சிறப்புக் கட்டுரைகள்

சினிமா பார்ப்பதே சாகசம்

வெ.சந்திரமோகன்

காந்தியைப் பற்றிய ஆவணப்படம் எடுத்தவர் ஏ.கே.செட்டியார். இவர் எழுதிய பயண அனுபவங்களில் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள், அவை தயாரிக்கப்படும் விதம், திரையரங்குகள் செயல்படும் விதம் என்று பல தகவல்கள் உள்ளன. பல நாடுகளின் திரையரங்குகளைப் பற்றி விவரித்துக்கொண்டே வரும் செட்டியார், நம்மூர் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள்பற்றி ஒரு சிறு விவரணை தருகிறார், “நம்மூர் திரையரங்குகளில் மேட்னி காட்சி பார்த்துவிட்டு வெளியே வருபவனைக் கவனித்திருக்கிறீர்களா? அசல் நடைப்பிணம் போலவே இருப்பான்” என்கிறார்.

யோசித்துப் பார்த்தால், அன்று அவர் பார்த்த நிலையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது. சமீபகாலமாக எடுக்கப்படும் காவியங்களைக் காசு கொடுத்துப் பார்க்க நேரும் ரசிகர்கள், உட்கார்ந்த இடத்திலேயே களைப்படைந்துவிடுகிறார்கள். அது ஏசி திரையரங்காக இருந்தாலும் சரி, வெளியே வரும் ரசிகர்கள் வியர்த்து விறுவிறுத்துப் போயிருப்பதைப் பார்க்க முடியும். திரைப்படங்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தப்பித் தவறி நல்ல விதமாக அமைந்துவிடும் சில திரைப்படங்களைப் பார்க்கத் திரையரங்குக்குச் சென்றோமானால், நமது சக ரசிகர்கள் படுத்தும்பாடு சொல்லி மாளாது.

திரைப்படங்களில் நாயகன் யாருக்காவது போன் செய்கிறான் என்றால், இங்கே திரையரங்கில் பல பேரிடம் இருக்கும் கைபேசிகள் அலறும். திரையரங்குக்குள் வந்தவுடன் அனைவரும் பேசாமடந்தைகளாகிவிட வேண்டும் என்பதல்ல. எனினும், நாம் பேசுவது அடுத்தவருக்குத் தொந்தரவாக இருக்குமே என்று நம் மக்கள் கிஞ்சித்தும் கிலேசம் கொள்வதில்லை. “அலோ… அலோ ...கேக்குதா... மாமா நா தேட்டர்ல இருக்கேன். ஹஹ்ஹ… ஆமா… அதே படம்தான். இப்பதான் எளவு கதையே லைட்டா புரியுது” என்று தொடங்கி, இதுவரை நடந்த கதையை, தயாரிப்பாளரிடம் விவரிக்கும் அறிமுக இயக்குநர் குரலில் விளக்கிச் சொல்வார் ஒருவர். பின்னர், “மாமா… தேட்டர்ல ஒர்ரே சத்தமாருக்கு. அப்றம் பேசுறேன்” என்று சொல்லிவிட்டு, நாற்காலியில் சரிந்துகொள்வார்.

படத்தில் இல்லாத பாடல்களும் அவ்வப்போது கேட்கக் கிடைக்கும். கேப்டன் பிலிப்ஸ் படத்துக்கு நடுவில், ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ என்று பாடல் ஒலிக்கும். உடனே, அவற்றை எடுக்கவோ, சைலண்ட் மோடில் போட்டு வைக்கவோ மாட்டார்கள். அதற்குப் பிறகு, அருகில் இருப்பவரின் கைபேசி ஒலிக்கும். இப்படியான இடையூறுகளுக்கு இடையில், கரப்பான், பல்லி, பெருச்சாளி உள்ளிட்ட சகல ஜீவராசிகளும் நம்முடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டி நம் காலை வருடும். இதையெல்லாம் கடந்து ஒரு படம் பார்ப்பது என்பது சினிமா எடுப்பதைவிடப் பெரிய சாகசம்தானே?!

தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in

SCROLL FOR NEXT