தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமையான சக்தி வை.கோவிந்தன் (1912-1966) பதிப்புலகிலும் பத்திரிகை உலகிலும் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்திய சாதனையாளர். இன்று அவர் பிறந்த தினம். புத்தகங்கள் குறித்து 1941-ல் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம்.
மக்களுக்குப் பயன்படும் பொருள்கள் பலவற்றுள் புத்தகங்கள் மிகச் சிறந்தன என்பது அறிஞர் கருத்து. புத்தகங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: நேரத்துக்கு ஏற்றவை, எக்காலத்துக்கும் ஏற்றவை என்று அவை இருவகைப்படும். ஆனால் கெட்ட புத்தகங்களே நேரத்துக்கு ஏற்றவை என்றும், நல்ல புத்தகங்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை என்றும் சொல்ல முடியாது. நல்ல புத்தகங்களே நேரத்துக்கு ஏற்றவையாகவும் இருக்கலாம்: எக்காலத்துக்கும் ஏற்றவையாகவும் இருக்கலாம். கெட்ட புத்தகங்களுக்குள்ளும் நேரத்துக்கு ஏற்றவையும் எக்காலத்துக்கும் ஏற்றவையும் இருக்கலாம்.
இனி, நேரத்துக்கு ஏற்ற நல்ல புத்தகங்கள் இன்னவை என்பதைப் பார்ப்போம். மனத்துக்கு மகிழ்ச்சியைத் தரும் சில அறிவாளிகளின் பேச்சுக்களைக் கேட்பதற்கு நமக்குச் சமயம் வாய்க்காமல் இருக்கலாம். அந்தப் பேச்சுக்களில் இந்தக் கால சரித்திர சம்பந்தமான செய்திகளும் பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்வதால் விளையும் பலன்களும் இன்ன பிறவும் கலந்திருக்கலாம். அவை அச்சு வாகனத்தில் ஏறி அழகிய புத்தக வடிவத்தில் வெளிவருகின்றன. அந்தப் பேச்சாளருக்கும் அந்தப் பேச்சுக்களை எல்லோரும் படித்து உணரும்படி செய்யும் பதிப்பாளருக்கும் நமது மனமார்ந்த நன்றியைச் செலுத்தாதிருக்க முடியாது. ஆனால், இந்தப் புத்தகங்கள் உயிருக்கு நன்மை பயக்கும் உயர்ந்த புத்தகங்களின் இடத்தை அபகரித்துக்கொள்ளுமானால், நாம் புத்தகங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையறியாக் கீழ்மக்கள் ஆகிவிடுவோம். உண்மையை உரைக்குங்கால், மேலே கூறிய நேரத்துக்கு ஏற்ற புத்தகங்கள், ‘புத்தகங்கள்’ என்ற பெயரைத் தாங்குவதற்கு உரியன அல்ல என்றே துணிந்து சொல்லலாம். அவற்றை ‘நன்றாய் அச்சடித்த கடிதங்கள்’ என்றும் ‘செய்தித்தாள்கள்’ என்றுந்தான் குறிப்பிட முடியும். நம் நண்பர்கள் நமக்கு எழுதும் கடிதங்கள், படிக்கும் அன்று நமக்குப் பரமானந்தத்தை விளைவிக்கலாம். ஆனால், படித்த பின்பு அவற்றைப் பாதுகாப்பதா, கிழித்தெறிவதா என்பது சிந்திக்க உரியது. செய்தித்தாள்களும் அப்படியே. இவையெல்லாம் புத்தகங்கள் ஆக மாட்டா. புத்தகங்கள் என்பவை முற்றும் உணர்ந்த அறிவுடைப் பெரியோர்கள், ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்பு என்றும் நிலைபெற்றிருக்கும்படி எழுதுபவை.
புத்தகங்களை ஓதாது உணர்விக்கும் ‘மௌன குருக்கள்’ என்று அழகாய் வர்ணித்திருக்கிறார் ஓர் ஆங்கிலப் பேரறிஞர். புத்தகங்கள், மௌன குருக்கள் மாத்திரம் அல்ல; நாம் துயருற்ற சமயங்களில் அவை நம்மைக் களிப்பித்துத் தேற்றும் தோழர்களாகவும் சங்கடங்களிலே குழம்பிய மனத்தைத் தெளிவித்து வழிகாட்டும் தத்துவதரிசிகளாகவும் உலக இயல்புகளை விளக்கிக் காட்டும் ஞானவிளக்குகளாகவும் சென்ற கால ஞாபகச் சின்னங்களாகவும் நிகழ்கால நிலைக்கண்ணாடிகளாகவும் வருங்காலத் தீர்க்கதரிசிகளாகவும் பொலிகின்றன.
