சிறப்புக் கட்டுரைகள்

பதவி உனக்கு, பாதுகாப்பு எனக்கு!

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் யார் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்கிறார் என்பதில் பாகிஸ்தானியர்களைக் காட்டிலும் மற்றவர்களுக்குத்தான் அக்கறை அதிகம். ஏனெனில் யாராவது ஒருத்தரை ஆஹா ஓஹோவென்று அதிபரோ, பிரதமரோ வானளாவப் புகழ்ந்து ராணுவத் தளபதியாக முடிசூட்டி வைத்தால், அடுத்த நிமிஷமே அன்னாருடைய நாற்காலியின் நாலு கால்களையும் உடைத்து நன்றி சொல்லுவது பாகிஸ்தானிய கலாசாரம்.

1958ம் ஆண்டு பாகிஸ்தானில் அதிபராக இருந்த இஸ்கந்தர் மிர்ஸா தேச நலன் கருதி அப்போதைய ஆட்சியைக் கலைத்து (பிரதமராக இருந்தவர் ஃபெரோஸ்கான் நூர்) ராணுவ ஆட்சியை அறிவித்தார். அப்போது ராணுவத் தளபதியாகவும் அதிபரின் பிராண சிநேகிதராகவும் அறியப்பட்ட அயூப்கான், நிர்வாகம் கைக்கு வந்த பதிமூணே நாளில் இஸ்கந்தர் மிர்ஸாவுக்குத் தண்ணி காட்டி அனுப்பிவிட்டுத் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்.

இப்படித்தான் ஜுல்ஃபிகர் அலி புட்டோவின் நம்பிக்கைக்குரிய ராணுவத் தளபதி ஜியா உல் ஹக் 1977ல் புட்டோவைப் பிடித்து உள்ளே தள்ளிவிட்டு ஆட்சியை அவர் எடுத்துக்கொண்டார்.

சரித்திரம் எதைச் சொல்லிக்கொடுக்கிறதோ அதைத்தானே சமகாலம் பின்பற்றும்? இதே நவாஸ் ஷரீஃப் 1997ல் பதவிக்கு வந்து ஒரு ரெண்டு வருஷம் நாராச ஆட்சி புரிந்த காலக்கட்டத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்து பர்வேஸ் முஷாரஃபைத் தலைமைத் தளபதியாக நியமித்து அழகு பார்த்தார். ரெண்டு வருஷம்தான். தளபதி தன் வேலையைக் காட்டிவிட்டார்.

பின்னர் முஷாரஃபுக்கும் ஒரு முடிவு வந்தது. நவாஸ் ஷரீஃபுக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. ராணுவ ஆட்சிக்காலத்தில் ஜனநாயகக் கனவுகளோடும், மக்களாட்சிக் காலத்தில் ராணுவக் கலைப்புகளோடும் சுதந்தரமடைந்த நாளாக இன்றைக்கு வரைக்கும் பாகிஸ்தானும் எப்படியோ பிழைப்பு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

போகட்டும். இப்போது ஜெனரல் ரஹீல் ஷரீஃப் பாகிஸ்தானின் தலைமைத் தளபதியாகப் பதவிக்கு வந்திருக்கிறார். நியமித்திருப்பவர் நமது நவாஸ் ஷரீஃப்தான். ஆறு லட்சம் வீரர்களைக் கொண்ட அகண்ட ராணுவத்தின் தலைமைத் தளபதிப் பொறுப்பு என்பது பாகிஸ்தானில் ரொம்பப் பெரிய பதவி. அதிபரோ, பிரதமரோ - வேண்டுமென்றால் மக்கள் தீர்மானிப்பார்கள். வேண்டாமென்பதை இந்தத் தளபதி பதவியில் இருப்பவர்தான் இதுநாள் வரை தீர்மானித்து வந்திருக்கிறார்.

பாகிஸ்தானில் இதுதான் பிரச்னை. ராணுவத்துக்கு அங்கே இரண்டு வேலைகள். ஒன்று காஷ்மீர். இன்னொன்று உள்நாட்டு ஆட்சியவலங்கள். தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் காஷ்மீர் விஷயத்தில் என்னத்தையாவது குட்டையைக் குழப்பிக்கொண்டிராவிட்டால் அங்கே மதிக்கமாட்டார்கள். அதனாலேயே எல்லா ராணுவத் தளபதிகளும் பொறுப்பேற்றதும் விடும் முதல் அறிக்கையில் காஷ்மீருக்கான தனது செயல்திட்டம் குறித்து சம்பிரதாயத்துக்காவது ஓரிரு வரிகள் பேசிவிடுவார்கள்.

அநேகமாக சரித்திரத்திலேயே முதல்முறையாக காஷ்மீர் குறித்து ஏதும் பேசாமல் தலிபான்களை முதல் டார்கெட்டாக வைத்துக்கொண்டு பதவிக்கு வந்திருக்கும் தளபதி இவர்தான். உடனடி மற்றும் மிகத் தீவிரப் பிரச்னையாக இன்றைக்குப் பாகிஸ்தானில் இருப்பது தலிபான்களே.

தலிபான்களின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான் தான் என்றாலும், அவர்களது நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானையே சார்ந்தது என்றாலும் பாகிஸ்தானையும் ஆப்கனையும் அவர்கள் பிரித்து யோசிப்பதே இல்லை. ஒன்று அம்மா வீடு. இன்னொன்று மாமியார் வீடு. இந்த க்ளோசப்பின் நேசப் பிணைப்பு ஊரறிந்த விவகாரம். ஏப்ரலில் ஆப்கானிஸ்தானில் பொதுத்தேர்தல்கள் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இரு இடங்களிலுமே தலிபான்களின் திருப்பணி அமோகமாக நடக்குமென்ற அச்சம் இரு தேசங்களிலுமே இருக்கிறது.

நவாஸ் ஷரீஃபுக்கு அந்த பயம்தான். தனது புதிய தளபதியிடம் அவர் இப்போது எதிர்பார்ப்பதும் அதைத்தான். சிக்கல் சிங்காரவேலர்களை என்னவாவது செய்து கட்டிப் போட்டு வையுங்கள். மொத்தமாக பார்சல் பண்ணி சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கவே முடியுமானால் உமக்கு சர்வ மங்களமும் உண்டாகும். அரசுக்கு உதவுங்கள். அரசையே அபகரிப்பதென்பது ஒருபோதும் உதவியாகாது. முந்தைய தளபதியைப் பாருங்கள். சமர்த்தாகப் பதவிக்காலத்தை முடித்துவிட்டு வீட்டுக்குப் போகிறார். அவர் உத்தமோத்தமர். அவர் வழியைப் பின்பற்றுங்கள். உமது சௌக்கியத்துக்கு நான் கேரண்டி.

ரஹீல் ஷரீஃப் என்ன செய்யப் போகிறார்? இன்று முதல் கவனிக்கலாம்.

SCROLL FOR NEXT