அரை நூற்றாண்டுக்குப் பிறகு மெருகேற்றப்பட்ட ‘கர்ணன்’ படம் மறுபடியும் காட்சிக்கு வந்தபோது கொட்டகைகள் நிரம்பி வழிந்தன. காரணம் என்ன? கர்ணன் என்ற மகாபாரத கதைச் சித்திரம் எப்போதுமே சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டது. கர்ணனது குணச்சித்திரங்கள்பற்றிய பட்டிமன்றங்களில் விவாதங்கள் கனல் தெறிக்கும். அவனது இளமை வாழ்க்கை பரிதாபத்துக்கு உரியது. பிறப்பின் ரகசியத்தைப் புரிந்துகொண்ட பின் அவன் பட்டபாடு யாருக்கும் வரக் கூடாது. பாரதப் போரில் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அவன் எடுத்த நிலைபற்றி பாடிய கண்ணதாசனின் பாடல் வரிகள் இவ்வாறு முடியும்:- “சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா…”
நீதிபதி கதை
இன்றைக்கு அதே பெயரிலுள்ள நீதிபதி ஒருவரின் பெயர் ஊடகங்களில் தினசரி அடிபடுகிறது. 2009-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கர்ணன், தற்போது அங்குள்ள 47 நீதிபதிகளின் மூத்த வரிசையில் 24-வது இடத்தை வகிக்கிறார். 2011-ல் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்த அவர், அங்குள்ள நீதிபதிகளில் சிலர் குறுகிய மனப்பான்மை படைத்தவர்கள் எனவும், தானொரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதனாலேயே தன்னை மதிப்பதில்லை என்றும், அதைப் பற்றி எஸ்.சி./எஸ்.டி ஆணையத்திடம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் கூறினார். கடந்த வருடம் உயர் நீதிமன்ற பொதுத்தகவல் அதிகாரியிடம் சில நீதிபதிகள்பற்றி தகவல்கள் கேட்டு, தன் பெயரில் மனுக்கள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இம்மாதம் 21-ம் தேதி இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்றில் உயர் நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனப் பட்டியல் குறித்த வழக்கு நடைபெறும்போது, அந்நீதிமன்ற அறையில் நுழைந்து தனக்கும் அப்பட்டியல்பற்றி கருத்திருப்பதாகவும், அதுகுறித்து தானும் வழக்கு தொடுக்கவிருப்பதாகவும் அவர் கூறிச் சென்றது மிகப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
கர்ணனின் நடவடிக்கை பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராயப்பட்டது. சில வழக்கறிஞர்கள் அவரது செயல் அவர்களது கோரிக்கை நியாயத்தை வலுப்படுத்தியதாகவும், எனவே அவர் வரலாறு படைத்ததாகவும் கூறினர். நீதிபதிகளுக்கே ஆலோசனை வழங்குமிடத்தில் இருக்க வேண்டிய மூத்த வழக்கறிஞர் காந்தி, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கர்ணனுடைய நடவடிக்கை வழக்கறிஞர் சமூகத்துக்கு மாபெரும் சேவை என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.
கசிந்த கடிதம்
இதற்கிடையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் இந்தியத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் கசியவிடப்பட்டது. அதில் “கடந்த 8-ம் தேதி நான் எனது அறையில் நிர்வாகப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் வேகமாக வந்து என்னை அவதூறாகப் பேசியதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டினார். என்னால்தான் வழக்கறிஞர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் அமைதியாகத்தான் இருந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் சேர்ந்த நாளில் இருந்து இதுவரை நீதிபதி கர்ணனைப் பற்றி சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் என்னிடம் புகார் கொடுத்துள்ளனர். அவரது நடத்தை, தலைமை நீதிபதியின் மாண்பைக் குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கர்ணனின் பதில் கடிதம்
இதற்குப் பதிலளிக்கும் முகமாக நீதிபதி கர்ணன் “என் மீது பல வழக்கறிஞர்களிடமிருந்தும், நீதிபதிகளிடமிருந்தும் புகார்கள் வந்ததாகத் தாங்கள் வெளியிட்ட தகவல்கள் கடந்த 16-ம் தேதி பத்திரிகைகளில் வெளிவந்தது. என் மீது கூறப்பட்ட புகார்கள் தொடர்பான ஆவணங்கள் இருந்தால் உரிய பதில் தரவும், குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை நிலையை அளவிடவும் வசதியாக இருக்கும்” என்று கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் மறுபடியும் ஓர் அறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் பொதுநலன் கருதியே தான் இப்பிரச்சினையில் தலையிடுவதாகவும், இதுபற்றி ஒரு பொது விவாதத்தில் தான் கலந்துகொள்ள தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டம் என்ன சொல்கிறது?
