ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதில் இந்தியாவுக்குச் சரியான பார்வை வேண்டும் என்கிறார், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் சாய்தா முகம்மத் அப்தாலி. அது தொடர்பான தனது கருத்துகளை ‘ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா: ஒரு கொள்கை மாற்றம்’ எனும் பெயரில் ஒரு புத்தகமாகவும் அவர் வெளியிட்டுள்ளார். அவரது நேர்காணலின் பகுதிகள்:
ஒரு நாட்டின் தூதர் பதவியில் செயல்படுபவர் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் பற்றிப் புத்தகம் எழுதுவது வழக்கமில்லை. உங்களைத் தூண்டியது எது?
வழக்கத்துக்கு மாறானதைத்தான் செய்கிறேன் என்று தெரிந்துதான் செய்கிறேன். ஏனென்றால், நாங்கள் மிகவும் வழக்கத்துக்கு மாறான சூழலில் வாழ்கிறோம். எங்கள் நாட்டின் சூழல் பாதுகாப்பில்லாததாக, அபாயகரமானதாக இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடிந்தவரையில் முயன்றுகொண்டிருக்கிறோம். குறிக்கோளை அடைவதற்கு ஒருவர் ஆபத்தான விஷயங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எங்களுக்கான சுமுக தீர்வை உருவாக்குவதில் அதிகமான வெளியாட்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் எங்களின் நாட்டுக்கு இன்னுமொரு பிரச்சினை. ஆப்கானிஸ்தான் பற்றிய செய்திகளுக்கு ஏன் வெளிநாடுகளின் செய்தி நிறுவனங்களைச் சார்ந்திருக்கிறீர்கள் என்று நான் இந்தியாவின் ஊடகங்களைக் கேட்கிறேன். எங்களுக்குச் சின்ன அளவில்தான் திறன் இருக்கிறது. இருந்தாலும், இதுமாதிரி எதையாவது ஆரம்பித்துவைப்போமே என்று நினைத்துத்தான் இதை எழுதினேன்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்தாலொழிய, உங்கள் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் இல்லை என்கிறீர்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று சேர வேண்டும் என்பது மட்டும்தானா இது?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா அல்லது வேறு எந்த நாடாக இருக்கட்டும், ஆப்கானிஸ்தான் பற்றிய அவர்களின் தற்போதைய கொள்கைகளின் வடிவம் அந்தந்த நாடுகளின் நலன்களுக்குத் தீங்கு தருவதாகத்தான் இருக்கிறது. அதனால், இந்த நாடுகளின் கொள்கைகளின் வடிவம் அடுத்த கட்டத்துக்கு மாற்றம் காண வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
உதாரணமாக, ரஷ்யாவைப் பாருங்கள். ஆப்கானிஸ்தானுக்கு அது என்னதான் செய்யவில்லை? அது எங்களை ஆக்கிரமித்த நாடுதான். ஆனால், இன்று நாங்கள் நண்பர்கள். அவர்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அவர்களும் அதற்கேற்றாற்போல நல்லமுறையில் எங்களுக்கு ஒத்துழைக்கிறார்கள். எங்கள் நலன்களுக்குத் தகுந்தாற்போல அவர்கள் நடந்துகொள்கின்றனர். இது ஒரு உதாரணம். ஒரு நாடு, கடந்த காலத்தில் என்ன தீமை செய்திருந்தாலும் அதன் காரணமாக, எந்த ஒரு நாட்டுக்கும் பயம் வரக் கூடாது. பயத்தை நமக்குப் பின்னால் தள்ளிவிட்டு நாம் முன்னேறுவோம்.
ஆப்கானிஸ்தானின் உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரகமதுல்லா நபில் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டார். பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தலிபான் களுக்கும் ஹக்கானி குழுவினருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை அவை வெளிப்படுத்தின. ராணுவரீதியாக உங்களுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிற பாகிஸ் தானோடு நீங்கள் எப்படி நெருங்குவீர்கள்?
சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் கள நிலவரங்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இன்றைய நிலையை நாம் எல்லோரும் சேர்ந்து எப்படி மாற்றப்போகிறோம் என்பதுதான் இன்றைய பிரச்சினை. என்ன மாதிரியான ஆவணங்கள் வேண்டுமானாலும் வெளியாகட்டும், அவற்றின் நம்பகத்தன்மை என்னவாகக்கூட இருக்கட்டும். அவை என்னை ஆச்சரியப்படுத்தாது. பல வருடங்களாகச் சம்பவங்கள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்.
தலிபானை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது என்பதை உங்கள் பேச்சின் சாரமாக எடுத்துக்கொள்கிறேன். உங்கள் புத்தகத்தில் நீங்கள் இந்தக் கொள்கையை ஒரு தற்கொலை என்கிறீர்கள். இதை விளக்குவீர்களா?
அது ஒரு வகையில் தற்கொலை செய்துகொள்வதைப் போலத்தான். பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவது, கடந்த காலத்தில் சிறு நன்மையை நாடுகளுக்குத் தந்திருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது பயன்படாது. அதே நேரத்தில், பயங்கரவாதத்தில் ஈடுபடும் எல்லா நாடுகளும் ஒரு விலை தர வேண்டும் என்பதாக இன்றைய நிலை மாறிவிட்டது.
