மற்ற தேர்தல்களில் சாதாரணக் குடிமக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பார்கள். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைமுறையே வேறு. சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டுமே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
பொதுத்தேர்தல்களில் அனைத்து வாக்குகளும் ஒன்றுக் கொன்று சம மதிப்பு உள்ளவை. குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லா வாக்குகளும் ஒன்றுக்கொன்று சமமானவை அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பும், சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பும் இணையானவை அல்ல.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை: 4,120. மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை: 776. ஆக, சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவிருப்பவர்கள் எண்ணிக்கை: 4,896
கணக்குப் போடுவோமா?
சட்டமன்ற உறுப்பினர்களுடைய வாக்குகளின் ஒட்டுமொத்த மதிப்பு: 5,49,495
எப்படிக் கணக்கிடுகிறார்கள்? - முதலில் ஒரு மாநிலத்தின் (அல்லது யூனியன் பிரதேசத்தின்) சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கிக்கொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கையைக் கொண்டு அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை வகுத்தால் கிடைக்கும் எண்தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வாக்கின் மதிப்பு. இதனால் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பைவிட அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்கு மதிப்பு அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, உத்தர பிரதேசத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு = 208, சிக்கிமில் ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய வாக்கின் மதிப்பு = 7.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய வாக்கின் மதிப்பு: 708
எப்படிக் கணக்கிடுகிறார்கள்? - சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த மதிப்பான 5,49,495 என்ற எண்ணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை + மாநிலங்களவை) எண்ணிக்கையான 776-ஐக் கொண்டு வகுப்பதன் மூலம்.
ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமதிப்பு: 5,49,408
எப்படிக் கணக்கிடுகிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய வாக்கின் மதிப்பையும் (708) ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் (776) பெருக்குவதன் மூலம். (நியமன உறுப்பினர்களால் வாக்களிக்க இயலாது.)
குடியரசுத் தலைவர் தேர்தலின் ஒட்டுமொத்த வாக்குகளின் மதிப்பு: 10,98,903
எப்படிக் கணக்கிடுகிறார்கள்? அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்புடன் (5,49,495) அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பை (549408) கூட்டுவதன் மூலம்.