சிறப்புக் கட்டுரைகள்

தமிழகத்துக்கும் பொருந்தும் குரல்கள்!

செய்திப்பிரிவு

‘பருவமழைகளின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படும் கேரளத்திலும் அஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு வறட்சி

ஸ்காட்லாந்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுச் சில ஆண்டுகளுக்கு முன்னால் கேரளம் திரும்பிய ஜே. செரியன், மத்திய கேரளத்தில் சொந்த நிலத்தில் ஆர்வமாக விவசாயம் செய்யத் தொடங்கினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயில் பொசுக்குவதால் காய்ந்து கருகும் பயிர்களைக் கண்டு கண் கலங்குகிறார். “கடந்த 8 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன்; இதுவரை இந்த ஆண்டைப் போல வெயில் கடுமையாக இருந்ததே இல்லை” என்று வருந்துகிறார்.

செரியன் சொல்வதை மாநில நிர்வாகமும் ஒப்புக்கொள்கிறது. தமிழகத்தைப் போலவே ‘பருவமழைகளின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படும் கேரளத்திலும் காண்போர் அஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு வறட்சி வாட்டுகிறது. மழை மேகம் திரண்டால் அதன் மீது சில்வர் அயோடைடைத் தூவிக் குளிரவைத்து, மழை பெய்ய வைப்பது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் பரிசீலித்துவருகிறார். பாலக்காட்டில் குளிர்பான ஆலைக்குத் தண்ணீரைப் பயன்படுத்தும் ‘பெப்சிகோ’ நிறுவனத்தை, வழக்கமாக எடுப்பதில் 25% நீரை மட்டும்தான் எடுக்க வேண்டும் என்று அரசு பணித்திருக்கிறது.

மனிதர்களின் பேராசை

இந்த நூற்றாண்டிலேயே இந்த ஆண்டின் வறட்சி அளவுதான் மிகமிக மோசம் என்று செரியன் சுட்டிக்காட்டுகிறார். ஏலக்காய், காபி, மிளகு ஆகிய தோட்டப் பயிர்கள் வாடி வதங்குகின்றன.

வெயில் அதிகரித்தால் அது ஏலப் பயிரைத்தான் அதிகம் பாதிக்கும். குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காதபோது பயிர்களுக்கு எங்கே போவது என்று கேட்கிறார் செரியன். இப்போது மழை பெய்தால்கூட வாடி வதங்கிய பயிர்களைக் காப்பாற்ற முடியாது என்கிறார்.

இது உண்மையிலேயே இயற்கையால் ஏற்பட்ட பேரழிவா அல்லது இயற்கையைப் புறக்கணித்த மனிதர்களின் பேராசையால் விளைந்த நெருக்கடியா என்பதே கேள்வி. அதிலும் விலை மதிக்க முடியாத இயற்கை வளங்களைக் காப்பாற்றும் அக்கறை இல்லாமல் சுரண்டியதன் விளைவா என்றும் கேட்கத் தோன்றுகிறது. அரசு நிர்வாகிகள், ஆட்சியாளர்கள், தொழில் - வர்த்தகப் பிரமுகர்கள் தங்களுடைய சுயலாபங்களுக்காக இயற்கை வளங்களைத் திட்டமிட்டு அழித்த சதியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை விவசாயிகள் இப்போது சந்திக்க நேர்ந்திருக்கிறது.

நீர்வளத்தின் செறிவு

கேரளத்தில் மொத்தம் 44 ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் 41 மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன. மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்காகப் பாய்கின்றன. தேசிய சராசரியைவிட 2.78 மடங்கு கேரளத்தில் கூடுதலாக மழை பெய்கிறது. இது ராஜஸ்தானைவிட ஐந்து மடங்கும், தமிழகத்தைவிட மூன்று மடங்கும் அதிகம். உலகிலேயே அதிகமான அடர்த்தியில் கேரளத்தில்தான் கிணறுகள் இருக்கின்றன. மிகச் சிறிய மாநிலமான கேரளத்தில் மொத்தம் 66 லட்சம் கிணறுகள் உள்ளன. 7 பேருக்கு ஒரு கிணறு என்ற விகிதத்தில் உள்ளன. இத்துடன் 1,000 விவசாயக் குட்டைகள் உள்ளன. குட்டையின் சராசரி அளவு அரை ஹெக்டேர். இவற்றுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 ஏரிகள் உள்ளன. மூன்று பெரிய நன்னீர் ஏரிகள் அவற்றில் அடக்கம். ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாத ஊற்றுகளும் ஏராளம்.

