சிறப்புக் கட்டுரைகள்

கரகாட்டம் பாதுகாக்கப்படுவது யார் கையில் இருக்கிறது?

செய்திப்பிரிவு

சிவனின் நாட்டியத்தால் பிறந்ததாகச் சொல்லப்படும் பரதம், பிறகு அரண்மனைவாசிகளை மகிழ்விக்கும் கலையாகி, தேவதாசி முறைக்குள் உழன்று, கடைசியில் மேல்தட்டு மக்களின் கைகளுக்குச் சென்று, இன்று புகழின் உச்சியில் இருக்கிறது. பறையாட்டமும்கூட இன்றைக்கு அரசியல் களத்துக்கு இடம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் கிராமப்புற நடனமான கரகாட்டத்துக்கு என்றைக்கு விமோசனம் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை. நாளுக்கு நாள் சீரழியத்தான் செய்கிறதே அன்றி, எந்த மலர்ச்சியையும் காண முடியவில்லை.

கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், ராஜா- ராணி ஆட்டம், புலியாட்டம், குறவன் - குறத்தி ஆட்டம் எல்லாம் பல சினிமாக்களில் வந்திருக் கின்றன. ஆட்டக்காரர்களும்கூட சினிமாவில் வந்து சென்றிருக்கின்றனர். ஆனால், சினிமா வெளிச்சம்கூட இந்த ஆட்டத்தையோ, ஆட்டக் காரர்களையோ அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லவில்லை. கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கரகாட்டக்காரன்’ படம் தமிழ்த் திரையுலகையே கலக்கியது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அந்தப் படத்தில் ராமராஜனுக்கு டூப் போட்ட பிரபல நாட்டுப்புறக் கலைஞரோ தொடர் அவமானங்களால் இந்தக் கலையே வேண்டாம் என்று கிறிஸ்தவ மதபோதகராகிவிட்டது யாருக்குத் தெரியும்?

கலை அல்ல; பிழைப்பு!

தஞ்சைப் பக்கம் இருப்பவர்கள், மூத்த கலைஞர் நாடி ராவைச் சந்தித்தால், இவர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக எடுத்துச்சொல்வார். நான் எம்.இ., பிஎச்டி படித்துவிட்டு, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவன். ஆனாலும், கரகாட்டம் மீது கொண்ட காதலால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கலையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவன். என்னைப் போன்று மிகச் சிலரே இன்றைக்கு ஓரளவு வசதியுடன் இந்தக் கலையைக் கையில் எடுத்திருக்கிறோம். பல கலைஞர்களுக்கு இது கலை அல்ல; பிழைப்பு. அதற்காக அவர்கள் கொடுக்கும் அர்ப்பணிப்பு எல்லையற்றது.

கிராமியத் திருவிழாக்கள் நடைபெறுகிற மாசி முதல் ஆடி வரையிலான காலகட்டம்தான் இவர்களின் அறுவடைக்காலம். அதைக்கொண்டுதான் ஆண்டு முழுவதும் பிழைப்பு நடத்தியாக வேண்டும். பெரும்பாலும் இக்காலகட்டத்தில் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதில்லை. அப்படித் தரித்திருந்தாலும், அதைக் கலைத்துவிட்டு, காலில் சலங்கை கட்டும் கொடுமை இவர்களுக்குப் புதிதல்ல. இது ஒரு உதாரணம்தான்.

வாய்ப்பில்லாத நிலை

இந்தக் கலைஞர்களுக்கு அரசு எதுவுமே செய்யவில்லையா? திட்டங்கள் உண்டு. ஆனால் செயல்பாடு இல்லை. நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாப்பதற்கென்றே தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1959 முதல் இயங்கிவருகிறது.

இதன் கீழ் மாவட்டத்திலும் கலைப் பண் பாட்டுத் துறையும், நான்கைந்து மாவட்டங் களுக்குச் சேர்த்து ஒரு மண்டல கலைப் பண்பாட்டு மையம் என்று ஆறு மண்டலங்களும் இருக்கின்றன.

