ஒவ்வொரு மனிதரும் பார்த்தது, படித்தது மட்டுமே அவரை இயங்க வைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு வண்டியில் பெட்ரோல் காலியாகிவிட்டால் அது நின்றுவிடும். மறுபடியும் பெட்ரோல் நிரப்பினால் மட்டுமே வண்டி நகரும். ஒவ்வொரு மனிதருக்கும் சாப்பிடுவது, மூச்சு விடுவது மாதிரிதான் புத்தக வாசிப்பும்.
ஊரிலிருந்து கிளம்பி வருவதற்கு முன்பு பல புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். அந்த அறிவோடுதான் இவ்வளவு நாள் இயங்கியுள்ளேன். நாம் படித்த புத்தகங்கள் கண்ணுக்குத் தெரியாமல், நமக்குப் பின்னால் ஆதாரமாக நிற்கும். என்னுடைய படங்களில் அங்கங்கே சில இலக்கிய ‘டச்’களைப் பார்க்கலாம். அவையெல்லாம் நான் படித்த புத்தகங்களிலிருந்து வந்தவைதான்.
நீங்கள் புத்தகத்தில் படிக்கும் விஷயங்களெல்லாம் காட்சியமைப்புகளாக உங்கள் கண்முன் விரிவடையும். ஒரு படம் போல் நம் கண்முன் ஓடிக்கொண்டே இருக்கும்.
என்னுடைய வாசிப்புப் பட்டியலில் ‘எவர்கிரீ’னாக சுஜாதா இருப்பார். ஊரில் இருக்கும்போது எப்படி மலைத்துப் பார்த்தேனோ, அதே போலத்தான் (சுஜாதா உயிரோடு இல்லையென்றாலும்) இப்போதும் பார்க்கிறேன். இப்போது ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவரும் தவிர்க்க முடியாதவர்கள். என்னுடைய படத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
இந்தப் புத்தகக் காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் சில: ‘ஒரு சிறு இசை’ (வண்ணதாசன்), ‘பதின்’ (எஸ். ராமகிருஷ்ணன்), ‘இருளில் நகரும் யானை’ (மனுஷ்ய புத்திரன்), சாதத் ஹசன் மன்ட்டோ படைப்புகள், நா. முத்துக்குமார் கவிதைகள், ‘பெண்’ (பிரபஞ்சன்), ‘ஒரு புளியமரத்தின் கதை’ (சுந்தர ராமசாமி), ‘மதினிமார்கள் கதை’ (கோணங்கி), ‘ஆனந்தியின் பொருட்டுத் தாழப் பறக்கும் தட்டான்கள்’ (கதிர்பாரதி), ஏ.கே. செட்டியார் படைப்புகள், அப்துல் ரகுமான் கவிதைகள். ‘தி இந்து’ வெளியீடுகளான ‘ஏன் தெரியுமா?’(கு.கணேசன்), ‘எம்.எஸ். நீங்காத நினைவுகள்’, ‘என்னைச் செதுக்கிய மாணவர்கள்’(ஆயிஷா இரா.நடராசன்) ஆகிய புத்தகங்களையும் வாங்கினேன்.
அடுத்த தலைமுறையைச் செழுமையானதாக உருவாக்கக் கூடிய தகுதி புத்தக வாசிப்பால் மட்டுமே முடியும். நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை.