சிறப்புக் கட்டுரைகள்

பரந்த வெளியில் பயணம் செய்வோம்

அரவிந்தன்

ஹெர்மன் ஹெஸ் எழுதிய சித்தார்த்தா என்னும் நாவலின் முக்கியப் பாத்திரமான சித்தார்த்தன் ஆன்மிகத் தேடல் கொண்டவன். எதிலும் எளிதாகத் திருப்தியுற மறுப்பவன். கேள்விகளும் தேடலும் நிறைந்தவன். ஞானத்தைத் தேடி, வாழ்வின் மெய்ப்பொருள் தேடி அவன் பல இடங்களுக்கும் சென்றான். பல குருமார்களைச் சந்தித்தான். பல உபதேசங்களைக் கேட்டான். பல்வேறு அனுபவங்களுக்கு ஆளானான். கடைசியில் ஒரு நதியின் மடியில் அவனுடைய தேடல் முடிவுக்கு வந்தது. நதி அவன் கேள்விகளுக்குப் பதில் சொன்னது.

நதியால் பதில் சொல்ல முடியுமா என்ற கேள்வி எழலாம். இதற்குத் தர்க்கம் சொல்லும் விடை ஒன்றே ஒன்றுதான்: பேசாது. ஆனால், உளவியல்ரீதியாகவும் ஆன்மிகரீதியாகவும் இதற்கான பதில் வேறாக இருக்கலாம். அவரவர் அனுபவத்தில் மட்டுமே அறியக்கூடிய அம்சம் இது. இந்த வகையில் பார்த்தால் நதி மட்டுமல்ல. மலை, அருவி, கடல், மரம், மழை ஆகியவைகூடப் பேசலாம். அவற்றின் குரல் சிலருக்குக் கேட்கும். சிலருக்குக் கேட்காது. பேசுவது நதியா, அல்லது கேட்பவரின் அந்தராத்மாவின் எதிரொலியா என்னும் கேள்வி சுவாரஸ்யமானது. அனுபவ தளத்தில் மட்டுமே விடை காணக்கூடியது.

எது சரியானது?

யாருக்குத்தான் இல்லை அனுபவங்கள்? யாரிடம் இல்லை கேள்விகள்? விடைகளும்கூடக் கொட்டிக் கிடக்கின்றன. பல்வேறு கேள்விகள். பல்வேறு விடைகள். பல்வேறு கோணங்கள். பல்வேறு தரப்புகள். இதில் எது சரியான விடை? எது சரியான தீர்வு?

வாழ்வின் கேள்விகளுக்குச் சரியான விடை என எதுவும் கிடையாது. இருப்பவை பார்வைகள், தரப்புகள். நமக்கான விடை, நமக்கான தீர்வு என்பதே சரியாக இருக்கும். அத்தகைய விடைகளை எங்கிருந்து பெறுவது?

அனுபவங்கள் சிறந்த ஆசான்கள். அனுபவங்கள் சார்ந்த தீவிரமான விசாரணைகளும் கறாரான அலசல்களும் தெளிவைத் தரக்கூடியவை. ஆனால், தனி மனித அனுபவங்கள் வரையறைக்கு உட்பட்டவை. நூறாண்டு வாழ்ந்தாலும் ஒருவர் பெறக்கூடிய அனுபவங்கள் மனித குலத்தின் அனுபவப் பரப்போடு ஒப்பிட்டால் சிறு துளி என்றுதான் சொல்ல வேண்டும். வரம்புக்குட்பட்ட தனி நபரின் அனுபவங்கள் வாழ்வின் அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிடும் என்று சொல்வதற்கில்லை. இந்நிலையில், பரந்த அனுபவப் பரப்பில் நின்று நமது விசாரணையின் பரப்பை விஸ்தரித்துக்கொண்டுபோக என்ன வழி?

