ஊழல் புகார்களில் சிக்கும் அரசியல் தலைவர்களின் வழக்குகளைக் கையாள்வதில் நீதிமன்றங்கள் முன்பைவிடக் கண்டிப்பாக இருப்பதைச் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, ஓம் பிரகாஷ் சவுதாலா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம்.
ஹரியாணா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி.) தலை வருமான இவர், வி.பி. சிங் மற்றும் சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில் துணைப் பிரதமராக இருந்த தேவிலாலின் மகன். ஜாட் இனத்தைச் சேர்ந்த இவருக்கு, அந்த இன மக்களிடம் பெரும் செல்வாக்கு உண்டு. ஐந்து முறை ஹரியாணா முதல்வராக இருந்தவர் சவுதாலா.
1999-2000-ல் அவர் முதல்வராக இருந்தபோது ஆசிரியர் நியமனத்தில், பணம் பெற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கு வேலை நியமனக் கடிதம் கொடுத்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலா மற்றும் 53 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு அவருக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் சவுதாலா.
79 வயதாகும் சவுதாலாவின் உடல் நிலையைக் காரணம் காட்டி, அவருக்கு ஜாமீன் வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், அக்டோபர் 17-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண் டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஹரியாணா மாநில சட்ட சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று அங்கே தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசை வீழ்த்த, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஐ.என்.எல்.டி. முனைப்புடன் களத்தில் இறங்கியிருக்கிறது. 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சிறிய மாநிலமான ஹரியாணாவில் இதுவரை பெரிய இடத்தைப் பிடித்திராத பாஜக, மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இங்கும் போட்டியில் இறங்கியிருக்கிறது. ஹரியா ணாவில் மோடியும் பிரச்சாரம் செய்தார்.
நானும் கிருஷ்ணர்தான்
ஆளும் காங்கிரஸ் அரசை வீழ்த்தவும், ஹரியாணாவில் பாஜக காலூன்றுவதைத் தடுக்கவும் முடிவு செய்த சவுதாலா, தேர்தல் பிரச்சாரங்களில் மிகத் தீவிரமாகப் பேசினார். “நான் பிறந்த அன்று, சுதந்திரப் போராட்டத் துக்காக எனது தந்தை சிறையில் இருந்தார். சிறையில் பிறந்த கிருஷ்ணர் தனது மாமாவை வெற்றிகொண்டது போல், நான் காங்கிரஸை வெல்வேன்” என்றெல்லாம் பேசினார். ‘உடல் நிலை’ சரியில்லாத காரணத்தைக் காட்டி, ஜாமீன் பெற்ற சவுதாலா பிரச்சாரத்தில் வெளுத்துவாங்கியதை வட இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டி, விமர்சித்தன.
இதே காரணத்துக்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐயும் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, உடனடியாக நீதி மன்றத்தில் சரணடையுமாறு சவுதாலாவுக்கு உத்தரவிடப்பட்டது. சரணடையும் முன்னர், “எனக்கு எதிராக சிபிஐ-யைத் தூண்டிவிடுகிறது பாஜக” என்று சீறினார் சவுதாலா. “மோடியின் பிரச்சாரத்தைக் கேட்கக் கூட்டம் கூடாததால், பாஜகவுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. என்னை மீண்டும் சிறைக்கு அனுப்ப இதுதான் காரணம்” என்றார். எனினும் அவரது அறச்சீற்றம் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. ஹரியாணாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக் காமல் தொங்கு சட்டசபைதான் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படும் தலைவர்கள், உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீனில் வெளிவந்து ஓய்வெடுப்பதற்குப் பதில், தீவிர அரசியலில் ஈடுபட்டால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம் என்பது தான் சவுதாலா விஷயம் சுட்டிக்காட்டும் செய்தி.
- வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in