உலகம் செல்வம் மிக்கதாக இருக்கிறது, இனி மேலும் செல்வந்த உலகமாகும். கவலையை விடுங்கள். நாம் எல்லோருமே பணக்காரர்கள் இல்லைதான்; 100 கோடிப் பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு 3 டாலர்கள் (80 ரூபாய்) அல்லது அதற்கும் குறைவான ஊதியத்துடன்தான் நாளை ஓட்டுகின்றனர். 1800-வது ஆண்டு வரையில் எல்லோருமே இந்த 3 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தைத்தான் பெற்றுவந்தனர்.
செல்வம் சேருவது 17-வது நூற்றாண்டில், ஹாலந்தில்தான் முதலில் தொடங்கியது. 18-வது நூற்றாண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கக் காலனிகளுக்குப் பரவியது. இப்போது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.
செல்வம் குவியும் வேகம் திடுக்கிட வைப்பதாக இருக்கிறது என்பதில் பொருளாதார நிபுணர்களும் வரலாற்று அறிஞர்களும் கருத்தொற்றுமையுடன் இருக்கிறார்கள். 2010 வாக்கில் உலகின் பல நாடுகளில் சராசரி தினசரி ஊதியம் - ஜப்பான், அமெரிக்கா, போட்ஸ்வானா, பிரேசில் உள்பட - 1800-ல் இருந்ததுடன் ஒப்பிடுகையில், 1,000% முதல் 3,000% வரை உயர்ந்திருக்கிறது. கூடாரங்களிலும் மண் சுவர் வீடுகளிலும் வசித்த மக்கள் இப்போது நகரங்களில் பல மாடி அடுக்ககங்களில் வசிக்கின்றனர். தண்ணீரால் பரவும் நோய்களால் இள வயதிலேயே மரணத்தைச் சந்தித்த இனம், இப்போது சராசரியாக 80 வயது தாண்டியும் வாழ முடிகிறது. ஏதுமே அறியாமல் அறியாமையில் மூழ்கிக் கிடந்தவர்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக முடிந்திருக்கிறது.
ஏற்றத்தாழ்வு குறைந்திருக்கிறது
பணக்காரர்கள்தான் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகத்தான் வாடுகின்றனர் என்று நீங்கள் கருதலாம். ஓரளவுக்கு வளமான வாழ்க்கைக்கு அவசியப்படும் செளகரியங்களை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால், பரம ஏழைகளாக இருந்தவர்கள்கூட இன்றைக்கு வசதிகளுடன் வாழ்கின்றனர். அயர்லாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் மிகவும் வறியவர்கள் என்று அடையாளம் காணப்படும் மக்கள்கூட போதிய உணவு, அடிப்படைக் கல்வி, தங்குமிடம், மருத்துவக் கவனிப்பு போன்றவற்றைப் பெற்றுள்ளனர். சில தலைமுறைகளுக்கு முன்னால் அவர்களுடைய மூதாதையர்கள் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள்.
செல்வ வளத்தில் ஏற்றத்தாழ்வு என்பது மாறிக் கொண்டேயிருக்கும். நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அது குறைந்திருப்பது தெரியவரும். 1800, 1900 காலங்களில் செல்வ வள ஏற்றத்தாழ்வு மிக மிக அதிகமாக இருந்தது. இதை பிரெஞ்சுப் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டியும் ஒப்புக்கொள்கிறார். உணவு, உடை, இதர நுகர்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் ஒரே நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலும், வெவ்வேறு நாடுகளுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வு வெகுவாகக் குறைந்திருக்கிறது.
பால் காலிரின் வேண்டுகோள்
எந்தக் காலமாக இருந்தாலும் பிரச்சினை என்பது வறுமையைச் சுற்றித்தான் இருக்கிறதே தவிர, ஏற்றத்தாழ்வுகளைப் பற்றியல்ல. கடந்த 40 ஆண்டுகளில் அன்றாட சராசரி ஊதியம் 1 டாலர் அல்லது 2 டாலர் மட்டுமே பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்று உலக வங்கியின் மதிப்பீடு கூறுகிறது. அதாவது, குறைந்தபட்ச ஊதியம் அதிகமாகிவிட்டது என்கிறது.
