*
அறிவுலகத்தின் சொர்க்கமான சென்னைப் புத்தகத் காட்சி கொண்டாட்டத்துடன் தொடங்கிவிட்டது. தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 39-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, இந்த முறை தீவுத்திடலில் நடக்கிறது. ஜூன் 13-ம் தேதி வரை நடக்கும் புத்தகக் காட்சி, வார நாட்களில் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை, வாசகர்கள் தங்கள் புத்தக வேட்டையை நடத்தலாம்.
இலக்கிய வாசகர்கள், மாணவர்கள் என்று பலதரப்பினரிடமும் புத்தகங்களைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், 39 ஆண்டுகளுக்கு முன் சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்ட தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம், அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து புத்தகக் காட்சியை வெற்றிகரமாக நடத்திவருகிறது. கடந்த டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தில் பதிப்புலகமும் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடத்தப்படும் புத்தகத் திருவிழா, இந்த ஆண்டு தாமதமாக நடத்தப்படுவதற்கான காரணம் இதுதான். நான்கைந்து மாதங்கள் தாமதமாகத் தொடங்கினாலும் கடந்த முறை பபாசியிடம் இருந்த அதே உற்சாகம் இப்போதும் தெரிகிறது.
சுமார் 700 பதிப்பகங்கள், 10 லட்சம் தலைப்புகள், 30,000 புதிய புத்தகங்கள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சியில், சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சிகள்
புத்தகத் திருவிழாவில் சென்னை தினம், எழுத்தாளர்கள் சந்திப்பு தினம், குழந்தைகளுக்கான தினம், ஊடக தினம் என்று ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன. எழுத்தாளர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் வழக்கம். இந்த முறை குழந்தைகள் இலக்கிய வாசிப்பு, குழந்தைகளின் கலந்துரையாடல், குழந்தைகள் எடுத்த குறும் படங்கள் திரையிடல் என்று குழந்தைகளின் படைப்புலகத்துக்குப் பெரும் மரியாதை செய்யப்படுகிறது. அப்துல் கலாம் அரங்கு, சிறுவர்களுக்கான வானியல் பயணக்காட்சிகள், ஓவியப் பயிற்று அரங்கு, இசை, நடன நிகழ்ச்சிகள் என்று புத்தகக் காதலர்களுக்குப் புத்துணர்வூட்டும் விஷயங்கள் பல உண்டு ‘கெஸ்ட் ஆஃப் ஆனர்’ என்ற முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டைக் கவுரவப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, இந்தப் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்காக இலவசமாக ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
விருதுகள்
புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது முனைவர் இ.சுந்தரமூர்த்திக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது எஸ்.ரகுபதிக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது எஸ்.சிவபாரதிக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது எ.சோதிக்கும், சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது குமரன் பதிப்பகத்துக்கும், சிறந்த விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது நியூ புக் லேண்டுக்கும், பபாசி- சிறந்த நூலகர் விருது டாக்டர் ஆர்.கே.அருள்ஜோதிக்கும் வழங்கப்பட்டன.
தொடக்க நிகழ்ச்சி
புத்தகக் காட்சியை நல்லி குப்புசாமி தொடங்கிவைத்துப் பேசினார். இந்தியப் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி.சேத்தி, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்். சென்னைப் புத்தகக் காட்சி சிறப்பு அஞ்சல் உறையை அஞ்சல் துறையின் சென்னை மண்டலத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வெளியிட, நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். சங்கத்தின் முன்னோடிகள் என்.ஏ.வி.சுப்பிரமணியன், ரவிசோப்ரா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். நிறைவில் செயலாளர் கே.எஸ்.புகழேந்தி நன்றி கூறினார்.
புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்கள்
* தீவுத்திடல் வழியே செல்லும் மாநகரப் பேருந்துகள் புத்தகக் காட்சிக்காக நின்று செல்லும் வகையில் அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. கால் வலி மிச்சம்!
* சென்ற முறை போலவே இந்த முறையும் சீசன் டிக்கெட் உண்டு. ரூ.50-க்கு வாங்கினால் புத்தகக் காட்சி நடக்கும் எல்லா நாட்களுக்கும் போய்வரலாம். வாங்கியவர்தான் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தலாம்.
* புத்தகக் காட்சியின் அரங்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்குத் தனிச் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. செல்பேசியிலேயே விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
* பணம் தேடி அங்குமிங்கும் அலைய வேண்டாம். நான்கு ஏடிஎம்கள் இருக்கின்றன.
* உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவக் குழுவும் 108 ஆம்புலன்ஸும் தயாராக இருக்கும்.
* ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளைக் களைய பிஎஸ்என்எல்லிடமிருந்து 100 சிறப்பு இணைப்புகள் பெறப்பட்டிருக்கின்றன.
* வாகன நிறுத்தம் பற்றி வருத்தமே வேண்டாம். 5,000 கார்கள், 5,000 இரு சக்கர வாகனங்களை நிறுத்த நிறைய இடம் உண்டு.