சென்றவாரம் டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் (TAX FREE BOND) குறித்துப் பார்த்தோம். இவ்வாரம் மியூச்சுவல் ஃபண்டுகள் (பரஸ்பர நிதியம்) மூலமாக கடன் சார்ந்த உபகரணங்களில் முதலீடு செய்வது குறித்துப் பார்ப்போம். விரிவாக இத்திட்டங்களைப் பற்றிப் பார்க்கும் முன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி சிறிது அறிமுகம் செய்து கொள்வோம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் நிதித் துறையில் கால் பதித்திருக்கும் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இன்றைய தினத்தில் இந்தியாவில் 45-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் என்.ஆர்.ஐ-களுக்கு இருக்கும் மிகவும் சுத்தமான முதலீடுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளும் ஒன்றாகும். ரூபாய் எட்டு லட்சம் கோடிக்கும் மேலான சொத்தை மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இன்றைய தினத்தில் நிர்வகித்து வருகின்றன.
இந்நிறுவனங்கள் சில்லறை மற்றும் மொத்த முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற்று மிக நல்ல முறையில் நிர்வகித்து மக்களுக்கு லாபத்தை ஈட்டித் தருகின்றன. இந்த வேலையை செய்து தருவதற்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் ஒரு சிறிய தொகையை ஆண்டுதோறும் சார்ஜ் செய்து கொள்கின்றன.
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் திட்டங்களை 3 வகையாக பிரித்துக் கொள்ளலாம். அவையாவன:
1.பங்கு சார்ந்த திட்டங்கள் (EQUITY SCHEMES)
2.கடன் சார்ந்த திட்டங்கள் (DEBT SCHEMES)
3.கலப்பினத் திட்டங்கள் (HYBRID SCHEMES)
இவற்றில் கடன் சார்ந்த திட்டங்கள் மிகக் குறைவான ரிஸ்க்குடனும், பங்கு சார்ந்த திட்டங்கள் பங்குச் சந்தை சார்ந்த ரிஸ்க்குடனும், கலப்பினத் திட்டங்கள் மீடியமான ரிஸ்க்குடனும் வருகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு என்.ஆர்.ஐ–களாக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
1.கே.ஒய்.சி (KYC - KNOW YOUR CUSTOMER)
2.என்.ஆர்.ஈ அல்லது என்.ஆர்.ஓ வங்கிக் கணக்கு
3.உரிய விண்ணப்பப் படிவம்
உங்களது வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) என்பது இன்று இந்தியாவில் பல முதலீடுகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. முதன் முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது மியூச்சுவல் ஃபண்டு விண்ணப்பத்துடன் என்.ஆர்.ஐ–கள் கே.ஒய்.சி படிவத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட சுய கையெழுத்திடப்பட்ட ஆவணங்களுடன் அவர்களது நிதி ஆலோசகரிடம் கொடுக்க வேண்டும்.
1.பான் கார்டு (PAN CARD)
2.பாஸ்போர்டின் நகல்
3.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிக்கான ஆதாரம்
4.விசா அல்லது வெளிநாட்டு பாஸ்போர்ட்
5.ஃபோட்டோ
இந்த கே.ஒய்.சி என்பது ஒரு முறை செய்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இது சென்றடைந்துவிடும். அதேபோல் எப்பொழுதாவது முகவரி மாற்றம் செய்யவேண்டும் என்றால் கே.ஒய்.சி விபரம் மாற்று (KYC DETAILS CHANGE) விண்ணப்பம் கொடுத்தால் போதும். அது அனைத்து மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களையும் சென்று சேர்ந்து விடும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது பணத்தை ரொக்கமாக (CASH) ஏற்கமாட்டார்கள்.
அதேபோல் வெளிநாட்டு கரன்ஸிகளிலும் இந்தியாவில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய முடியாது. என்.ஆர்.ஈ / என்.ஆர்.ஓ கணக்குகளிலிருந்து காசோலையாகவோ அல்லது ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் மூலமாகவோ முதலீடு செய்து கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் என்.ஆர்.ஐ-களுக்கு உள்ள மிகப் பெரிய கவர்ச்சி என்னவென்றால், என்.ஆர்.ஈ கணக்கு மூலமாக முதலீடு செய்யும் பொழுது, தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு அப்பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் எடுத்துச் செல்லாம், அதைவிட மிகப் பெரிய கவர்ச்சி பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்து ஓராண்டிற்கு மேல் வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு பைசா கூட வரும் வருமானத்திற்கு, வரி செலுத்த வேண்டாம். இனிவரும் வாரங்களில் இவ்வகை முதலீட்டைப் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.
prakala@gmail.com