சிறப்புக் கட்டுரைகள்

‘...எழுத்தாளன் செத்துவிட்டான்!’

செய்திப்பிரிவு

எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.

பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.

‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே, பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.

2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.

3. பெருமாள்முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.

4. இனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.

- பெ.முருகன்

(பெருமாள்முருகன் என்பவனுக்காக)

குறிப்பு: சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் - எழுத்தாளர் பெருமாள்முருகன் இடையே நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ‘மாதொருபாகன்’ நாவலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள பிரதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” ஆகிய நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டன. கடைசியாக, பெருமாள்முருகன் இவற்றை ஏற்றுக்கொண்டதன்பேரில், அவருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடுவதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் பெருமாள்முருகன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இது.

SCROLL FOR NEXT