ஆனால், அதிகாரிகள் முதல் பணியாளர் கள் வரையில் பணியிடங்கள் பெரும்பாலும் காலி. துணை அல்லது உதவி இயக்குநர்கள் தான் மண்டல இயக்குநர்களாக ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அலுவலகப் பணியைச் செய்துமுடிக்கவே ஆளில்லாமல் அல்லாடும் இவர்கள், வறுமைக்கு வாக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களைத் தேடிச் சென்று அவர்களுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பையும், நல வாரிய உதவிகளையும், தகுதியானவர்களுக்கு விருதுகளை வழங்கவும் வாய்ப்பிருக்குமா என்ன?

கிடைக்கும் சலுகைகள்

அரசுத் துறை விழாக்களில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் வாய்ப்பு, சுற்றுலாத் துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பொங்கல், சுதந்திர தினம், குடியரசு தின நிகழ்ச்சிகள் தொடங்கி, வெளிநாட்டு நிகழ்ச்சி கள் வரையில் திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பு - இவைதான் அரசு சார்பில் இவர் களுக்குக் கிடைக்கும் ஒரே சலுகை. அதையும் தட்டிப் பறிப்பதற்கென்றே அலுவலக வாயிலில் இடைத்தரகர்கள் காத்திருப்பார்கள். விருது களைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. நாட்டுப்புறக் கலைகளை வாழ்வாதாரமாக வைத்திருப்போர், மக்கள் அதைக் கைவிடும் போது கலையையும் கைவிட வேண்டிய சூழல் இருக்கிறது.

பரம்பரை பரம்பரையாக இந்தக் கலை ரத்தத்தில் ஊறிப்போனவர்களே அதைக் கைவிடும்போது, என்னைப் போன்றவர்கள் மட்டும் அதைத் தூக்கி நிறுத்திவிட முடியாது. கலை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், பொதுமக்களின் ஆதரவு அதற்கு அவசியம் தேவை. தமிழர், தமிழர் என்று முழங்கும் நம் தமிழ்ச் சமூகம்தான் மதுரை சித்திரைத் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது, இன்றைக்கு கேரளத்துச் செண்டை மேளத்தை அழைத்துவந்து, நிகழ்ச்சி நடத்தும் அளவுக்குக் கலாச்சார அடையாளங்களை இழந்துநிற்கிறது. உள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது ஏதோ சில கலைஞர்களையும் கலையையும் வாழ வைப்பது மட்டும் அல்ல; மாறாக, நம்முடைய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.

காணாமல் போகும் கரகாட்டம்

அரசு மற்றும் தனியார் விழாக்களில் மட்டு மின்றி, பள்ளிகளிலும் நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்த வாய்ப்பளிப்பதன் மூலமாகத்தான் இந்தக் கலையின் ஆயுளை இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது நீட்டிக்க முடியும். இல்லையென்றால், கால ஓட்டத்தில் தமிழக கிராமியக் கலைகள் பலவும் இன்றைக்கு எப்படிக் காணாமல் போய்விட்டனவோ அதேபோல, கரகாட்டமும் காணாமல்போகும். கரகம், காவடி, பொய்க்கால் குதிரை மாதிரிகளை அருங்காட்சியகத்தில் பார்க்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

நாட்டுப்புறக் கலைஞர்கள், கலையின் ஊடே தங்கள் சோகத்தை,

“ஆடப் பொறந்த நாங்க இப்போ அநாதையா திரியிறோங்க

நாங்க சீவி சிங்காரிச்சும் இப்படி மூளியா திரியிறோங்க

நாங்க இரவைக்கெல்லாம் ராசாவாம் பகலுல கூலியாம்

எங்க கலைமாதா கூட இருந்தும் கால் வயித்துக் கஞ்சிக்கில்ல

இப்படி முள்ளுபட்ட சேலை போல முழுசா கிழிஞ்சோம்ங்க”

என்று பாடி வெளிப்படுத்துவதுண்டு. இந்த கட்டுரைக்கும் அது பொருந்தும்!

- எஸ்.மலைச்சாமி,
கரகாட்டக் கலைஞர் மற்றும்
பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: mdusmalai@yahoo.com

SCROLL FOR NEXT