நான் சட்டப்படிப்பை முடித்த பிறகு திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் தங்கியிருந்தேன். எனது அறை எண் 14. ஆனால் என்னுடைய முந்தைய அறையின் எண் 13-ஆக இல்லை. அதை 12A என்று இலக்கமிட்டிருந்தார்கள். மேன்சனின் உரிமையாளரிடம் கேட்டதற்கு,13 ராசி யில்லாத எண், அப்படி இலக்கமிட்டால் அந்த அறைக்கு வாடகைக்கு யாரும் வருவதில்லை என்றார்.
அவராவது கல்வியறிவில்லாதவர். ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளே 13-ம் எண் ராசியில்லையென்று கருதி அதற்கான எண் மாற்றங்களை செய்து விளையாடியுள்ளது வருத்தத்தைத் தருகிறது.
சமீபத்தில் கேரளாவில் இடதுசாரி அமைச்சரவை பதவியேற்றவுடன், முந்தைய அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களையே தொடர்ந்து பயன் படுத்த முடிவெடுத்தனர். இதற்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் தங்களது வாகனங்களுக்கு சிறப்பு எண்களைப் பெற்றிருந்தனர்.
பழைய வாகனங்களை புதிய அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்கு அவற்றை அணிவகுத்து நிறுத்தியபோது, அதில் 13-ம் எண் கொண்ட வாகனத்தைக் காணவில்லை. 13 ராசியில்லாத எண் என்பதனால் அந்த எண்ணை யாரும் பதிவு செய்துகொள்ளவில்லை என்று தெரியவந்தது.
இடதுசாரி அமைச்சர்கள் பகுத்தறிவு வாதிகளாயிற்றே என்ற கேள்வி எழுந்த வுடன் இன்றைய நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தன்னுடைய வாகனத் துக்கு 13 என்ற எண்ணைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.
13-ம் எண்ணை புறக்கணிப்பதை கேரளாவில் ”திரிஸ்கைடேபோபியா” என்று பெயரிட்டுள்ளனர். இந்த வியாதி அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் ஆட்கொண்டுள்ளது.
கேரளாவில் உயர் நீதிமன்ற கட்டிடத் தில் இருந்த நீதிமன்ற அறைகளுக்கு 1995-ல் தொடர் எண் கொடுக்க முற்பட்ட போது 13-ம் எண் நீதிமன்ற அறைக்கு 12A என்று இலக்கமிடப்பட்டது. பின்னர், எட்டடுக்கு கொண்ட புதிய கட்டிடத்தில் செயல்பட ஆரம்பித்தபோதும், புதிய நீதிமன்ற அறைகளுக்கு 13 என்ற எண் தவிர்க்கப்பட்டது.
இதைப்பற்றி கவலைப்பட்ட சந்திர மோகன் என்பவர், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட செயல்களில் நீதிபதிகள் ஈடுபடக்கூடாதென்றும், 13 என்ற எண் நீதிமன்றத்தின் ஒரு அறைக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பொதுநல வழக்கு (2006) தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி வி.கே.பாலி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, அவ்வழக்கை தள்ளுபடி செய்ததோடு, மனுதாரருக்கு ரூ.10,000/- அபராதம் விதித்தனர். மேலும், நீதிமன்ற அறைகளுக்கு இலக்கமிடுவது ஒரு நிர்வாக செயலென்றும், மனுதாரர் தனது அற்பத்தனமான மனு மூலம் நீதிமன்றத்தை சங்கடப்பட வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டனர்.
சந்திரமோகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் அடங்கிய அமர்வு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன் உயர் நீதிமன்றத்தை பகுத் தறிவுக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட வேண்டாமென்று அறிவுறுத்தி யது. இத்தீர்ப்புக்குப் பிறகு தர்மசங்கட மான கேரள உயர் நீதிமன்றம், புதிய கட்டிடத்தில் நீதிமன்ற அறைகளுக்கு புதிய இலக்கங்களை அளித்தது.
அதன்படி முதல் மாடியில் இருந்த நீதிமன்ற அறைகள் 1A முதல் 1D வரை என்றும், இரண்டாம் மாடியில் அதேபோல் 2A முதல் 2E வரை என்றும், அதேபோல் எட்டு மாடிகளிலுள்ள அனைத்து நீதிமன்ற அறைகளுக்கும் ஆங்கில அகரமுதலிப்படி எண்கள் கொடுக் கப்பட்டன. இப்படி புத்திசாலித்தனமாக 13-ம் எண்ணுள்ள நீதிமன்ற அறை இல்லாமல் செய்துவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் எண்கள் குறித்த அச்ச வியாதி எப் பொழுதும் இருந்துவந்தது. தற்பொழுது புதுப்பிக்கப்பட்ட ராஜமன்னார் கூடத்தைச் சுற்றி நீதிமன்ற அறைகள் எண். 2, 3 மற்றும் 4 உண்டு. இந்த நீதிமன்ற அறைகள் நீதிபதிகளின் முதுநிலைப்படி ஒதுக்கப்படும். நீதிபதி இசுமாயில் பதவியில் இருந்தபோது கிழக்குப் பக்கத்தில் இருந்த 2-ம் எண் அறையில் தனது பணிகளை கவனித்து வந்தார். அவர் தலைமை நீதிபதியான பிறகு கேரளா உயர்நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். புதிய மாநிலத்தில் பதவியேற்க மறுத்து அவர் பதவியைத் துறந்தார்.