பொதுவாக, இயற்கை ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் பறித்துவிடுவதும் இங்கே நடக்கிறது. கேரள ஆறுகளின் நீளம் குறைவு. ஆறுகள் மேட்டிலிருந்து பள்ளத்துக்குப் பாயும்போது, தாழ்வான நிலப்பரப்புகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திவிடுகின்றன. இதனாலேயே தண்ணீர் வேகமாக நிலப்பரப்பில் வடிந்து கடலில் போய்க் கலந்துவிடுகிறது.

வரம்பற்ற ஆக்கிரமிப்பு

தேசிய அளவில் மற்ற ஆறுகளின் சராசரி நீளத்துடன் ஒப்பிட்டால், கேரளத்தில் பெரிய ஆறு என்று கூறும் அளவுக்கு ஒன்றுகூட இல்லை. நான்கு ஆறுகள் நடுத்தர ரக நீளத்தில் வருகின்றன. எஞ்சியவை சிற்றாறுகள். கேரளத்தின் நீர்ப்பிடிப்புப் பரப்பளவு 28,739 சதுர கிலோ மீட்டர்கள். இந்த ஆறுகளில் திரளும் மொத்த நீரின் அளவு 72,873 மில்லியன் கியூபிக் மீட்டர்கள். 44 ஆறுகளிலிருந்தும் பாயும் நீர், தென்னிந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரியில் பாயும் நீர் அளவைவிடக் குறைவு!

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை, கேரளத்திலிருந்த அடர்த்தியான காடுகளும் பசுமை போர்த்திய மலைகளும் வயல் களும், பெய்த மழை அனைத்தையும் அப்ப டியே ஈர்த்து, நிலத்தடியில் நீராகச் சேர்த்துக் கொண்டன. வன நிலங்களில் நிகழ்ந்த வரம்பற்ற ஆக்கிரமிப்புகளும், பணத்துக்காக மேற்கொள்ளப்பட்ட காடுகளின் அழிப்பும், குட்டைகள், சதுப்புநிலங்கள், நெல் வயல்கள் ஆகியவற்றை வீடுகள், வணிக வளாகங்கள் கட்டுவதற்குக் கையகப்படுத்தியதும் மழையளவைக் குறைத்ததுடன் நிலத்தடி நீரையும் வேகமாக உறிஞ்சிவிட்டது.

மனோபாவம் மாற வேண்டும்

நீரைத் தேக்கிவைக்கும் ஆற்றல் இப்போதுள்ள தரைப் பகுதிக்கு அதிகமாக இல்லாததால், கிடைக்கும் மழை நீரும் வேகமாக ஓடிக் கடலில் கலந்துவிடுகிறது. எனவே, மழைநீர் சேகரிப்பு முயற்சிகளுக்கு அதிக பலன்கள் கிடைப்பதில்லை. மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்குப் பெரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. கேரளத்தவர்கள் எழுத்தறிவில் சிறந்தவர் களாக இருந்தும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறார்கள். இதனாலும் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது.

தண்ணீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற மனோபாவம் மாற வேண்டும் என்ற பிரச்சாரம் இப்போது கேரளத்தில் கேட்கிறது. “தண்ணீர் அரிய பொருள், அதைச் சிக்கனமாகப் பயன் படுத்துவதுடன் சேமிக்கவும் வேண்டும். புழைகளும் கழிமுகங்களும் நிரம்பிய கேரளத்தில், இப்போது தண்ணீர்த் தட்டுப் பாடு ஏற்பட்டிருப்பதை உணர வேண்டும். தண்ணீரைப் பாதுகாப்பதைப் போல, கழிவுநீரைச் சுத்தப்படுத்தி மறு பயன் பாட்டுக்குக் கொண்டுவருவதும் அவசியம்” என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளத்தின் இந்தக் குரல்கள் தமிழகத்துக்கும் ரொம்பவே பொருந்தும்!

சுருக்கமாகத் தமிழில்: சாரி
© பிசினஸ் லைன்

SCROLL FOR NEXT