படிக்கிற காலத்தில் சரியாகப் படிக்காமல் பி.யூ.சி. ஃபெயிலானேன். சும்மா திரிந்துகொண்டிருந்த காலத்தில்தான் புத்தக வாசிப்பின் மீது ஈடுபாடு வந்து நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, சாண்டில்யனின் ‘கடல்புறா’, காண்டேகர் கதைகள், ஜெயகாந்தன் கதைகள் எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். அதே காலகட்டத்தில் ‘பகவத் கீதை’யும் வாங்கி வாசித்தேன்.
ஒரு கட்டத்தில் பாத்ரூமுக்குப் போகும்போதெல்லாம் கையில் புத்தகங்களுடன் போக ஆரம்பித்தேன். எனது பாத்ரூமிலேயே ஒரு குட்டி நூலகம் வைத்துவிட்டேன். நான் பாத்ரூமுக்குப் போனாலே என் மனைவி ‘சீக்கிரம் வரணுங்க’ என்று கடிந்துகொள்வார். வெளியூர் செல்லும்போது பாத்ரூம் செல்வதென்றால், புத்தகம் இல்லாமல் சில சமயங்களில் சிரமமாகிவிடும். ஆகவே, வெளியூர்ப் பயணங்களின்போதும் மறக்காமல் கையில் புத்தகங்களை எடுத்துச் செல்வேன். பாத்ரூம்தான் அமைதியான இடம்; எந்தவித இடையூறும் இருக்காது. புத்தகம் படிப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம்! பாத்ரூம் பாடகர்கள்போல் என்னை ஒரு பாத்ரூம் வாசகன் என்றும் சொல்லலாம்!
பழமொழிகள் தொடர்பான புத்தகங்களை நான் அதிகம் விரும்பிப் படிப்பேன். கலாச்சாரம், உலக மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தத்துவங்கள் முதற்கொண்டு பழமொழிகளுக்குள் அவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கும். அதனால்தான் என் படங்களில் நிறைய பழமொழிகள் இடம்பெறும். எல்லா அனுபவங்களையும் எல்லோரும் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், புத்தகங்களின் மூலம் ஏராளமான அனுபவங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஆகவே, புத்தகங்கள் நமக்குக் குருபோல. நான் எப்போதும் இடைவிடாமல் படித்துக்கொண்டே இருப்பேன். ‘பாக்யா’வுக்கு அனுப்பப்படும் கதைகள், நூல்கள் என்று எதையும் விட மாட்டேன். புத்தகங்கள் தொடர்பான விழாக்களிலும் கலந்துகொள்வதுண்டு.
நான் சமீபத்தில் அதிகம் படிப்பது இந்திரா சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா முதலானோர் படைப்புகளைதான். புத்தகக் காட்சியிலும் நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ‘தி இந்து’ வெளியீடுகளான ‘ஜெயகாந்தனுடன் பல்லாண்டு’, அப்துல் கலாம் எழுதிய ‘என் வாழ்வில் திருக்குறள்’ போன்ற நூல்களையும் வாங்கினேன். படிக்கிறேன்… படித்துக்கொண்டே இருப்பேன்!