உலகில் இப்போது வாழும் 700 கோடி மக்களில் கடைசிப் படிநிலையில் வாடும் 100 கோடி மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பொருளாதார அறிஞர் பால் காலிர் நமக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அப்படி உதவ வேண்டியது நம்முடைய கடமைதான். 50 ஆண்டுகளுக்கு முன்னால் 500 கோடி மக்களில் கிட்டத்தட்ட 400 கோடிப் பேர் மிகவும் மோசமான நிலையில் பரம ஏழைகளாகத்தான் வாழ்ந்தார்கள் என்பதை அவர் நினைவுபடுத்துகிறார். 1800-ல் வாழ்ந்த 100 கோடிப் பேரில் 95% வறுமையில்தான் வாடினர்.
உழைக்கும் வர்க்கத்தாரின் வாழ்க்கைத் தரத்தை நம்மால் உயர்த்த முடியும். மிகவும் குறைவாகவுள்ள உற்பத்தித் திறனை, மனித இனத்துக்கே உரித்தான படைப்புத் திறனைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் உயர்த்த முடியும். பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலம் ஓரளவுக்குத்தான் ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியும். அதுவும் எப்போதோ ஒரு முறைதான் அது சாத்தியம். சந்தையில் பலமுறை சோதிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் வருவாயைப் பெருக்கி, அதை எல்லோரும் அடையும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் அடுத்த நூறாண்டுகளில் அனைவருமே அதிலும் குறிப்பாக, மத்திய தர வர்க்கம் வசதியாக வாழும் நிலையை ஏற்படுத்திவிடலாம்.
1978 முதல் சீனத்திலும் 1991 முதல் இந்தியாவிலும் ஏற்பட்டுவரும் வியத்தகு மாற்றங்களைப் பாருங்கள். உலக மக்கள் தொகையில் 40% பேர் இவ்விரு நாடுகளில் வாழ்கின்றனர். அமெரிக்காவில் கூட உண்மையான வருவாய் மதிப்பு மெதுவாக உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால், மற்றவர்கள் சொல்வதென்னவோ வருவாயின் உண்மை மதிப்பும் குறைந்துகொண்டே வருகிறது என்று. பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் உயர்ந்துகொண்டே வருவதாலும் ஊதியமற்ற இதர பணப் பயன்களாலும் உண்மையான ஊதிய மதிப்பும் உயர்ந்துகொண்டு வருகிறது என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் டோனல்ட் தெரிவிக்கிறார். 1950-களில் இருந்ததைப் போல இரு மடங்குக்கு மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. 1950-களில்தான் அமெரிக்காவின் பெரும்பாலான குழந்தைகள் இரவுச் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துறங்கினர்.
ஏழைகளைச் சுரண்டி அல்ல, முதலீடுகள் மட்டும் காரணம் அல்ல, இப்போதுள்ள அமைப்புகள் மூலமும் அல்ல, வெறும் கருத்துகளாலும் அல்ல; தத்துவ அறிஞரும் பொருளாதார நிபுணருமான ஆடம் ஸ்மித் கூறியபடி - சமத்துவம், விடுதலை, நீதி ஆகிய லட்சியங்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததன் மூலமே இது சாத்தியமானது. ஐரோப்பியர்கள் கூறும் சுதந்திரச் சந்தையை ஏற்படுத்த தாராளமயம் உதவியது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை சாமானியர்களையும் சமூகக் கண்ணியத்தோடு விரும்பிய உற்பத்தியை மேற்கொள்ள அனுமதித்தது. இதன் விளைவாக அவர்கள் அசாதாரணமான முறையில் ஆக்கபூர்வமாகவும் ஆற்றலுடனும் செயல்பட்டுச் சாதித்துள்ளனர்.
