கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடக் காரைக்காலுக்கு வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் 15 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாடக் காரைக்கால் சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த
டிச.24-ம்் தேதி 15 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இவர்களில் பெரும்பாலானோர் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் காரைக்கால் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
14 பேர் கைது
கடந்த டிச.25-ம் தேதி இதுதொடர்பான எந்த விவரத்தையும் வெளியில் காவல்துறையினர் சொல்லாத நிலையில், மறுநாள் (டிச.26-ம் தேதி) காரைக்காலைச் சேர்ந்த அப்துல் நாசர், ஜெயகாந்தன், திருநள்ளாறைச் சேர்ந்த மதன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இளம் குற்றவாளி. அவரை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர். மற்றவர் கள் காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்கத் தவறியதாகக் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்ப வம் நடந்தது ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரின் அறையில் என்று தெரிகிறது. தலைமறைவாகவுள்ள மணியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வேலையைச் செய்து வந்தவரான மணிக்கு, நகரில் உள்ள பல்வேறு கும்பல்களுடன் தொடர்புள்ளதாம். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் நாசர் 1994-ம் ஆண்டு ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் 18 மாதச் சிறைத் தண்டனை பெற்றவர். ரூ.5 ஆயிரம் பிணைத்தொகை கட்டி வெளியே வந்தநிலையில் மீண்டும் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். இவர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாஜிமின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.
நலமுடன் இருக்கிறார்
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். வழக்கு குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாலும், அவர்கள் விசாரணை நடத்திய பின்னர் அந்தப் பெண் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.
இச்சம்பவத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் காலதாமதம் ஆன விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமியிடம் கேட்டபோது, “காலதாமதம் ஆனது என்பது உண்மைதான். இதற்காகத்தான் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். காலதாமதம் குறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
நாஜிம் கருத்து
இந்த சம்பவம் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம். ‘தி இந்து’நிருபரிடம் அவர் கூறியது:
“5 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் ஒரு பெண்ணைக் கேவலப்படுத்திப் பேசுவேனா? நடந்த விஷயம் குறித்து நகரக் காவல் நிலையத்தில் தகவல் கேட்டபோது அவர்கள் சொன்ன விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். அதை, நானே பெண்ணைப் பற்றி தவறாகச் சொன்னதுபோலத் திரித்துச் சொல்லிவிட்டார்கள். இந்தச் சம்பவத்தில் என்னுடைய நிலை என்பது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான்” என்றார்.
டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமையைப் போலவே மிகக் கொடூரமான முறையில் இந்த பலாத்கார சம்பவத்தை 15 பேர் கும்பல் அரங்கேற்றியுள்ளது. டெல்லி சம்பவம் நாட்டையே உலுக்கியது. பரபரப்பாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. அக்கிரமக்காரர்களுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும் என மக்கள் ஆவேசப்பட்டனர். அதே போன்ற நிலைதான் காரைக்காலிலும் நடந்திருக்கிறது. டெல்லி சம்பவத்தில் கிடைத்த நீதி, காரைக்காலில் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.