நாடே இப்போது குடிநோயாளியாகிவிட்டது. மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிற வாதம் சரியல்ல. மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது என்பதற்காக தீய செயல்களைச் செய்ய நாம் அனுமதிப்பதில்லை. திருடர்கள் தொடர்ந்து திருட நாம் அனுமதிப்பதில்லை. மது வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தில்தான் இந்நாட்டுக் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது இந்த நாட்டுக்கே அவமானம்.
அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசு கவலைப்பட்டுத் தயக்கம் காட்டினால், இந்த நாட்டில் மதுவிலக்கு என்பது எப்போதுமே சாத்தியம் இல்லாமல் போய்விடும். குடி என்பது பழக்கமல்ல, நோய். அதைக் குடிநோயாகத்தான் பார்க்க வேண்டும். புரட்சி என்றால் ஆயுதமேந்தித்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. அறிவில், சிந்தனையில் புரட்சி ஏற்பட வேண்டும். உடலையும் மனதையும் பாதிக்கும் குடிக்கு எதிராக மக்களிடையே புரட்சி எழ வேண்டும்.”
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் காந்தி எழுதியவற்றின் சாரத்தைத்தான் மேலே பார்த்தீர்கள். சூழலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், ஒட்டு மொத்தச் சமூகமும் கைகோக்க வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கி நீட்டப்பட்ட கைகளுள் ஒன்றுதான் இந்தத் தொடர்.
தமிழகத்துக்கு இது இருண்ட காலம்! மிகைப்படுத்தவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, பூட்டியிருக்கும் கடைக்கு முன்பாக யாரும் காத்திருந்து குடித்ததில்லை என்பதையும் இன்று அதிகாலையிலேயே அல்லாடுகிறார்களே என்பதையும் யோசித்துப்பாருங்கள்!
தமிழக மக்கள்தொகையான ஏழு கோடி குடிநோயால் பாதிக்கப்பட்ட வர்கள் சுமார் ஒரு கோடிப் பேர் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், குடிநோயாளிகள் அந்த ஒரு கோடிப் பேர் மட்டும்தானா? குடிநோய் என்பது குடும்ப நோய், சமூக நோய். குடிநோயாளிகளின் எண்ணிக்கையைக் குடிநோயாளிகளை மட்டும் கொண்டு கணக்கிடக் கூடாது. குடிநோயாளிகளால் பாதிக்கப்படும் நபர்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். ஒரு நபர் குடிப்பதால், அவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை; அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் - மனரீதியாக, உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக.
என்ன நடக்கிறது இங்கே?
யார் காரணம் இதற்கெல்லாம்?
மதுவின் பிடியிலிருந்து நம் தமிழகத்தை மீட்க என்ன செய்யப்போகிறோம் நாம்?
இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தேடும் பயணம் இது!
வரும் வாரம் முதல்…
திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் நடுப்பக்கங்களில்…
காத்திருங்கள்!