அவருக்கு முன்னால் அதே நீதிமன்ற அறையில் பணியாற்றிய ராமபிரசாத் ராவ் அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி உடனடியாகக் கிட்டாமல் காலம் தாழ்த்தப்பட்டது. ஆகவே அதற்குப் பிறகு கிழக்குப் பக்க அறைக்கு முதுநிலைப்படி வருவதற்கு நீதிபதிகள் தயங்க ஆரம்பித்தனர். அதை 3-ம் எண் அறையாக பலமுறை இலக்க மாற்றம் செய்யப்பட்டது.
மற்றொரு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ராசியான எண் 7. அவர் நீதிமன்றங்களில் பணியாற்றும்போது எப்பொழுதுமே 7 அல்லது அதன் கூட்டு எண்ணுள்ள நீதிமன்ற அறைகளைத்தான் விரும்புவார். அவர் முன்னால் பட்டிய லிடப்படும் வழக்குகளின் எண்ணிக்கைக் கூட7 என்ற எண்ணின் கூட்டுத் தொகை களாக இருக்கும்படி பார்த்துக்கொள் வார். 7 எண்ணின் கூட்டுத் தொகைக்கு அதிகமாக வழக்கை சேர்க்க வேண்டி வந்தால், பட்டியலைத் தயாரிக்கும் உதவியாளர், வழக்குகளுக்கு இடைச் செருகலாக A, B, C என்ற எண்களைச் சேர்த்து நுழைத்துவிடுவார்.
நான் மதுரையில் ஒரு முறை பணி செய்தபோது எனக்கு 7-ம் எண் நீதிமன்ற அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவசரமாக 2 நாள் பணிக்காக மதுரைக்கு வந்த அந்த நீதிபதி, அவரது உதவியாளர் மூலம் என்னுடைய நீதிமன்ற அறையை 2 நாளைக்கு விட்டுத்தர முடியுமா என்று கேட்டார். காரணத்தைப் புரிந்து கொண்ட நான், அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்ததுடன், வேண்டுமானால் 7-ம் எண் என்ற இலக்கமிட்ட பலகையை என்னுடைய அறையில் இருந்து எடுத்து, அவர் எந்த அறையில் பணிபுரிகிறாரோ அந்த அறையில் மாட்டிக்கொள்ளுமாறு கூறிவிட்டேன். அதுமட்டுமல்லாமல் அவர் எந்த அறையிலெல்லாம் பணிபுரி கிறாரோ, அங்கெல்லாம் உள்ள மேசை, நாற்காலிகளெல்லாம் வாஸ்துப்படி திசை மாற்றி வைக்கப்படும்.
கட்டிட திறப்பு (அ) கால்கோள் விழாக்களை ஞாயிற்றுக்கிழமை மாலையில் வைக்கும்போது அழைப்பிதழ் அட்டையில் விழா தொடங்கும் நேரம் மாலை 6.01 என்று அச்சடிப்பார்கள். ஏனென்றால் ஞாயிறு மாலை 4.30 6.00 ராகு காலமாம்.
தமிழகத்திலுள்ள நீதிபதிகள், தங்களது வாகனங்களின் பதிவு எண் களின் கூட்டுத்தொகை ஒற்றைப்படை யாக வரும்படி பார்த்துக் கொள்வார் கள். ஆந்திராவில் இருந்து வந்த நீதிபதிகளுக்கு இரட்டைப்படை எண்தான் ராசி. பதிவு எண்கள் வந்த பிறகு எனக்கும் ஆந்திராவில் இருந்து வந்த நீதிபதி தர்மாராவுக்கும் மட்டுமே இரட்டைப் படை எண் வழங்கப்பட்டது.
அரசமைப்பு சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி பிரிவு 51A-யின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பிரிவின் துணைப்பிரிவு (h)-ன் படி அறிவியல் மனநிலையுடன், மனிதாபிமானத் தன்மை யுடன், அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி சீர்திருத்த மனப்பான்மைக் கான மெய்ப்பொருளை தேடும் கடமை யுணர்வு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக் கும் அடிப்படை கடமையாக்கப்பட் டுள்ளது. இப்படிப்பட்ட அடிப்படை கடமைகளை மறந்துவிட்டு எண்கள் விளையாட்டில் ஈடுபடும் நீதிபதிகளைப் பார்க்கும்போது ‘வளர்பிறை’ திரைப் படத்தில் வரும் கண்ணதாசனின் பாடலை நினைவு கூறத் தோன்றுகிறது. ‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜி யத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்’.