சிறப்புக் கட்டுரைகள்

நம் எல்லோர் மீதான தாக்குதல்

செய்திப்பிரிவு

தி கார்டியன் - பிரிட்டன் நாளிதழ் தலையங்கம்:

பிரான்ஸின் நீஸ் நகரில் நடந்த அந்த பயங்கரச் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதமும் இலக்கும் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்துவதாகவும், சக மனிதர் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அமைய வேண்டும் என்றே தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதச் செயல்தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், மனதளவில் எல்லோரும் அப்படியே கருதும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய தாக்குதல்களில் பலியாகிறவர்கள் பெரும்பாலும் அப்பாவிகள். கற்பனை செய்ய முடியாத பயங்கரம் தங்களை அணுகுவதை அறியாமல் கடைசி நொடிவரை கொண்டாட்டமாக இருந்தவர்கள். ரமலான் பண்டிகைக்காக பாக்தாத் நகரில் கூடியிருந்த ஷியா முஸ்லிம்கள் 159 பேர் கொல்லப்பட்டனர். பாரிஸ் கொண்டாட்டங்களில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிய 74 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். எந்த இடமும் பாதுகாப்பானது இல்லை. யாரையும் நம்ப முடியாது. பிரான்ஸ் தாக்குதலுக்குப் பயன்பட்ட ஆயுதமும் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு அச்சமூட்டுகிறது.

தெருக்களில் வரும் டிரக் வண்டிகள் தினமும் பார்க்கக்கூடியவைதான். நடைபாதையில் அவை ஏறுவதைத் தடுக்கக்கூடிய தடைகள் இல்லைதான். ஆனால், நாகரிகத்தின் வரையறைகளும் சாதாரணமான புரிதலும் இப்படியெல்லாம் தாக்குதல் நடக்கும் என்று நமக்குச் சொல்லித் தரவில்லை.

எல்லா விதமான தடைகளையும் போர் உடைத்தெறிகிறது. போரில் எல்லாமே ஆயுதமாகிறது. பயணியர் விமானங்களைப் பயன்படுத்தி 9/11 -ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு உதாரணம். பிரான்ஸ் தாக்குதல்கள் போல மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. பிரிட்டனில் நடக்கலாம். இங்கே நாம் இருப்பது அதிர்ஷ்டம். இந்த அதிர்ஷ்டம் எதிரிக்குத் தேவைப்படலாம். எனவே, நமக்கு எல்லா நேரமும் அதிர்ஷ்டம் வேண்டும்.

பிரான்ஸின் பாதுகாப்பு சில அம்சங்களில் பலப்பட வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கத்தைவிட, மின்னணுச் சாதனங்கள் விஷயத்தில் அது அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகள் யாரையும் உளவு பார்க்கலாம். யாருக்கு வருகிற எந்த ஒரு மின்னஞ்சலையும் அவர்கள் படிக்கலாம். இதற்காக எந்த நீதிபதியிடமும் அவர்கள் அனுமதி பெற வேண்டியதில்லை. ஒவ்வொருவரின் தொடர்புகள் பற்றியும் அவர்களால் துப்பறிய முடியும். இவ்வளவு இருந்தும் இது எதுவும் நீஸ் நகரில் நடைபெற்ற பயங்கரத்தைத் தடுக்க முடியவில்லை. பிரான்ஸிலும் ஐரோப்பாவிலும் உள்ள அமைப்புகள் தங்களுக்கிடையே போதுமான ஒருங்கிணைவோடு செயல்படவில்லை என்றும் இதைச் சொல்லலாம்.

காவல் பணிக்கு திறமையான முறையில் உளவறிதல் மிக முக்கியம். நம்பிக்கை இல்லையென்றால், உளவுப் பணி செய்ய முடியாது. இவ்விஷயத்தில் அதிகாரவர்க்க அமைப்புகளுக்கு இடையேயான மோதல்களைத் தீர்ப்பது கடினமானதாக இருக்கலாம். ஆனால், அவசிய மானது. அமைதியாகத் திட்டமிடுபவர் முதல் கோபம் கொண்ட போக்கிரி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று எல்லா வகையான மனிதரையும் இந்த வகைப் போர் பயன் படுத்துகிறது. ‘ஜிஹாதி’ தீவிரவாதம் இப்படித்தான் இருக் கும் என்ற நிலை இனி இல்லை. அதனால் பாதுகாப்புப் படையினரின் பணிகள் இனிமேல் கடினம்தான்.

பொதுவாக, மனிதர்களுக்கு இருக்கிற நாகரிகத் தன்மைக்கு எதிரான குற்றம்தான் நீஸ் நகரில் நடந்த அராஜகம். பாதிக்கப்பட்ட சாமானிய மக்களோடு சாமானியர்களாக நாமும் ஒன்றுபட்டு நிற்போம்.

SCROLL FOR NEXT