சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் ஒரு சட்டம், ‘எதிரி சொத்துப் பாதுகாப்பு அவசரச் சட்டம்’! இந்தச் சட்டம் ஐந்தாவது முறையாக அவசரச் சட்டத்தின் வடிவிலேயே கொண்டுவரப் பட்டிருப்பதுதான் சர்ச்சைக்குக் காரணம். இந்தச் சட்டம், மீண்டும் மீண்டும் பிரகடனப்படுத்தப்படுவது தொடர்பாக மாற்றுக் கருத்து இருந்தாலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதை அங்கீகரித்திருக்கிறார். 2016 மார்ச்சில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும், நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அதை அனுப்பிவைத்திருக்கிறது மாநிலங்களவை.
1962-ல் நடந்த இந்தியா - சீனா போர், 1965 மற்றும் 1971-ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் ஆகியவற்றுக்குப் பின்னர், இந்த இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமாக இந்தியாவில் இருந்த சொத்துகள், ‘இந்திய அரசின் பாதுகாப்புச் சட்டம்’ (1915)-ன்படி மத்திய அரசால் கைப்பற்றப்பட்டன. பின்னாளில், ‘எதிரிச் சொத்துச் சட்டம்’ (1968) நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற அசையாச் சொத்துகளும் அசையும் சொத்துகளும் ஒரு பொறுப்பாளர் வசம் இருக்கும் வகையில், இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் இந்தச் சொத்துகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பொறுப்பாளர்களுக்கு உரிமை இல்லை
பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த ஒருவரின் சொத்துகள் இந்திய அரசால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், சட்டப்படி அவரது வாரிசான அவரது மகன்தான் இந்தியக் குடிமகன் என்பதால், அந்தச் சொத்துகள் தனக்குத் திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், அது எதிரியின் சொத்தாக இருக்க முடியாது என்பது அவரது வாதம். பல ஆண்டுகள் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர், அரசால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு அந்தச் சொத்துகளில் எந்த உரிமையும் இல்லை என்றும், அவர்கள் அந்தச் சொத்துகளை நிர்வகிக்கும் அறங்காவலர் மட்டும்தான் என்றும் 2005-ல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கை
இத்தீர்ப்பின்படி, எதிரி சொத்துகளின் முன்னாள் உரிமையாளர்களின் சட்ட பூர்வமான வாரிசுகள் - அவர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் அந்தச் சொத்துகளைத் திரும்பப் பெற முடியும். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் இப்படி இருக்கும் பாகிஸ்தான் நாட்டவரின் அசையாச் சொத்துகளின் எண்ணிக்கை 9,280. அதில் 11,882 ஏக்கர் நிலங்களும் இவற்றில் அடக்கம். இந்தச் சொத்து களின் மொத்த மதிப்பு ரூ.1,04,340 கோடி. இதே மாதிரியான நடவடிக் கையை பாகிஸ்தானும் மேற்கொண்டது தனிக்கதை. பாகிஸ்தானைப் பொறுத்த வரை, அங்கு வசித்த இந்தியர்களின் சொத்துகளையும் நிறுவனங்களையும் 1971-லேயே விற்றுவிட்டது அல்லது வேறு பயன்பாட்டுக்கு மாற்றிவிட்டது.
ஆட்டம் தொடர்கிறது
ஆக, இந்தியாவிலுள்ள இந்தச் சொத்துகள் பொறுப்பாளர்கள் வசமே இருப்பதை நீட்டிக்கும் வகையில், 2010-ல் ஒரு அவசரச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது மத்திய அரசு. அந்த அவசரச் சட்டம் காலாவதியானது. இந்நிலையில், 2016 ஜனவரியில் புதிய அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. ஒவ்வொரு முறையும் காலாவதியானதால், மீண்டும் மீண்டும் அதை மத்திய அரசு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில், குழுவின் ஆறு உறுப்பினர்கள் தங்கள் எதிர்க் கருத்தைப் பதிவுசெய்திருந்தனர். எதிரிகளின் சட்டபூர்வ வாரிசுகளான இந்தியக் குடிமக்களையும் எதிரிகளாக அறிவிப்பதை அவர்கள் எதிர்த்தார்கள். தங்கள் முன்னோரின் சொத்துகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும், அந்தச் சொத்துகளின் உரிமை பொறுப் பாளர்களிடம் இருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த ஆட்டம் இன்னும் தொடர்கிறது!
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: வெ.சந்திரமோகன்