சிறப்புக் கட்டுரைகள்

இந்திய வங்கிகளும் திவாலை நோக்கி நகர்கின்றனவா?

செய்திப்பிரிவு

வாங்கிய கடனைக் கட்டாத பிரச்சினையில் பொதுத்துறை வங்கிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணம், திருப்பிச் செலுத்தும் சக்தியில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை விற்றதுதான். குடும்பங்களுக்குப் பதிலாக இந்தியாவில் பெருநிறுவனங்கள் இருக்கின்றன!

அமெரிக்கப் பொருளாதாரத்தில் 2007-2009-ல் பெருமந்தம் ஏற்பட்டது. வங்கிகள் பெரும் எண்ணிக்கையில் திவால் ஆயின. வீடுகளின் விலைகள் சரிந்தன. உலக அளவில் அதன் தாக்கம் இருந்தது. அதை ‘சப்-பிரைம் மார்ட்கேஜ் நெருக்கடி’ என்று அழைத்தனர். அதே போன்ற நெருக்கடி இந்தியாவில் உருவாகியிருக்கிறது என்று சொல்வது மிகையாகத் தோன்றலாம். ஆனால், அதைப் போன்ற நிலைமை உருவாகிவருகிறது என்பதே உண்மை. ‘இன்னும் வெடிக்கவில்லை; அவ்வளவுதான்’ என்றுகூட நான் சொல்வேன். பெரிய அளவில் இது வங்கித் துறையைப் பாதிப்பதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

பெருநிறுவனங்கள் வாங்கியுள்ள வங்கிக் கடன்கள் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இந்தக் கடன் நெருக்கடியைப் புரிந்துகொள்ளப் பெருநிறுவனங்கள் தொடர்பான இரு விவரங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வருடத்தில் பெறப்பட்டுள்ள வங்கிக் கடன்களின் அளவு ஒன்று. மற்றொன்று, இந்த நிறுவனங்கள் போதுமான நிதிநலனோடு இருந்தனவா என்பது. கடன்களுக்கான வட்டிகள் செலுத்தப்படுகிற காலகட்டத்தில் போதுமான லாபத்தை இந்த நிறுவனங்கள் பெற்றனவா என்பதைக் கொண்டு இரண்டாவது அம்சம் மதிப்பிடப்படும்.

அபாயத்தின் அறிகுறி

எந்தவொரு கடனையும் திரும்பிக் கட்டும்போது அதில் இரு பகுதிகள் இருக்கும். ஒன்று அசல். இன்னொன்று வட்டி. நல்ல நிதி நிலை உள்ள நிறுவனம் அசலையும் வட்டியையும் சமாளிக்கிற அளவுக்கு லாபம் ஈட்ட வேண்டும். வட்டி செலுத்தும் அளவுக்குக்கூட லாபம் ஈட்டாதவை மோசமான நிதிநிலை உள்ள நிறுவனங்கள். மோசமான நிறுவனங்களுக்கு மேலும் மேலும் கடன்கள் தரக் கூடாது. அப்படித் தந்தால் அது பேரழிவில்தான் கொண்டுபோய் விடும்.

அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணம், திருப்பிச் செலுத்தும் சக்தியில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை விற்றதுதான். குடும்பங்களுக்குப் பதிலாக இந்தியாவில் பெருநிறுவனங்கள் இருக்கின்றன. நிதி தொடர்பான கலைச் சொற்களில் சொன்னால், ஒரு நிறுவனத்தின் நிதி தொடர்பான ஆரோக்கியம் அதன் வரி கட்டும் விகிதத்தைப் பொறுத்திருக்கிறது. கடந்த காலத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுபோகக் கிடைக்கும் நிகர லாபத்தின் விகிதம் இது. அது குறைவாக இருப்பது அபாயத்தின் அறிகுறி. அசலையோ, வட்டியையோகூடக் கட்ட முடியாத அளவுக்கு அதன் வருமானம் இருக்கிறது என்று அதற்கு அர்த்தம்.

வட்டி கட்டாதவருக்கும் கடன்

2011- 2015 காலகட்டத்தை ஆய்வு செய்தோம். நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு வட்டி கட்டும் விகிதம் என்பது, சிறந்த அளவுகோலா? நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அவற்றுக்கான சொத்துகள் உருவாகவும் காலம் பிடிக்கும். அப்படியிருக்கும்போது, ஒரு நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தை முடிவுசெய்வதற்கான அளவுகோலாக வட்டி கட்டும் விகிதம் இருக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். அதனால்தான் தற்போதைய பெருநிறுவனக் கடன் நெருக்கடி பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்குவதற்காக மற்ற குறியீடுகளையும் வைத்துள்ளேன். ஆனால், விருப்பமுள்ளவர்கள் வட்டி கட்டும் விகிதத்தை வைத்தும் தங்களின் ஆய்வுகளைச் செய்யலாம்.

லாபம் ஈட்டும் திறன் அந்த நிறுவனங்களுக்கு இருக்கிறதா, வரிக்கு முந்திய லாபத்தை அவை ஈட்டுகின்றனவா, நிறுவனங்களின் தற்போதைய கடன்களில் அவர்களின் சொத்துகளின் விகிதம் எவ்வளவு? சொத்துகளை விற்றால் வங்கிகளின் கடன்களில் எந்த அளவுக்கு அடைக்க முடியும்? நிறுவனத்தில் மக்களின் பொதுப்பணம் தவிர்த்து நிறுவனத்தின் சொந்த மூலதனத்தின் விகிதம் எவ்வளவு ஆகியவை மற்ற குறியீடுகள் ஆகும். நட்டம் அடையும் நிறுவனங்களுக்கு அவர்களின் சொந்த மூலதனத்தை விட ஐந்து மடங்குகள் அதிகமாக கடன் இருந்தால் அவர் கள் தங்களின் சொத்துகளை விற்றுப் பாதி அளவு கடன்களையாவது அடைக்க வேண்டும்.

ஆனால், 2011 முதல் நிறுவனங்கள் வாங்கிய கடன்களை ஆராய்ந்தால், ஆரோக்கியமான நிலையில் நிதிநிலையை வைத்திருக்காத நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. வட்டி கட்ட முடியாத நிறுவனங்களுக்குக்கூடக் கடன்கள் தரப்பட்டுள்ளன. 2012 முதல் இது அதிகரித்துள்ளது. மேலே நாம் விவாதித்ததுபோல இவை கெடுதலை உண்டாக்கும் நிறுவனங்கள். சுவிட்சர்லாந்து ஆய்வு நிறுவனமான ‘கிரெடிட் சுயீஸ்’ அமைப்பின் 2012-க்கான அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள பத்து நிறுவனங்களில் நான்கை ஆய்வு செய்தோம். அவர்களின் பழைய கடன்களுக்குப் பதிலாகப் புதிய கடன்களை ஆராய்ந்தோம். வட்டி கட்ட முடியாத நிலையிலிருந்த நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கடன்கள் கிடைத்துள்ளன.இதில் ஆச்சரியமானது என்னவென்றால், பெரும்பாலான நிறுவனங்கள் எதையும் திருப்பிக்கட்டாமல் இருந்த நிலையிலும், அவர்களுக்குப் புதிய கடன்கள் கிடைத்தது மட்டுமல்ல, கடன்களின் அளவும் அதிகரித்துள்ளது.

சக்கரை நோயாளிக்கு சர்க்கரை

அதனால்தான் அமெரிக்காவில் ஏற்பட்டதைப் போல ஒரு நெருக்கடி உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறேன். ‘வேதாந்தா நிறுவனம்’ வட்டிகூட திருப்பிக் கட்ட முடியாத நிலையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் இருந்துள்ளது. ஆனாலும், அந்தக் காலகட்டத்திலும் அவர்கள் பெற்ற கடன்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருந்திருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சர்க்கரையைக் கொடுத்தால் எப்படியிருக்கும் அதுபோலத்தான் வங்கிகள் கடன்களைக் கொடுத்துவந்துள்ளன.

வங்கிகளின் பக்கம் உள்ள பிரச்சினை களையும் பார்ப்போம். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டிய பிரச்சினைதான் இது. 2011 முதல் பார்த்தால், வாங்கிய கடனைக் கட்டாத பிரச்சினை தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகளை விடப் பொதுத்துறை வங்கிகளுக்குத்தான் இருக்கின்றன. வங்கிகள் தங்களின் பிரச்சினையைப் புரிந்துவைத்துள்ளன. பெரிய அளவில் கடன் வாங்கிவிட்டு வாக்களித்தபடி கட்டாதவர்கள்தான் இந்தப் பிரச்சினையின் உண்மையான குற்றவாளிகள். அவர்களிடம் கறாராக நடந்துகொள்ளாமல், அவர்களின் கடன்களை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறது அரசாங்கம்.

அப்படிச் செய்தால் அது அநீதி. தொடர்ந்து இத்தகைய குற்றங்களை மீண்டும் செய்யவே அது உற்சாகம் தரும். செய்த குற்றத்துக்குத் தண்டனை கிடைக்காத நிலையில், மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் நிலையே உருவாகும்.

- ரோஹித் ஆஸாத், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

SCROLL FOR NEXT