சிவாஜிக்குக் கொடுக்கப்பட்ட பிறகு ‘ஷெவாலியே’ (அப்படித்தான் உச்சரிக்க வேண்டும்) விருதுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது - இம்முறை நடிகர் கமல்ஹாசனுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால்! ஒரு காலத்தில் பிரான்ஸில் 100-க்கும் மேற்பட்ட குதிரைவீரர்கள் அடங்கிய படையை வைத்திருந் தவர்களுக்கு வழங்கப்பட்ட ராணுவ கௌரவம் இது.
பிரெஞ்சு மொழி, பிரெஞ்சு கல்வி வளர்ச்சிக்காக உழைப்பவர் களுக்கு வழங்கும் பிரிவை இதில் அறிமுகப்படுத்தியவர் பேரரசர் நெப்போலியன். 1808 முதல் இந்தப் பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. கமலுக்குக் கிடைத்திருப்பது, கலை இலக்கியத்தில் சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் விருது. 1957 முதல் இந்தப் பிரிவின் கீழும் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஒரே ஆண்டில் இந்த இரண்டு பிரிவுகளிலும், ‘ஷெவாலியே’ விருது பெற்ற தமிழர் இருக்கிறார். அவர் வெ.ஸ்ரீராம். சென்னையில் உள்ள பிரெஞ்சு-இந்தியக் கலாச்சார மையமான அலியான்ஸ் பிரான்சேஸ் அமைப்பில் 34 ஆண்டு காலம் கமிட்டி உறுப்பினராகவும், 14 ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்தவர். எல்.ஐ.சி. ஊழியரான இவர் அங்கே தன்னார்வப் பணியாக கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். மேலும், பிரெஞ்சு திரைப்படங்களைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதிலும் குறிப்பிடத் தக்க பணிகள் ஆற்றியிருக்கிறார். தமிழகத்தில் பிரெஞ்சு மொழி, பிரெஞ்சு இலக்கியம் போன்றவை குறித்த பரிவர்த்தனைகளில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ‘குட்டி இளவரசன்’, ‘அந்நியன்’ உட்பட பல பிரெஞ்சு படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 2002-ல் இரட்டை ‘ஷெவாலியே’ கிடைத்தது இவருக்கு.
“விவசாயத் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இதில் கமாண்டர், ஆபீசர் மற்றும் ஷெவாலியே என மூன்று படிநிலைகள் உண்டு” என்கிறார் ஸ்ரீராம். பிரான்ஸ் பாதுகாப்புப் படைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தமிழர்களில் சிலருக்கும் ‘ஷெவாலியே’ விருது வழங்கப்பட்டிருக்கிறது. “‘குட்டி இளவரசன்’ நாவலை என்னுடன் இணைந்து மொழிபெயர்த்த, புதுச்சேரியைச் சேர்ந்த மதன கல்யாணிக்கும் ‘ஷெவாலியே’ விருது வழங்கப்பட்டது. இப்படி வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பு வழங்கிய தமிழர்கள் இவ்விருதால் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் ஸ்ரீராம்.
இவ்விருதுடன் ஒரு பதக்கமும் சான்றிதழும் கொடுப்பார்கள். ரொக்கத் தொகை கிடையாது. உலக மகா சாதனை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. “இது பிரெஞ்சு அரசு வழங்கும் ஒரு கெளரவ விருதுதான். அதேசமயம், இந்த விருதுக்கு நாமே விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நமது சேவையைப் பார்த்து நமது பெயரை யாரேனும் பரிந்துரைப்பதன் அடிப்படையில் இவ்விருது கிடைக்கிறது என்பதில் நிச்சயம் பெருமைதான்” என்கிறார் வெ.ஸ்ரீராம்.