ஒரு நாட்டிலிருந்து பயங்கரவாதம் ஏற்றுமதி செய்யப்படுவதால் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மட்டும் கிடையாது. எந்த இடங்களில் பயங்கரவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது? அவற்றுக்கான கருத்துகள் எங்கு உருவாக்கப்படுகின்றன? அவற்றுக்கு யார் நிதியுதவி செய்கிறார்கள்? யார் அதை ஆதரிக்கிறார்கள் என்பதும் பார்க்கப்பட வேண்டும். ஆகையால், நான் பாகிஸ்தான் பற்றி என்ன எழுதினாலும் அதை ஆழமான கவனத்தோடுதான் செய்வேன். பாகிஸ்தான் உள்ளிட்ட எந்தவொரு பக்கத்து நாடும் எங்களைப் போலத் தொந்தரவுக்கு உள்ளாவதை நாங்கள் விரும்பவில்லை.
பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொண்டால், இந்தப் பகுதியில் மாற்றம் ஏற்படும் என்ற வாதத்தை நாம் 15 -20 வருடங்களாகத் திரும்பத் திரும்பக் கேட்கிறோம் அல்லவா?
இதைப் போலவே திரும்பத் திரும்ப ஒரேமாதிரியாக வாதிடுவதும் செயல்படுவதும் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இத்தகைய போக்கால் உலகம் வெறுப்படைந்து விட்டது. பாகிஸ்தான் நண்பனா, எதிரியா என்ற விவாதம் முதல் தடவையாக அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்தது. அதனால், பல பத்தாண்டுகளாக ஒரே மாதிரியாக இந்த விவகாரங்கள் நடப்பது ஆப்கானிஸ்தானுக்கோ சர்வதேசச் சமூகத்துக்கோ ஏற்புடையதல்ல. ஆப்கானிஸ்தானுக்காகவோ சர்வதேசச் சமூகத்துக்காகவோ மட்டுமல்ல, பாகிஸ்தான் தனது சொந்த நலன்களுக்காகவேகூடத் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதம் வருவது பற்றிய விஷயத்தில் ஆப்கானிஸ்தானின் கவலைகளை இந்தியா பகிர்ந்துகொள்கிறது. ஆனாலும், பாகிஸ்தானுக்குத்தான் இந்தியா முதலிடம் தருகிறது என்று நீங்கள் இன்னும் சொல்கிறீர்கள்.
பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு இருக்கிற தவிப்பை இந்தியா புரிந்துகொள்வதில்லை. அந்த அளவுக்கு இந்தியா உதவாது என்பதாக ஆப்கானிஸ்தானில் ஒரு கணிப்பு இருக்கிறது. அதை உணர்ந்ததால்தான் அதனை நான் முன்வைத்திருக்கிறேன்.
வெளிப்படையாகச் சொல்கிறேன்.. சில நேரங்களில் எங்களின் வேண்டுகோள்கள் மிகவும் தாமதமாகின்றன. பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளைக் கணக்கில் கொண்டுதான் இந்தியா எங்களுக்கான தேவைகளைச் செய்துதருவதில்லை என்று தோன்றுகிறது.
பாதுகாப்பு விவகாரத்தில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட பல துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவில் இந்தக் கருத்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்பன போன்ற எல்லைகள் இருந்தாலும், இந்தியாவால் எங்களுக்கு உதவ முடியும் என்ற கருத்து உள்ளது.
இந்தியா எங்களுக்கு எவ்வளவோ செய்துள்ளது. அதற் காக நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். மற்றவர்கள் நம்ப முடியாத அளவுக்கு இந்தியா எங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது. இந்திய பிரதமர் இரண்டு முறை ஆப்கானிஸ்தான் வந்தபோது, ஆப்கன் மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டித்தருதல், சல்மா அணையைக் கட்டித்தருதல் போன்ற பல புதிய திட்டங்களும் வரிசையாக இந்தியா மூலம் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் பாதுகாப்பு தேவை என்றால், இந்தியா அதை வழங்க முன்வரலாம் என்று அமெரிக்காவின் முன்னாள் தூதரக அதிகாரி ஜல்மே காலிஷாத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதுபோல தேவை இருப்பதாக உணர்கிறதா?
நாங்கள் எங்கள் சொந்த ராணுவத்தை உருவாக்கி வருகிறோம். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத் திறன் வளர்வதால் மற்ற நாடுகளின் படைகள் திரும்பிப் போய்க் கொண்டிருக்கின்றன. அதனால், இந்தியாவின் உதவி தேவை என்பது உண்மைதான். ஆனால், எங்களுக்கு இந்தியப் படைகள் தேவையில்லை. வெளியிலிருந்து எந்த நாட்டின் படைகளும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எங்கள் படைகளைத்தான் பலப்படுத்த நினைக்கிறோம். அதைத்தான் தற்போது செய்துவருகிறோம்.
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: த.நீதிராஜன்