*
நதி நீர் விணாகக் கடலில் கலக்கிறது என்று அடிக்கடி சொல்கிறார்கள். அபத்தம் அது. நமக்கு பயன்படாமல் மிகையாக கடலில் கலந்தால்தான் அது பிழை. அதுவும் மனிதப் பிழையே. மழை நீர் மண்ணின் தேவைக்குப் போக கடலுக்குச் செல்ல வேண்டும். அது ஆவியாகி மழையாகப் பொழிகிறது. நீரியல் சுழற்சி இது. இந்த அறிவியல் உண்மையை சங்க காலத்திலேயே நம் முன்னோர் அறிந்திருந்தார்கள்.
இதைத்தான்,
‘வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தின்று நீர் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்’
- என்கிறது பட்டினப்பாலை.
ஆனால், நதியின் நீர் கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்ததால் ஏற்பட்ட பேரழிவை அறிவீர்களா? ஒருகாலத்தில் ஏரல் என்றோர் ஏரி இருந்தது. உப்பு நீர் வடிகால் அது. கடல் என்றும் சொல்வார்கள். சொல்வது என்ன? கடலேதான் அது. பரப்பளவு மொத்தம் 68,000 சதுர கி.மீ. காஸ்பியன் கடலில் பாதி அளவு அது. ஏரலுக்குள் 1,100 சிறு தீவுகள் இருந்தன. 2-ம் உலகப் போரில் ஹிட்லரை எதிர்க்கொள்ள ஏராளமான போர்க் கப்பல்களை ரஷ்யா இங்கே நிறுத்தியிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தஸ்கிஸ்தான், கிரிஜிஸ்தான், ஆப்கன் மலைத் தொடர்களில் உற்பத்தியாகும் சைர்தர்யா மற்றும் அமுதர்யா ஆறுகள்தான் ஏரலின் நீர் ஆதாரங்கள்.
1960-களில் மத்திய ஆசியாவில் தொழில் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. சோவியத் யூனியன் பருத்தி உற்பத்தியில் தீவிர ஆர்வம் காட்டியது. 1960-ல் 10 லட்சம் ஹெக்டேராக இருந்த அதன் பருத்தி சாகுபடி பரப்பு 1980-ல் 70 லட்சம் ஹெக்டேராக உயர்ந்தது. நீரின் பயன்பாடு 120 கியூபிக்காக அதிகரித்தது. பாசனத்துக்காக சைர்தர்யா, அமுதர்யா ஆறுகள் திசை திருப்பப்பட்டன. வெறிகொண்டு நுகரப்பட்டது ஆற்று நீர். கடலுக்கு நீர் செல்லவே கூடாது என்று தடுப்புச் சுவர்கள் எல்லாம் கட்டினார்கள். நதிகள் தடம் மாறி, தடுமாறிப்போயின.
1960-க்கு முன்புவரை ஆண்டுக்கு சராசரியாக 55 பில்லியன் சதுர மீட்டர் நன்னீர் கடலுக்குச் சென்றுக் கொண்டிருந்தது. அது படிப்படியாக நின்றுபோனது. ஏரலின் நீர் மட்டம் 53 மீட்டரில் இருந்து 36 மீட்டராகக் குறைந்தது. ஏரலின் நீர்பிடிப்புப் பகுதியான சுமார் 5.5 லட்சம் ஹெக்டேர் பாலையானது. 60,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த 50 ஏரிகள் வற்றிப்போயின. ஏரல் 40,300 சதுர கி.மீ-க்கு உப்பு பாலையானது. இங்கு அடிக்கடி ஏற்படும் உப்பு தூசிப் புயலால் சுற்றுவட் டார நகரங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. சுவாச நோய்கள், எலும்பு நோய் கள், புற்றுநோய்கள் பெருகின. ஆயிரக் கணக்கான மக்கள் நோயில் மடிந்தனர்.
ஒருகாலத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் அளவுக்கு மீன் பிடிக்கப்பட்ட ஏரலில் இன்று ஓர் உயிரினம் இல்லை. 1988-ம் ஆண்டு ஏரலை இயற்கை பேரழிவாக ரஷ்யா அறிவித்தது. தொடர்ந்து 1991-ல் சோவியத் யூனியன் பிளவுபட்டபோது உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் வசம் வந்தது ஏரல். சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் ஏதேதோ செய்துவிட்டார்கள். ஏரலை மீட்க முடியவில்லை. மயான பூமியாகக் காட்சியளிக்கிறது ஏரல்.
ஏரல் மட்டுமல்ல; தொழில் புரட்சி, பசுமை புரட்சி காரணமாக உலகின் பல பகுதிகளில் நீரின் வேர்கள் அறுக்கப்பட்டு வருகின்றன. தொழில்புரட்சி காரணமாக 1972 - 1990 இடைப்பட்ட காலத்தில் சீனாவின் மஞ்சள் நதி ஆறு ஆண்டுகள் வற்றியது. 1990-களில் அதன் படுகை 700 கி.மீ தூரத்துக்கு வறண்டது. சீன வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 1997-ல் 226 நாட்கள் மஞ்சள் நதி வறண்டது. அதன் பின்பு மஞ்சள் நதி பாதுகாப்பு கமிஷன் உருவாக்கப்பட்டது. நதி படிப்படியாக மீட்கப்பட்டது. 2000-ம் ஆண்டு முதல் மஞ்சள் நதி ஒருமுறைகூட வற்றவில்லை.
1970-களில் பாகிஸ்தானின் தானிய உற்பத்தியை அதிகரிக்க சிந்து நதியில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டன. அநேக இடங்களில் நதியை திசை திருப்பினார்கள். பாகிஸ்தானின் 80 சதவீத பாசன நிலங்கள் இந்த நதியை நுகர்ந்தன. இதனால், ஆற்றின் கீழ்ப்பகுதி டெல்டாவுக்கும் கழிமுகப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. டெல்டா வில் 90 சதவீதம் அழிந்தது. கழிமுகங் களில் 3 லட்சத்து 44 ஆயிரம் ஹெக்டேராக இருந்த அலையாத்திக் காடுகள் 2 லட்சம் ஹெக்டேராக குறைந்தது. இதனால் 4 லட்சத்து 86 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களைக் கடல் கொண்டுவிட்டது. கழிமுகப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இன்று உலகெங்கும் வளர்ச்சியின் பெயரால் கடலுக்கு நன்னீர் செல்வது பல மடங்கு குறைந்துவிட்டது. கடலுக்குள் ஓடும் ஆறுகளான நன்னீர் நீரோட்டங்கள் அழிந்துவருகின்றன. நீரோட்டங்களை நம்பி வலசை செல்லும் ஆமைகளும் அழிந்துவருகின்றன. கடலின் நீரோட்டங்கள்தான் அதன் தட்பவெப்ப நிலையை சமநிலையில் வைத்து மழைப் பொழிவுக்கு உதவுகின்றன. ஆனால், உலகின் குப்பைத் தொட்டியாகிவிட்டது கடல். 1960-களில் இருந்து தென்கிழக்கு ஆசியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் ரசாயன உரங்களின் பயன்பாடு 16 மடங்கு (31.8 மில்லியன் டன்) அதிகரித்துள்ளது. உலகப் பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகம் இது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
முன்பு உரங்களில் இருந்து நைட்ரஜன் மட்டுமே கடலில் கலந்தது. சமீப ஆண்டுகளாக அதிகப்படியான பாஸ்பரஸும் கடலில் கலக்கிறது. இதனால் கடலில் நீர்ப்பூண்டுகளின் வளர்ச்சி அதிகரித்துவிட்டது. இவை கடல் நீரின் ஆக்ஸிஜனை அதிகளவு உட்கொள்கின்றன. இதனால், நீர் வாழ் விலங்கினங்கள் மூச்சு விட முடியாமல் திணறுகின்றன. திமிங்கிலங்கள் தொடங்கி நுண்ணுயிரிகள் வரை செத்து மடிகின்றன. பருவ நிலை மாற்றத்தால் வெள்ளத்திலும் வறட்சியிலும் லட்சக் கணக்கான மக்கள் சாகிறார்கள்.
நிலத்தில் ஓடும் நீரின் வேரை அறுப்பது மட்டும் பாவம் அல்ல; கடலில் ஓடும் நீரின் வேரை அறுப்பதும் பெரும் பாவமே.
ஆறுகளில் ஓடும் தண்ணீர், அணைகள், ஏரிகளில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு இத்தனை கனமீட்டர் அல்லது கனஅடி என்று குறிப்பிடுகிறோம். அதாவது எத்தனை மணி நேரம் தண்ணீர் தொடர்ச்சியாக ஓடியது என்பதைக் கொண்டு தண்ணீரின் அளவு கணக்கிடப்படுகிறது. அதன்படி ஒரு வினாடிக்கு ஒரு கனஅடி தண்ணீர் ஓடினால் ஒரு நாளில் மொத்தம் 86,400 கன அடி பாய்ந்திருக்கும். அணைகளில் ஏரிகளில் தேங்கியிருக்கும் நீர் மில்லியன் கனஅடி என்கிற அளவில் குறிப்பிடப்படுகிறது. ஒரு மில்லியன் கனஅடி என்பது 10 லட்சம் கனஅடியாகும். மிகப் பெரிய அணைகளில் தேக்கி வைக்கும் தண்ணீர் டி.எம்.சி என்கிற அளவில் குறிப்பிடப்படுகிறது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடியாகும். இவையே நீர் நிலைகள் சார்ந்த தண்ணீரின் அடிப்படை அளவீடுகள்.
(நீர் அடிக்கும்)