மகிழ்ச்சிகரமான விபத்துகள்
வட மேற்கு ஐரோப்பாவில் 1517 முதல் 1789 வரையில் நிகழ்ந்த சில மகிழ்ச்சிகரமான விபத்துகள் (சம்பவங்கள்) காரணமாகத்தான் விடுதலைச் சிந்தனை பரவியது. சீர்திருத்தங்கள், டச்சு (ஹாலந்து) நாட்டில் அரசுக்கு எதிராக மூண்ட கலகம், இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் ஏற்பட்ட புரட்சிகள்தான் அத்தகைய மகிழ்ச்சிகரமான சம்பவங்கள். இந்த நான்கும் மக்களை அவர்களுடைய அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தது. எதையும் முயன்று பார்த்துவிடுவது என்ற சிந்தனைப் போக்குள்ள முதலாளித்துவ எண்ணம் கொண்டோர் வாழ்க்கைத் தரம் உயரக் காரணமாக இருந்தனர். “முதலில் நான் இந்த உற்பத்தி முறையை முயன்று பார்க்கிறேன்; இதில் கிடைக்கும் லாபம் எனக்கு, வேலை உனக்கு, உற்பத்தி நாட்டுக்கு என்பது முதல்கட்டம். அடுத்த கட்டத்தில் மேலும் சிலர் போட்டிக்கு வந்து, முதல் முதலாளிக்குப் போட்டியை அளித்து லாபத்தைக் குறைக்கப் பார்ப்பார்கள். இதன் விளைவு, பொருளின் விலையும் சரியும், கொள்ளை லாபம் என்பதும் குறையும். மூன்றாவதாக, புதிய உற்பத்தியால் அனைவரின் வாழ்க்கைத் தரமும் கூடும், முதலீடு செய்தவரும் பணக்காரர் ஆவார். அது அப்படித்தான் நடந்தது.
பொருள் உற்பத்தி தொடர்பாக ஆயிரம் எண்ணங்கள் இருக்கலாம்; அவை வெற்றிகரமாகக் கைகூட மனித வளமும், மூலதனமும், நல்ல நிறுவனங்களும் தேவையாயிற்றே என்று நீங்கள் கூறலாம். உலக வங்கியில் இருப்பவர்கள் அப்படித்தான் தவறாக நினைக்கிறார்கள். நல்ல கருத்துகளைச் செயல்படுத்த மூலதனமும் நிறுவனங்களும் அவசியம் என்பது உண்மைதான். உச்ச நீதிமன்றம் சிறப்பாகச் செயல்பட பளிங்குக் கல் பதிக்கப்பட்ட தரையும், மையப்படுத்தப்பட்ட வெப்பமூட்டி அறை அமைப்பும் அவசியம் என்று கருதலாம். அதைப் போல மூலதனமும் நிறுவனங்களும் மட்டும் போதுமான அடிப்படைகள் அல்ல.
கசப்பான சிந்தனைகள்
பெண்ணியம், போருக்கு எதிரான இயக்கம் போன்றவை மக்களிடையே பரவ எந்த அமைப்புகள் அல்லது யார் காரணம்? கார்ல் மார்க்ஸ் காலத்திலிருந்தே நாம் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு உலகாயதமான காரணங்களையே ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நவீன உலகமோ மக்களை மேலும் மேலும் மரியாதையாக, கண்ணியமாக நடத்துவதால் உருவாகிக்கொண்டிருக்கிறது.
எல்லா சிந்தனைகளுமே இனிப்பானவை அல்ல என்பதும் உண்மைதான்; பாசிசம், நிறவெறி, இனத் தூய்மை, தேசியவாதம் என்பவையெல்லாம் மக்களிடையே சமீபத்தில் பிரபலமாகிவரும் - நாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய கசப்பான சிந்தனைகள். லாபகரமான தொழில்நுட்பங்கள், லாபகரமான நிறுவனங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க சாமானியர்களுக்குக் கிடைத்த தாராளமயத்தால்தான் உற்பத்தி பெருகி வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. மேட்டுக்குடிகளை அல்ல, சாமானியர்களைத்தான் நாம் புதிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்த வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அவர்களிடத்தில் கடைப்பிடித்து, சமூக சமத்துவத்தை அவர்களிடம் நிலைநாட்டினால், அவர்களே வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான பங்களிப்புகளைச் சமூகத்துக்குச் செய்வார்கள். சமத்துவம் என்பது பொருளாதார சமத்துவம் மட்டுமல்ல, ஆன்மிகம் சார்ந்ததும் ஆகும்.
தமிழில் சுருக்கமாக: சாரி,
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
(கட்டுரையாளர் பொருளாதாரம், வரலாறு, ஆங்கிலம், தகவல் தொடர்பியல் ஆகிய பாடங்களில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறவர்.)