புத்தக வாசிப்பு என்பது இயக்குநருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமான விஷயம். நாம் தேங்கிவிடாமல், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வது புத்தக வாசிப்பு மட்டுமே. நிறைய மனிதர்களோடு பழகினாலும், வெவ்வேறு உலகங்களையும், கருத்துகளையும் கொண்டுவந்து சேர்ப்பது புத்தகங்களாக மட்டுமே இருக்க முடியும். மனிதர்களுடைய துயரங்களைப் புத்தகங்கள் அடித்து நொறுக்கிவிடும். ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தால், துயரம் மறைந்து அடுத்த தளத்துக்குச் சென்றுவிடுவோம். படைப்பாளிகளை மேலும் மேலும் உயரத்துக்குக் கொண்டுசெல்வது புத்தக வாசிப்புதான். தினசரி வாழ்க்கையில் நமக்கு வரும் அலுப்புகளையெல்லாம் விரட்ட புத்தக வாசிப்பால்தான் முடியும். ஒரு இயக்குநருக்கு விசாலமான படைப்புகளை உருவாக்குவதற்கு வாசிப்பும் பயணமும் மிக முக்கியமானவை என்று கருதுகிறேன். எனக்கும் அவைதான் உதவுகின்றன.
அசோகமித்திரன், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன், அழகிய பெரியவன், கண்மணி குணசேகரன் என்று எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ புத்தகத்தை என்னால் மறக்கவே முடியாது. பொதுவுடைமை சித்தாந்தவாதிகள் அனைவருக்குமே இந்த புத்தகம்தான் வழிகாட்டி. அதை எப்போதுமே வைத்திருப்பேன். இந்தப் புத்தகங்கள் தவிர, வைக்கம் முகம்மது பஷீர், சாதத் ஹசன் மண்ட்டோ ஆகியோருடைய படைப்புகளையும் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கமுடையவன் நான். சமீபத்தில் கலைவாணன் இ.எம்.எஸ். எழுதிய ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ கவிதைத் தொகுப்பு, சுதீப் சக்ரவர்த்தி எழுதி இந்திரா காந்தி தமிழாக்கியிருக்கும் ‘ரெட் சன்’ என்ற புத்தகம்,
எஸ். ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’, வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’, சரவணன் சந்திரனின் ‘அஜ்வா’, மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதி கே.வி. ஜெய தமிழாக்கிய ‘ஒற்றைக் கதவு’ ஆகிய புத்தகங்களைப் படித்தேன். தற்போது, ‘மாவோ - தேர்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ என்ற விடியல் பதிப்பகத்தின் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துவருகிறேன்.