வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் முதல்வர் ஜெலியாங் ராஜினாமா செய்திருக்கிறார். வழக்கம்போல, இங்கேயும் டெல்லியின் கரங்கள் புகுந்து விளையாடுகின்றன என்றாலும், முன்னதாகச் சில வாரங்களாகவே நாகாலாந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நாகாலாந்தின் இப்போதைய பிரச்சினையின் மையம், ஒட்டுமொத்த இந்தியாவும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது. நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் முயற்சியின் தொடர்ச்சிக்கான எதிர்ப்பே இந்தப் போராட்டங்களின் மையப்புள்ளியாகும்.
நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் நாகாலாந்து நகராட்சி சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தத்தை 2006-ல் நாகாலாந்து அரசு கொண்டுவந்தது. ஆண்கள் மட்டுமே அங்கம் வகிக்கும் பழங்குடியின அமைப்புகள், இந்த சட்டத் திருத்தத்துக்குத் தொடக்கம் முதலே எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. இந்த சட்டத் திருத்தம் அரசியல் சட்டத்தின் 371(ஏ) பிரிவை மீறுவதுடன், நாகா கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கத்தையும் மீறுகிறது என்பது அந்த அமைப்புகளின் வாதம். இந்த அமைப்புகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த 10 ஆண்டுகளாகத் தேர்தலே நடத்தவில்லை நாகாலாந்து அரசு.
நீறுபூத்த நெருப்பு
உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு மறுத்துவருவதை எதிர்த்து, குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் கோஹிமா அமர்வு முன்னர் 'நாகா மதர்ஸ் அசோசியேஷன்ஸ்' (என்எம்ஏ) அமைப்பின் தலைமையில் நாகாலாந்து பெண்கள், 2011 ஜூன் 26-ல் ரிட் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 2012 ஜனவரி 20 அல்லது அதற்கு முன்னதாக உள்ளாட்சி கவுன்சில்களுக்கும் நகர கவுன்சில்களுக்கும் தேர்தல் நடத்துமாறு 2011 அக்டோபரில் அரசுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்குள் இந்த உத்தரவுக்கு எதிராக, குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு முன்னர் மேல்முறையீடு செய்தது நாகாலாந்து அரசு. இதையடுத்து, முந்தைய உத்தரவை நிறுத்திவைத்தது நீதிமன்றம்.
இதுபோன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்துவது நாகாலாந்தின் அமைதியைக் குலைத்துவிடும் என்பதைத் தனது வாதங்களில் ஒன்றாக முன்வைத்தது அரசு. 2012 செப்டம்பர் 22-ல், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்யும் தீர்மானத்தை அம்மாநில அரசு கொண்டுவந்தது. இதையடுத்து, அரசியல் சட்டத்தின் 371(ஏ) பிரிவு அளிக்கும் பாதுகாப்பையும், நாகா மக்களின் சமூக நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களையும் முந்தைய சட்டத் திருத்தம் மீறுவதாகவும் அந்தத் தீர்மானம் குறிப்பிட்டது.
இதையடுத்து, மகளிர் இடஒதுக்கீட்டுக்கான கூட்டுச் செயல் குழு (ஜேஏசிடபிள்யூஆர்) 2012 செப்டம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011-ல் குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்து, 2016 ஏப்ரல் 20-ல் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, நாகாலாந்து உள்ளாட்சி மூன்றாவது சட்டத் திருத்த மசோதாவை (2016) நிறைவேற்றியது அம்மாநில அரசு. 2012-ல் அம்மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை இது ரத்துசெய்ததுடன், நகராட்சி அமைப்புகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கும் வழிவகுத்தது. மேலும், பிப்ரவரி 1-ல் நகராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனவரி முதல் வாரத்தில் நாகாலாந்து அரசு அறிவித்தது.
