சிறப்புக் கட்டுரைகள்

அவதூறு வழக்குகளின் அரசியல்: லாபம் யாருக்கு?

செய்திப்பிரிவு

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மவுரியா உட்பட பலர் கட்சியை விட்டு வெளியேறினர். அதனால், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் செல்வாக்கு சரிவதைப் போலத் தெரிந்தது. ஆனால், மாயாவதியை பாரதிய ஜனதா கட்சியின் உ.பி. மாநிலத் துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங் இழிவுபடுத்திப் பேசிய சம்பவம், அவரது அரசியல் நிலையை உயர்த்துவதற்கு உதவியுள்ளது.

சம்பவத்தின் பின்னணியில், குஜராத்தில் ஏழு தலித் இளைஞர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிகழ்ச்சி இருந்தது. நாடாளுமன்ற மாநிலங்களவையின் முதல் நாளில் இதைத் தொடர்ந்து, பாஜகவை எதிர்த்து ஆவேசமாகக் குரல் எழுப்பினார் மாயாவதி. இதன் தாக்கமாகவே, தயாசங்கர் சிங்கின் பேச்சு இருந்தது. இதை மீடியாக்கள் தொடர்ந்து ஒளிபரப்பியதால் உ.பி. அரசியல் சூடானது. வேறுவழியின்றி தயாசங்கர், தவறான நோக்கத்தில் கருத்து கூறவில்லை என்றார். தான் மாயாவதியை மிகவும் மதிப்பதாகவும் கூறி மன்னிப்பு கேட்டார்.

தயாசங்கர் விவகாரத்தை மாயாவதி மறுநாள் மாநிலங்களவையில் எழுப்பினார். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவுக் குரல்கொடுத்தன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், தயாசங்கரைக் கண்டித்து அறிக்கை அளித்தார். வேறுவழியின்றி, மாநிலங்களவையில் பாஜக தலைவரும் நிதியமைச்சருமான அருண்ஜேட்லி கட்சி சார்பில் மன்னிப்புக் கோரினார். கைதுக்குப் பயந்து தயாசங்கர் தலைமறைவானார். அவரை அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கி, ஆறு வருடங்களுக்குக் கட்சியிலிருந்தும் இடை நீக்கம் செய்தது பாஜக. அதேநாளில், பாஜகவைக் கண்டித்து பிஎஸ்பி சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்தியது. அது உ.பி.யை ஸ்தம்பிக்க வைத்தது. சண்டிகரில் ஜன்னத் ஜஹான் எனும் பிஎஸ்பி பிரமுகர், தயாசங்கரின் நாக்கைத் துண்டித்து வருவோருக்கு ரூ. 50 லட்சம் இனாம் என அறிவித்தார். மாயாவதி, “தலித் மக்கள் தன்னை ‘தேவி’யாகக் (கடவுள்) கருதுகின்றனர். அவர்களின் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது” எனக் கூறினார். இந்தப் போராட்டத்தால் பிஎஸ்பியின் பலம் நிரூபிக்கப்பட்டுவிட்டதாகப் பேசப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பிஎஸ்பியினர், தயாசங்கர் மனைவி மற்றும் 12 வயது மகள் மீது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கோஷமிட்டுள்ளனர். மாயாவதியின் நெருக்கமான தலைவரான நசிமுதீன் சித்திக், ‘தயாசங்கரைக் கைது செய்ய இயலவில்லை எனில், அவரது மகளையும் மனைவியையும் ஆஜர்படுத்துங்கள்!’ எனக் கூறி மேலும் சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்நிலையில், நசிமுதீன் மற்றும் அக்கட்சியினர் மீது உபி ஆளுநரான ராம்நாயக்கிடம் தயாசங்கரின் மனைவி சுவாதி, வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். தயாசங்கரின் தாயான தெத்ரா தேவி, பிஎஸ்பியினர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளார். பெண் மீதான தவறான விமர்சனத்துக்கு தயாசங்கர் மீது வழக்கு எனில், மாயாவதி கட்சியினர் மீது ஏன் கூடாது?’ என பாஜகவும் அரசியல் லாபம் அள்ளத் தயாராகியது. இதனால், தன் கட்சியினரின் கோபத்தால், குறிப்பிட்ட சாதி மக்களின் வாக்குகள் பறிபோகலாம் என அஞ்சிய மாயாவதி, உ.பி.யில் அறிவித்த போராட்டங்களை வாபஸ் பெற்றார். உ.பி.யின் ஆளும்கட்சியான சமாஜ்வாடி, தயாசங்கர் விவகாரத்தில் பிஎஸ்பி மற்றும் பாஜக தலைவர்கள் மீது அவதூறு வழக்குகளைப் பதிவுசெய்து, தனது பங்குக்கு அரசியல் லாபத்தை அள்ள முயற்சி செய்துவருகிறது.

SCROLL FOR NEXT