கால்நடை மருத்துவப் படிப்பில் ஃபிஷரீஸ் சயின்ஸ், பவுல்ட்ரி புரடக்ஷன் அண்டு டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. ஃபிஷரீஸ் சயின்ஸ் என்பது மீன் வளம் குறித்த பாடப் பிரிவு. தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் மீன் வளத்துறை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் இயங்குகிறது. மொத்தம் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு இது. 40 இடங்கள் மட்டுமே உள்ளன. பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடம் படித்தவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கடல் உணவுகள், கடல் உயிரினங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் சர்வதேச அளவில் தற்போது வளர்ந்து வருகின்றன. அதனால், உள்ளூர் மட்டுமின்றி உலகம் முழுவதும் இத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
கால்நடைத் துறையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் பவுல்ட்ரி புரடக்ஷன் அண்டு டெக்னாலஜி பாடப் பிரிவு கொண்டுவரப்பட்டது. இதில் 20 இடங்கள் மட்டுமே உள்ளன. பிளஸ் 2-வில் கணிதம், உயிரியல் பாடங்களை எடுத்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முதல் ஆண்டு சென்னையிலும், அடுத்த மூன்று ஆண்டுகள் ஒசூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் பவுல்ட்ரி புரடக்டிங் மேனேஜ்மென்ட் கல்லூரியிலும் படிக்க வேண்டும்.
முட்டை மற்றும் கோழி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகளவில் நாமக்கல் நான்காம் இடம் வகிக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு காரணமாக இத்தொழில் உலகளவில் வளர்ந்து வருகிறது. மேலும் இப்படிப்புக்கு 20 இடங்களே இருப்பதால் 100 சதவீத வேலைவாய்ப்பு உண்டு.
ஃபுட் டெக்னாலஜி பாடப் பிரிவை கால்நடை மருத்துவக் கல்லூரியின் கீழ் சென்னையில் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் அண்டு டைரி டெக்னாலஜி கல்லூரியில் படிக்க வேண்டும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதிலும் 20 இடங்கள் மட்டுமே உள்ளன. பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் கால்நடைகளுக்கான தீவனங்கள் மட்டுமின்றி அனைத்து உணவு வகைகளின் தொழில்நுட்பம் மற்றும் தர மேம்பாடு பற்றி கற்றுக்கொள்ளலாம். உணவு தரக்கட்டுப்பாடு சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.