பழங்குடியின அமைப்புகளின் எதிர்ப்பு
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்பவர்கள் தங்கள் பழங்குடி இனத்திலிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள் என்று பழங்குடி அமைப்புகள் கடுமையாக எச்சரித்தன. கடுமையான நெருக்கடி எழுந்ததைத் தொடர்ந்து, சிலர் வேட்புமனுவையே தாக்கல் செய்யவில்லை. தாக்கல் செய்த சிலர் அதைத் திரும்பப் பெற்றனர். வேட்புமனுவைத் திரும்பப் பெற மறுத்தவர்கள் 10 முதல் 30 ஆண்டுகளுக்குத் தங்கள் இனங்களிலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனை நடந்தும், தொடர்ந்து மெளனம் காத்த நாகாலாந்து அரசு, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யத் தவறிவிட்டது. இத்தனைக்கும், மகளிர்க்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இந்தப் பழங்குடியின அமைப்புகள், அரசியல் சட்டம் 371(ஏ)வால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நிறுவனங்கள் அல்ல.
தேர்தலை ரத்துசெய்ய நாகாலாந்து அரசு மறுத்ததைத் தொடர்ந்து, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 1 வரை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று பழங்குடி அமைப்புகள் அறிவித்தன. பிப்ரவரி 1-ல் பெரும்பாலான இடங்களில் தேர்தல் நடந்தாலும், மாநிலம் முழுவதும் முழு அடைப்பை அந்த அமைப்புகள் நடத்தின. சில நகரங்களில் இந்த அமைப்பினருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கிடையே, ஜனவரி 31-ல் நாகாலாந்தின் வணிகத் தலைநகரான திமாபூரில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தேர்தல் செல்லாது என்று மாநில அரசு அறிவித்தது.
இதையே சாக்காகக் கொண்டு முதல்வர் ஜெலியாங் பதவி விலக வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கூடவே, நாகாலாந்து நகராட்சி மூன்றாவது சட்டத்திருத்த மசோதாவின் (2016) பிற அம்சங்களான வரிகள், நில உரிமை போன்றவையும் விவாதத்தில் இடம்பிடிக்கத் தொடங்கின. இதனிடையே, 'அரசியல் சட்டப் பிரிவு 9-ஏ-விலிருந்து நாகாலாந்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். 'அரசியல் சட்டத்தின்படி நகராட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிப்பது கட்டாயம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கான இடம் என்ன?
அரசியல் சட்டத்தின் 9-வது பகுதியின் வரம்பிலிருந்து நாகாலாந்துக்கு விலக்கு அளிக்கப்படும் பட்சத்தில், அதிகார மையங்களில் பெண்கள் நுழைவதற்கும் பங்கெடுப்பதற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்பது பெண்ணிய அமைப்புகளின் வாதம். நாகா மக்களிடையே உடன்கட்டையேறுதல், பெண் சிசுக்கொலை போன்றவை கிடையாது; வரதட்சணை கிடையாது, சாதி அமைப்பில் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் அது. என்றாலும், வரலாற்றுரீதியாகவே ஆண், பெண் இடையே ஏற்றத்தாழ்வு இருந்துவரும் ஆணாதிக்க சமூகத்தின் ஒரு பகுதியே அதுவும். நாகா பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பாரம்பரியம் அனைத்தும் சொத்துரிமை பெறுவதிலும், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதிலும் பெண்களை விலக்கியே வைக்கின்றன. அரசியல் சட்டம் 371(ஏ) பாதுகாக்கும் உரிமைகள் இவை.
அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் உரிமைகள் நாகா பெண்களுக்குக் கிடைப்பது என்பது மத்திய அரசையும், பாலின சமத்துவத்தை உணர்ந்திருக்கும் மக்களையும்தான் பொறுத்திருக்கிறது. இந்தப் பிரச்சினையைப் பெண்களுக்கான அதிகாரமளித்தல் தொடர்பான பிரச்சினையாக அணுகுவதும் அது தொடர்பிலான விவாதத்தை முன்னெடுப்பதும் ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும். ஆனால், இதுவும் அதிகார விளையாட்டாக மாறியிருப்பதே துயரம். ஏற்கெனவே ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நாகாலாந்தை இப்பிரச்சினை மேலும் நசுக்குவதாக மாற்றிவிட்டிருப்பது இன்னும் துயரம்!
- மோனலிசா சாங்கிஜா,பத்திரிகையாளர், கவிஞர், 'நாகாலாந்து பேஜ்' நாளிதழின் ஆசிரியர்.
© 'தி இந்து'(ஆங்கிலம்), தமிழில்:வெ.சந்திரமோகன்