மனித நாகரிகத்திலே புத்தகங்கள் ஒரு முக்கிய அங்கமாகி விட்டன. மனித நாகரிக வளர்ச்சிக்குப் புத்தகங்கள் முக்கிய சாதனமும் ஆகிவிட்டன. அச்சியந்திரம் கண்டுபிடித்தான பின்பு, இத்தகைய அரிய சாதனமான நூல்கள் எண்ணிறந்த அளவில் பிறந்து வளர்ந்துவருகின்றன. அரிய பழைய நூல்கள் புதியபுதிய பதிப்புகளைப் பெற்று நிலைத்துவருகின்றன. காலத்துக்கேற்ற புதுப்புது நூல்களும் தோன்றிவருகின்றன.
நல்ல புத்தகங்கள் மட்டுமே வெளிவருகின்றன என்று சொல்வதற்கில்லை; உபயோகமில்லாத கண்டகண்ட புத்தகங்களும் வெளிவந்துவிடுகின்றன. இது ஓரளவு கருத்துச் சுதந்தரத்தினால் விளையும் தீமை. ஆகவே, ‘கருத்துச் சுதந்தரம் கூடாதா, கண்டிப்பும் கட்டுப்பாடும் நூல் எழுதுவதில் ஏற்பட வேண்டுமா?’ என்றால், அப்படிக் கூற முடியாது. ‘நல்லவை வெல்லும், அல்லவை மாயும்’ என்று நாம் முழுதும் நம்ப வேண்டும்.
பயனற்ற புத்தகங்கள், பத்திரிகைகள், நடையுடை பாவனைகளின் இழிவு அத்தனைக்கும் இதே மாதிரி ‘பொதுமக்களின் சுவை கீழ்த்தரமாகிவிட்டதே காரணம்’ என்று சொல்லி அவர்கள் மீதே பழிபோடுவார் அநேகர். ஆனால், இதுவே முழு உண்மையும் ஆகுமா? இதில் சிறிதளவு உண்மை உண்டு; ஆனால், இது முழு உண்மையில்லை.
பொது ஜனங்களின் ருசி என்பது எப்படிப்பட்டது? கலைகள், இலக்கியங்கள் அனைத்தும் முற்றும் பொது ஜனங்களுடைய ருசியின் பிரதிபிம்பங்கள்தானா? பொதுஜனங்களின் தகுதி என்னவோ, அவர்கள் விரும்புவது எதுவோ, அதைத்தான் இலக்கியத் துறையிலும் பிற கலைத் துறைகளிலும் அவர்கள் பெறுகிறார்களா?
பொது ஜனங்களின் ருசி என்பது ஆழந்தெரியாத சமுத்திரம்; அது எக்காலத்தும் எல்லா இடத்தும் ஒரே நிலையாக இருப்பதில்லை. சொல்லப்போனால் எங்குமே, எக்காலத்துக்குமே பொதுஜன ருசி திட்டமான ஒரு ரூபம் கொண்டிருப்பதில்லை. சந்தர்ப்ப பேதங்களாலும் விளம்பர வலைகளாலும் வீர வணக்கக் குணத்தாலும் பொதுஜனங்கள் அடையும் ஒரு கவர்ச்சியையே அவர்களின் ருசியென்று நாம் மயங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மூன்று அம்சங்களையும் கலக்கித் தன் வழி இழுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் வல்லமை உள்ள மனிதன், பொதுஜன ருசியையே மாற்றிவிடுகிறான்.
‘பொதுஜனங்களின் ருசி, பொதுஜனங்களின் ருசி’ என்றே சதா ஜபம் செய்துகொண்டிராமல், நம் இலக்கிய ஆசிரியர்கள் - ஏன், சகல கலைஞர்களுமேதான் - தங்கள் அறிவுக்கும் தனியியல்புக்கும் இசைந்த புதியபுதிய சிறப்பு வாய்ந்த சிருஷ்டிகளைப் புரிய முன்வந்தால் அவற்றுக்குப் பெயரும் புகழும் கிடைப்பது நிச்சயம்.
நன்றி: சக்தி வை. கோவிந்தன் - பழ. அதியமான் (காலச்சுவடு வெளியீடு)