எல்லையற்று விரியும் பாதை

ஆத்மார்த்தமாக எழுதப்பட்ட புத்தகங்கள் அனுபவங்களின் களஞ்சியங்கள். தான் அனுபவித்திருக்கவே முடியாத தளங்களில் புத்தகங்களின் மூலம் ஒருவர் சஞ்சரிக்கலாம். தன் அனுபவப் பரப்பை விரித்துக்கொள்ளலாம். நாம் பார்த்திராத உலகங்கள், சந்தித்திராத மனிதர்கள், கேட்டிராத குரல்கள், உணர்ந்திராத உணர்வுகள், சுவாசித்திராத காற்று, தரிசித்திராத அருவிகள், மலைகள், கடல்கள், நதிகள், மலர்கள், பறவைகள் என எல்லையற்று விரியும் பாதை இது.

வாழ்வின் நேரடிப் பதிவுகள் சாத்தியப்படுத்தும் அனுபவங்கள் ஒருபுறம் இருக்க, இலக்கியப் படைப்புகளில் கலைப் பார்வையோடு உருமாற்றம் பெறும் அனுபவங்கள் தரும் தரிசனங்கள் மன அரங்கில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையில், உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகள் நமது அனுபவ உலகை அர்த்தபூர்வமாக விஸ்தரிக்கிறார்கள். நமது தேடலின் பரப்பை அதிகரிக்கச்செய்து கேள்விகளின் கூர்மையைக் கூட்டுகிறார்கள். விடைகளைக் காண்பதற்கான வாய்ப்புகளையும் அறிவின் வாசல்களையும் விரிவாகத் திறந்துவைக்கிறார்கள்.

பேசும் நூல்கள்

லியோ டால்ஸ்டாயின் அன்னாவைப் புரிந்துகொள்ளும் போது அன்னாவை மட்டுமின்றி அன்னாவைப் போன்ற பல நூறு பெண்களையும் நாம் புரிந்துகொள்கிறோம். காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் காட்டும் கொலம்பியாவில் உள்ள மகந்தோவின் சித்திரம், அது போன்ற பல்வேறு சமூகங்களை நமக்குப் புரியவைக்கிறது. தி.ஜானகிராமன் காட்டும் தஞ்சையும் அசோகமித்திரனின் எழுத்தின் வழியே உருப்பெறும் செகந்திராபாதும் அப்படியே. வியாசனின் கர்ணன், வால்மீகியின் சீதை, இளங்கோவின் கண்ணகி, காளிதாசனின் சகுந்தலை, ஜானகிராமனின் யமுனா, ஜெயகாந்தனின் கங்கா, இமையத்தின் ஆரோக்கியம் ஆகிய பாத்திரங்கள் நமக்குச் சாத்தியப்படுத்துவதும் இதைத்தான். தாராசங்கர் பானர்ஜி, ஃப்ரன்ஸ் காஃப்கா, ஆல்பெர் காம்யூ, ஹார்ப்பர் லீ, வைக்கம் முகமது பஷீர் ஆகியோர் படைத்தளிக்கும் உலகங்களும் நம் உலகின் எல்லைகளை விரிவுபடுத்துகின்றன. நமது உலகினையும் வாழ்வினையும் மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

சித்தார்த்தன் நதியிடம் திரும்பினான். நாம் நூல்களிடம் திரும்பலாம். நதி சித்தார்த்தனிடம் பேசியதைப் போன்றே, நூல்களும் நம்மிடம் பேசும். வரையறைக்குட்பட்ட நம் வாழ்வை எல்லையற்ற அனுபவப் பரப்பாக மாற்றக்கூடியவை நூல்கள். பொதுவான விடைகளை அல்ல, நமக்கான விடைகளை இவை தரலாம். நமக்கான கேள்விகளையும் அடையாளம் காட்டலாம். நீள அகலம் காண இயலாது விரிந்திருக்கும் இந்த நூல் வெளியில் நமக்குக் கிடைக்கக்கூடிய தரிசனங்கள் எண்ணற்றவை. நமது தேடலுக்குத் துணை நின்று நம் வாழ்வை மாற்றக்கூடிய தரிசனங்கள் இவை.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

SCROLL FOR NEXT