சிறப்புக் கட்டுரைகள்

நிமிடக் கட்டுரை: தமிழ்த் தாத்தா இல்லம் நினைவிடம் ஆகுமா?

செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணிப் பகுதிக்குப் பெருமை பார்த்தசாரதி கோயில் மட்டுமல்ல, அங்கு மகாகவி பாரதியாரும், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும் வாழ்ந்ததும்தான். அதற்கான அடையாளங்களை அழியவிடலாமா?

உ.வே.சாமிநாதய்யர் 1880-ல் கும்ப கோணம் அரசுக் கல்லூரியில் பேராசிரி யராகப் பணியைத் தொடங் கினார். அங்கு 23 ஆண்டு களும் சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்தபோது, சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடியேறினார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் முதல் மாணவரான சி.தியாகராசன் செட்டியார் தாம் பணிபுரிந்த கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஐயரை ஆசிரியராக அமர்த்தினார். அந்த நன்றிப் பெருக்கினால் தமது இல்லத்துக்கு தியாகராச விலாசம் என்று பெயரிட்டார். அந்த இல்லம்தான் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது.

ஐயரவர்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் என்பதைவிட, அழிந்துகொண்டிருந்த தமிழ்ச் சுவடிகளைத் திரட்டித் தந்தார் என்பதில்தான் அவரது தனித்தன்மை காணப்படுகிறது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90-க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளை அச்சிட்டுப் பதிப்பித்ததோடு 3,000-க்கும் மேற்பட்ட ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்துத் தமிழ் உலகத்துக்கு அளித்துள்ளார்.

1919-ம் ஆண்டு உ.வே.சா. சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் முதல் நாள் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்தபோது, உ.வே.சா.வின் இல்லமாகிய தியாகராச விலாசத்துக்கு வந்து, அவர் பதிப்பித்துள்ள நூல்களைக் கண்டு வியந்தார்.

தாகூரின் வருகையை அறிந்தவர்கள் ஐயரின் பெருமையையும் அறிந்துகொண்டனர். இப்படி எண்ணற்ற மகான்களும், புலவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் வந்துபோன வணக்கத்துக்குரிய அவரது இல்லம் ‘தியாகராச விலாசம்’ போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டாமா?

உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கு 2012-ம் ஆண்டே முயற்சிகள் நடந்தன. பாதி இடிக்கப்பட்ட நிலையில் தமிழ் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பினால் தடைபட்ட அப்பணி, இப்போது முழுமையாகவே தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.

மகாகவி பாரதியார் சென்னையில் வாழ்ந்த இல்லமும் இப்படித்தான் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பிறகு, தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று திரும்பக் கட்டி புதுப்பிக்கப்பட்டது. இப்போதும் இந்த முன்மாதிரியை ஏற்று, தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். அரசியல் சாசனச் சிற்பி அம்பேத்கர் சில காலம் லண்டனில் வாழ்ந்துள்ளார் என்பதற்காக அந்த இடத்தை ரூ.35 கோடிக்கு வாங்கிய மகாராஷ்டிர அரசு, அதனை நினைவில்லம் ஆக்கி, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.

இதேபோல தமிழக அரசும் சென்னை திருவட்டீஸ்வரன் பேட்டையிலுள்ள உ.வே.சா. வாழ்ந்த இடத்தையும் வாங்கி, அவருக்கு நினைவில்லம் அமைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT