வாலி பிறந்த நாள்: 29 அக்டோபர், 1931
கோடிக் கணக்கான மக்களின் உணர்வுக் கடலில் கரைந்துகொண்டே தனது தனித்துவ ஆற்றலையும் தக்கவைத்துக்கொண்டவர் வாலி.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல், வரலாறு, பாலியல், சமய நம்பிக்கைகள் என்ற அனைத்து உணர்வுகளும் பொழுது போக்கு வடிவமான சினிமாவுடன் பின்னிப் பிணைந்தவை. இயல்பான பாலியல் வேட்கைகள்கூடத் தொடர்ந்து ஒடுக்கப்படும் நம் சமூகம், தனது ரகசிய ஆசைகளைத் தொடர்ந்து சினிமா வழியாகவே தீர்த்துக்கொள்கிறது.
சாதாரண ஆண்-பெண் நட்புக்கும், காதல் உறவுகளுக்கும் தடைவிதிக்கும் தமிழகம்தான் 24 மணிநேரமும் ஊடகங்கள், நவீனத் தொலைத்தொடர்புச் சாதனங்கள் வழியாகப் பாலுறவைக் கனவு கண்டுகொண்டே இருக்கிறது. வழிபாடு, வன்முறை, பாலியல், அரசியல் எல்லாம் குறுக்குமறுக்காக ஓடிச் சங்கமமாகும் ஜலசந்தி இது. இதுபோன்ற ஒரு இடத்தில், வெகுமக்கள் கொண்டாடும் ஒரு பாடலாசிரியனாக நாற்பது ஆண்டுகள் நீடிக்க முடிவது சாதாரண விஷயம் அல்ல. அதைச் சாதித்தவர் பாடலாசிரியர் வாலி. 20-ம் நூற்றாண்டில் பெரும் மாறுதல்களைக் கண்ட தமிழ்ச் சமூகத்தின் பொது நரம்புகளை மீட்டத் தெரிந்தவர் அவர். தமிழ்ச் சமூகத்தின் விரகம், காத்திருப்பு, காதல், துள்ளல், விரசம், நவீனம் என எல்லா குணங்களையும் நகல் செய்தவர் அவர்.
கண்ணதாசன் மரபிலிருந்து…
கண்ணதாசன் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக கோலோச்சிய காலத்தில் அறிமுகமாகியவர் வாலி. கண்ண தாசன் பாடல்களைப் ‘போலவே’ பாடல் எழுதிய வாலி, அக்காலகட்டத்தில் எழுதிய சிறந்த பாடல்களை இன்றும் கண்ணதாசன் பாடல்கள் என்று மயங்குவோர் உண்டு. தமிழ்த் திரையிசையில் மரபு இலக்கியத்தின் செழுமையுடன் ஒரு செவ்வியல் தன்மையைப் பாடல்களுக்கு வழங்கியவர் கண்ணதாசன். கண்ணதாசனின் மரபில் வந்தவர் என்று வாலியைக் கூற முடியும். அதற்கு அடையாளமாகக் கீழ் வரும் பாடல்களை உதாரணமாகக் கூறலாம்:
அவளுக்கும் தமிழ் என்று பேர் ! என்றும் அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர், அசைகின்ற தேர்!
…...
அவளுக்கு அழகென்று பேர் - அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர், உழுகின்ற ஏர்
… …
அவளெந்தன் நினைவுக்குத் தேன்-இந்த மனமென்னும் கடலுக்குக் கரைகண்ட வான்
(பஞ்சவர்ணக்கிளி)
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ… இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை, ஓ பொழுதும் விடிவதில்லை
(படகோட்டி)
கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு இரண்டு, மூன்று தலைமுறை பாடலாசிரியர்களுடன் இணையாக நின்று தன்னைத் தொடர்ந்து புத்தூக்கம் செய்துகொண்டவர் வாலி. அவருடைய திரைப் பாடல்களின் தனித்துவம் என்று சொன்னால், அவரது தன்னியல்பானதும் ஆற்றொழுக்குமான கவித்துவம்தான். அந்த வகையில் அவர் கண்ணதாசனின் மரபைச் சேர்ந்தவர். கருத்தும் கற்பனையும் பாடலின் கணிதத்தோடு கரைந்து, தனித்தனியாக முனைப்பாக வெளித் தெரியாமல் இருக்கும். காலத்துக்கேற்ற துள்ளலைத் தொடர்ந்து தக்கவைத்திருந்தவர் வாலி.
படகோட்டி படத்தில் அவர் எழுதிய ‘தொட்டால் பூ மலரும்’ பாடலிலிருந்து இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன்னர் ‘மரியான்’ படத்தில் எழுதிய ‘நேற்று அவள் இருந்தாள்’ பாடல்வரை பார்க்கும்போது அவர் பயணித்த தூரம் மிக அதிகம் என்பது தெரியவரும். ‘ஆகாயத்தில் நூறு நிலாக்கள் அங்கங்கே நீலப் புறாக்கள்’என நவீனக் கவித்துவத்துடன் சிருங்காரத்தை அவர் திரைப்பாடலில் ஸ்தாபித்திருக்கிறார்.
கிளர்ச்சியின் பயணம்
தமிழ்த் திரையிசையை நவீனப்படுத்திய ஏ.ஆர். ரஹ் மானுக்குப் பொருத்தமான ஜோடியாக வைரமுத்துவைத் தான் எல்லோரும் சொல்வார்கள். வைரமுத்துவிடம் உள்ளது மொழியின் அர்த்தத்தோடு இணைந்த அறிவுபூர்வமான ஜாலம். ஆனால் வாலி, மொழியின் அர்த்தங்களையும் மீறி ஓசைகள் வழியாகவே ஒரு ‘ரோலர் கோஸ்டர்’ பயணத்தின் கிளர்ச்சியை உருவாக்கியவர்.
