவது கடினம். அதைவிட பிரச்சினைக்குள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எனவே, கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் இருங்கள். அவசியத் தேவைக்காக இருக்கும் பணத்தை, அத்தேவை ஏற்படும் வரை சிறிது காலத்துக்கு பங்கில் முதலீடு செய்து வைக்கலாமே என்ற ஆசை உங்களுக்கு வரவே கூடாது.