வீட்டுப் பணிப்பெண்ணுக்குச் சட்டப்படி அளிக்க வேண்டிய ஊதியத்தை அளிக்காததால், அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி கோபர்கடே விவகாரம் இந்திய ஊடகங்களில் சமீப நாட்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
ஒரு தூதரக அதிகாரிக்கான அந்தஸ்தை அளிக்காமல், கையில் விலங்கு போடப்பட்டு ஒரு சாதாரணக் குற்றவாளிபோல நடத்தப்பட்டார் என்று இந்திய அரசு அமெரிக்க அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.
ஒருமித்த குரல்
அமெரிக்க அரசு, இந்தியத் தூதரக அதிகாரியை நடத்திய விதத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான சிறப்புச் சலுகைகளை உடனடியாக ரத்துசெய்துள்ளது.
டெல்லி அமெரிக்கத் தூதரக அலுவலகத்தின் முன்பு வாகனங்கள் விடுவதற்காக இருந்த சிறப்புத் தடுப்புகளை அகற்றியுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தேவயானி சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'சாதாரண' பணிப்பெண் விவகாரம்
ராகுல் காந்தி, அமெரிக்க அரசைக் கண்டிக்கும் விதமாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சம்பிரதாய சந்திப்பைக் கூட மறுத்திருக்கிறார். நரேந்திர மோடி ஒருபடி மேலாகச் சென்று, இந்த விவகாரத்தில் தேசபக்தி அரசியலைக் கிளப்பினார்.
"தேவயானியை இந்தியா அழைத்துவர முடியாவிட்டால், நாடாளுமன்றத்தின் படியேற மாட்டேன்" என்று சபதம் போட்டிருக்கிறார் சல்மான் குர்ஷித்.
"ஒரு 'சாதாரண' வீட்டுப் பணிப்பெண் விவகாரத்துக்கு இத்தனை பெரிய தண்டனையா? வெறும் சம்பளக்கூலி தொடர்பான விஷயம் ஒரு குற்றமா?" என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கொந்தளிக்கிறார்.
உயர் அந்தஸ்துள்ள இந்திய அதிகாரிக்கு அவமானம் இழைக்கப்பட்டுவிட்டது என்ற கோபம்தான் இங்கு பெரும்பாலும் பிரதிபலிக்கிறது. இந்தியத் தூதரக அதிகாரி தேவயானியைக் கைதுசெய்யும்போது நேரிட்ட அடிப்படை மனித உரிமை மீறல்களும் அமெரிக்காவின் அத்துமீறல்களும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவை. இது தொடர்பான நம்முடைய கோபம் நியாயமானது; ஆனால், ஏன் அந்த கோபம் பாதிக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண் விஷயத்திலும் நீளவில்லை?
இந்தியத் தூதரக அதிகாரியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணிப்பெண்ணும் இந்தியர்தான். அமெரிக்கச் சட்டத்தின்படி, வீட்டுப் பணிப்பெண்ணுக்கு அளிக்கப்பட வேண்டிய குறைந்தபட்சக் கூலியைவிடக் குறைவாக அளித்து, சொல்லப்பட்டதைவிட அதிக நேரம் வேலையையும் அவர் செய்யவைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 'உரிமைகளற்ற குடிமக்களாக' கருதப்படும் வீட்டுப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை அமெரிக்கச் சட்டங்கள் உறுதிசெய்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்கா போன்ற நாட்டிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.
முன்னுதாரணங்கள்
வீட்டுப் பணியாளர்களை இந்தியர்கள் வெளிநாட்டில் முறைகேடாக நடத்தியதற்காகத் தண்டனைக்குள்ளாகும் முதல் வழக்கு அல்ல இது. 2011-ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் தலைமைத் தூதர் பிரபு தயாள், கட்டாய வேலைக்குத் தனது பணியாளை உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க் தூதரகத்தில் பணியாற்றிய இந்திய ஊடக, கலாச்சார ஆலோசகர் நீனா மல்ஹோத்ரா, தனது பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதற்காக 1.5 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டார்.
இவர்களைப் போன்ற வசதியுடையவர்கள், தங்கள் வீட்டுப் பணியாளர்களை நடத்தும் விதம் எதுவும் இந்தியாவில் குற்றமே அல்ல. உடல் உழைப்புப் பணிகள் மற்றும் வீட்டுப் பணிகள் செய்பவர்கள் மூன்றாம் தரக் குடிமக்களாகத் தொன்றுதொட்டு நடத்தப்படும் நாடு இது.
கொத்தடிமைத் தொழிலாளர்கள் தொடர்பாக உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் நவீனக் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 1.5 கோடி தொழிலாளர்கள் எஜமானர்களால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக உலக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 'நியாயமான கூலி வழங்கல் தரச் சட்ட'த்தின்படி குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் பணிநேர ஊதியம், தொழிலாளர் விவரங்களைப் பேணுதல், குறைந்தபட்ச வாழ்க்கைத்தரம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த உயர்நிலைத் தூதரக அதிகாரி தேவயானியை, மோசமாக நடத்தியதாகக் கூறும் அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ஏன் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விஷயங்கள்குறித்துப் பொருட்படுத்துவதுகூட இல்லை?
தொழிலாளர் விஷயத்தில் கோபம் வராதா?
சென்னை போன்ற பெருநகரங்களில் வடமாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து அடிப்படை வசதிகள், சம்பளம் மற்றும் உயிர்ப்பாதுகாப்பு மறுக்கப்பட்டு வாழும் தொழிலாளர்கள் விஷயத்தில் ஏன் இத்தனை கோபம் இந்தியத் தலைவர்களுக்கு எழுவது இல்லை?
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் வீட்டுப் பணியாளர்கள் இன்னும் சேர்க்கப்படவே இல்லை. இந்தியாவில் கர்நாடகமும் கேரளமும் மட்டுமே வீட்டுப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தைக் குறைந்தபட்சம் 191 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. மற்ற மாநில அரசுகள் அதைக்கூட இன்னும் நிர்ணயிக்க முன்வரவில்லை.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அடிமட்டத் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களை நாம் நடத்தும் விதம், கொடுக்கும் சம்பளம், அவர்களின் வாழ்க்கைத்தரம் குறித்து நாம் நமது இதயம் திறந்து பரிசீலிக்கவும் விவாதிக்கவும் வேண்டும்.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@kslmedia.in