‘காதலன்’ திரைப்படத்தில் வரும் கௌபாய் பாடலான ‘முக்காபுலா’ பாடல், உலகமயமாதலுக்குத் தயாராகும் புதிய யுகத்துக்கான சங்கீதம். அந்தப் படத்தின் கேசட் வெளி யான நாளன்று, ஒரு திருமண வீட்டில் ‘ஒ யே…ஹோ… ஒ யே… ஹோ ஹோ…’ என்று தொடங்கிய குரல் என் காதுகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும் பழமைக்கு விடைகொடுக்கும் வலியுணர்வு கலந்த உல்லாசத்தையும் அளித்தது. அந்தப் பாடலின் குரலும், உலோக சப்தங்களும் அமெரிக்கப் பாலைவனத்தின் நிலப்பரப்பொன்றைத் தமிழ்க் காதுகளில் உருவாக்கின.
வெகுஜனக் கலைஞனின் தகுதி
சினிமாவைப் போன்ற வெகுஜன ஊடகத்தில் மாறும் மக்களின் ரசனைகள், உணர்வுகள், ஆசாபாசங்கள், சிந்தனைகள், சுகதுக்கங்களை அதில் ஈடுபடும் கலைஞன் தனது நரம்பு மண்டலத்தில் சேகரித்திருக்க வேண்டியது அவசியம். கோடிக் கணக்கான மக்களின் உணர்வுக் கடலில் கரைந்துகொண்டே தனது தனித்துவ ஆற்றலையும் தக்கவைத்தபடி மிதப்பவனே பெரும் வெகுஜனக் கலைஞனாவதற்குத் தகுதியுள்ளவனாகிறான். அங்கேதான் மகத்தான பொழுதுபோக்கு அம்சம் உருவெடுக்கிறது.
மகிழ்ச்சியையும் துள்ளலையும் சாசுவதமாகவே வைத்திருக்க வேண்டிய அவசியம் சினிமா பாடல்களுக்கு உண்டு. அந்த விறைப்பை எப்போதும் வைத்திருந்த வெகுஜனக் கலைஞர் வாலி. அவரைப் பொறுத்தவரை ‘முக்காபுலா’ பாடலில் வருவது போல ‘சந்தோஷம் என்பது சலிக்காத பாடல்தான்’.
திருநீறும் திராவிட இயக்கமும்
வாலி ஒரு பாடலாசிரியராக உருவான காலம், அவரது அடை யாளம் மற்றும் பின்னணி சார்ந்து எதிர்மறையானது. திராவிட இயக்க அரசியலும் சமூக நீதியும் எழுச்சி பெற்ற காலத்தில் வாலி என்னும் ஆளுமை உருவெடுக்கிறது. பார்ப்பனர்களுக்கு எதிரான பேச்சுகள் மேடைகளில் முழங்கிய காலம் அது. ரங்கம் அக்ரஹாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வாலி, தனது இன அடையாளத்தையும் பின்னணியையும் விமர்சிக்கும் மேடைப் பேச்சுகளிலிருந்தே தமிழ் மீதான ஈடுபாட்டையும் காதலையும் வளர்த்தெடுத்ததாகப் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.
அவர் நெற்றியில் திருநீறு அணிந்த ஆத்திகர். தனது சமூக அடையாளத்தை வெளிப்படையாக வைத்துக் கொண்டே தனது வாழ்நாள் இறுதிவரை திராவிட அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியுடனும் கி. வீரமணியுடனும் பெரும் நட்புடன் இருந்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரை இவர் கவிபாடாத ஆளுமைகள் இல்லையென்றே சொல்லலாம்.
சமத்துவமும் சமூக நீதியும் தமிழகத்தில் திராவிட அரசியல் சார்ந்து தமிழ் சினிமாக்களில் எளிய செய்திகளாகப் பாடல்கள் வழியாகவும் வசனங்களாகவும் வெகுமக்களைப் போய்ச் சேர்ந்த காலகட்டத்தில் தனது பாடல்கள் வழியாக அந்த இயக்கத்துக்குப் பங்களித்தவர் வாலி. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ (எங்கள் வீட்டுப் பிள்ளை), ‘ஏன் என்ற கேள்வி’ (ஆயிரத்தில் ஒருவன்), ‘புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?’ (சந்திரோதயம்) போன்ற பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். மாறும் பண்பாட்டு வரலாற்றோடு தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் இணைத்துக் கொண்டிருந்தவர் வாலி.
வாலி திரைப்படப் பாடல்கள் தவிர, புதுக்கவிதைகள் மற்றும் காவியங்களையும் எழுதியுள்ளார். திரைப்பாடல்களில் இவருக்கு இருந்த மரபின் செல்வாக்கு கவிதைகளில் எதிர் மறையான விளைவையே தந்தது. வெறுமனே எதுகை மோனைத் துணுக்குகளாக, டி. ராஜேந்தர் பாணி மொழி விளையாட்டாகவே இவரது பெரும்பாலான கவிதைகளை மதிப்பிட முடியும். வாலியின் படைப்பாற்றல் முழுமையாக வெளிப்பட்ட இடம் திரைப்பாடல்கள்தான்.
மூலம் அறிந்துகொள்ள முடியாத நகலே சிறந்த கலை என்ற கருத்து உண்டு. இக்கருத்து சினிமா போன்ற வெகு ஜனக் கலைக்கும் அதில் பங்காற்றும் கலைஞர்களுக்கும் முற்றிலும் பொருத்தமானது. தொடர்ந்து சம காலத்தைத் தனது படைப்புகளில் நகல் செய்தவர் வாலி. அந்த வகையில் அவர் காலத்தின் நகல்.
- ஷங்கர்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in