நீதிபதி நியமனங்கள் குறித்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், பதவியிலுள்ள நீதிபதி ஒருவரே இதுபோன்ற விஷயங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி நியாயம் கேட்க முடியுமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 220-வது பிரிவில் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிரந்தர நீதிபதி ஒருவர் அந்நீதிமன்றத்திலும், அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் வாதாடவோ மனுக்கள் தாக்கல் செய்யவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிக்கே இந்தக் கதியென்றால், தற்போது பணியிலுள்ள நீதிபதியின் நிலைமை என்ன என்று சொல்லத் தேவையில்லை.
1997-ல் நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் ‘நீதி வாழ்வின் விழுமியங்கள்’பற்றி வலியுறுத்தும் விதமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டம் அத்தீர்மானத்தை 2006-ல் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்தீர்மானத்தில், எட்டாவது பத்தி சொல்வது இது: “ஒரு நீதிபதி பொது விவாதத்தில் ஈடுபடுவதும், அரசியல் அல்லது மற்ற விஷயங்களில் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்வதும் தவறு. மேலும், இருப்பிலுள்ள வழக்குகள் பற்றியோ அல்லது எதிர்காலத்தில் நீதிமன்றத் தீர்வுக்கு வரக்கூடிய பிரச்சினைகள்பற்றியோ கருத்து கூறுவது தவறு. அதன் அடுத்த பத்தி என்ன சொல்கிறது என்றால், ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதும் தவறு என்று சொல்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன?
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தவறான நடத்தையில் ஈடுபட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு மிகக் கடுமையான வழிமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பேர் பங்கு கொண்ட கூட்டத்தில், பெரும்பான்மையான வாக்குகள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமே, தவறான நடத்தையில் ஈடுபட்ட நீதிபதியைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியும். இதுவரை இந்திய வரலாற்றில் அப்படிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீதிபதி யாரும் கிடையாது. ஓரிருவர் நாடாளுமன்ற இறுதி ஓட்டெடுப்புக்கு முன் பதவியை ராஜினாமா செய்து தங்களது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலும், புகாருக்குள்ளாக்கப்பட்ட நீதிபதிகளை வேறு உயர் நீதிமன்றங்களுக்கு ஊர்மாற்றம் செய்து நிலைமையைச் சமாளிக்க முற்பட்ட சம்பவங்களே உள்ளன. ஆனால், இந்நடைமுறை திருப்திகரமான நடைமுறை மட்டுமல்லாது, புகார் நீதிபதி மற்றொரு நீதிமன்றத்தில் எப்படி வரவேற்கப்படுவார் என்பது கேள்விக்குரியது.
நீதிமன்ற நடைமுறைகளில் இருப்பிலுள்ள நீதிபதிகள் மீது புகார் கூறி மேல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லையா? 1995-ல் ரவிச்சந்திரன் ஐயர் போட்ட வழக்கில், உச்ச நீதிமன்றமே அதற்கான வழிவகை செய்துள்ளது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது புகார் கூற வேண்டும் என்றால், அதை இந்தியத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கவும் அதன் மீது அவர் மேல் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இப்புகார்களை பொது மேடை விவாதமாக்காமல், அதற்கான நேரடி நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த அறிவுரை பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்று சொல்லத் தேவையில்லை.
எனவே, நீதிபதிகள் ஆராய்ச்சி மணிகளை அணுகாமல் இருப்பதே பொதுநலன் காக்கும்.
சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர்