தமிழ்ச் சூழலின் சிந்தனைப் போக்கில் 1925-களுக்குப் பிறகு, வீரியமான கலகக்குரல் திராவிட இயக்கத் தளத்தில் ஓங்கி ஒலிக்கத் துவங்கிற்று. அந்தக் கலகக்குரலின் சொந்தக் காரரான பெரியாரின் போர்ப் படைத் தளபதிகளில் திருவாரூர் கொடுத்த கொடை தங்கராசு.
வசியப் பேச்சின் முன்னோடி
ஓர் எழுத்தராக, கணக்காளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய தங்கராசுவுக்குள் ஒளிந்திருந்த எழுச்சி மிக்க பேச்சாளர் திராவிட இயக்க மேடைகளில் வீரியத்துடன் வெளிப்பட்டார். பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் கொண்டாடப்பட்ட பேச்சாளர் அவர். உச்சபட்ச இலக்கிய நடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று பேச்சு வழக்கு நடைக்கு மாறி, மீண்டும் இலக்கிய நடைக்குச் சென்று கூட்டத்தை வசியப்படுத்தும் உத்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய முன்னோடி தங்கராசு.
மரபுகளை உடைத்த ‘ரத்தக் கண்ணீர்’
பெரியாரின் கொள்கைகளை இயல் – இசை – நாடகம் என்ற முத்தமிழிலும் வழங்கிய தங்கராசுவின் ‘திராவிட ஏடு’ மாத இதழ், திராவிட இயக்க இலக்கியப் பங்களிப்புக்கு ஒரு சான்று.
பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்களின் மேடை வடிவங்கள்தான் தங்கராசுவின் நாடகங்கள். அநேகமாக இந்தியாவில் எழுத்து வடிவில் ராமாயணங்கள் எத்தனை உள்ளதோ அவை எல்லாவற்றையும் படித்து ஆய்ந்தவர் பெரியார். அவருக்கு அடுத்து தோழர் தங்கராசு என்றால் அது மிகை ஆகாது. அவரே நாடகத்தில் ராவணனாக நடிப்பார். ராமாயண கதாகாலட்சேபம் தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும். முடியும்போது அதுவரையிலான எல்லாப் புனித பிம்பங்களும் உடைந்து சிதறும்.
எம்.ஆர்.ராதாவுடன் அவர் கைகோத்தபோது தமிழகத்தின் நாடக மேடைகள் அதிர்ந்தன. அதுவரையில் பின்பற்றிய மரபுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. சாதிய – மதவாதிகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான போர்க்களமாக மேடைகளை இருவரும் மாற்றினார்கள். ‘ரத்தக் கண்ணீர்’ வசனங்கள் தங்கராசுவைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டுபோயின. ஆனால், இறுதி வரை திரை உலகின் எந்தச் சமரசங்களுக்கும் உட்படாமல் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசும் எழுத்துகளையே அவர் எழுதினார்.
தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவை அரசு சார்பில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடத்தியபோது, நாவலர் நெடுஞ்செழியனோடு துணைநின்று, பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை சட்ட வடிவம் ஆக்கியது தங்கராசு வின் முக்கியமான பணிகளில் ஒன்று. காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டிருந்த ‘பெரியார் பொன்மொழிகள்’ நூல் தடை நீக்கப்பட்டு அரசால் வெளியிடப்பட்டதிலும் தங்கராசு முக்கியப் பங்கு வகித்தார். இறுதிவரை எளிமையான வாழ்வைக் கடைப்பிடித்த தங்கராசு, தனக்கு அளிக்கப்பட்ட கொடைகளின் பெரும் பகுதியைத் தமிழ்சார், இயக்கம்சார் பணிகளுக்காகச் செலவிட்டவர். பலருடைய மறைவுக்குச் சொல்லப்படும் சம்பிரதாய மான வாக்கியம் - ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது. தங்கராசுவின் மறைவு உண்மையாகவே திராவிட இயக்கத்துக்கும் தமிழ்ப் பேச்சுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
பசு. கவுதமன், பெரியாரிய எழுத்தாளர். தொடர்புக்கு: gowthamanpasu@gmail.com