சிறப்புக் கட்டுரைகள்

பணம் வெளுக்க என்ன உண்டு?

இரா.முருகன்

ஆபத்து இல்லாத ஒரே வங்கி ரத்த வங்கிதான். வணிக வங்கிகள் வாரி வழங்கிய பெருந்தொகைக் கடன்கள் திரும்பி வராமல் போகலாம். இந்தப் பெருநஷ்டம் போக, வங்கிகளைப் பயன்படுத்திக் கருப்புப் பணத்தை சலவைசெய்து வெளுப்பதும் நடக்கிறது. இன்னும் கடன் அட்டை மோசடி, இணையத்தின் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடும் மோசடி… இதற்கெல்லாம் எதிராக வங்கிப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கா விட்டால், சட்டப் பிரம்பால் அடித்து அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி காத்திருக்கிறது. வங்கி நிர்வாகிகள் தூங்கி நாளாகிறது.

பணச் சலவையை எடுத்துக்கொள்வோம்...

1930-ல் அமெரிக்கா முதல்முறையாக மதுவிலக்கை அமல்படுத்தியது. உடனே, நம்ம ஊர்போல அங்கேயும் கள்ளச் சாராயம் விற்று அல் கபோன் என்ற மாபியா தலைவர் கல்லா கட்டினார். கூடவே, காசு போட்டால் சலவை செய்துதரும் இயந்திரங்களையும் ஊரெல்லாம் நிறுவினார். அந்தச் சில்லுண்டி வருமானத்துக்கு நடுவே, சாராய வருமானத்தைத் தந்திரமாக நுழைத்து, எல்லாமே வெளுத்து வந்த பணம் என்று நம்பவைத்தார். நம்பாதவர்கள் கிசுகிசுத்தது - “இவர் துணிச் சலவை செய்யலே... பணச் சலவை பண்றார்.”

லான்ஸ்கியின் சலவை

அல் கபோன் சாம்ராஜ்யம் முடிந்து, அடுத்து வந்த மேயோர் லான்ஸ்கி, பணச் சலவையைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார். மூன்றுகட்டத் திட்டம் அது. முதல்கட்டம் அமெரிக்காவில் சேர்த்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிக் கணக்குக்கு இடம்பெயர்த்தல் (டிஸ்ப்ளேஸ்மெண்ட்). அடுத்தகட்டம் தன் ‘ஓகே பாஸ்’ அடியாட்களை அமெரிக்க வங்கிகளில் சேமிப்புக் கணக்கு திறக்கவைத்து, அந்தக் கணக்குகளுக்கு சுவிட்சர்லாந்து வங்கியிலிருந்து அவ்வப்போது கணிசமான தொகையை அனுப்பி உள்ளடுக்குதல் (லேயரிங்). மூன்றாவது கட்டம், அடியாட்கள் தங்கள் கணக்கில் வரவான சுவிட்சர்லாந்து வருமானத்தை வழித்தெடுத்து, தலைவர் லான்ஸ்கி அமெரிக்க வங்கியில் திறந்த சாமானியமான சேமிப்புக் கணக்கில் வரவுவைப்பது (இன்டெக்ரேஷன்).

சுவிஸ் வங்கி “ஏதுப்பா இம்புட்டுப் பணம்?” என்று கேட்டபோது, லான்ஸ்கி வெறுத்துப்போய் ஒரு சின்ன சைஸ் வங்கியையே விலைக்கு வாங்கிவிட்டாராம்!

பணச் சலவை, உலகம் முழுக்கப் பெரும்பாலும் வங்கிகள் மூலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. போதைப் பொருள் விற்பனை, கருப்புப் பண உலகத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதும், தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கருப்புப் பணம் பயன்பட்டு அழிவை உண்டாக்குவதும் பணச் சலவைக்குக் கூடுதல் பரி மாணங்களை அளிக்கின்றன.

அதர்மம் இப்படி அதிகரிக்க, சட்டங்களை எல்லா நாடுகளும் பிறப்பித்துக் குற்றம் குறையப் பாடுபடுகின்றன. இதெல்லாம் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு காகிதம் காகிதமாகப் படித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் இல்லை. கணிப்பொறிகொண்டு கட்டி நிறுத்தப்பட்டு இயங்கும் பணச் சலவைத் தடுப்பு அமைப்புகள் இவை (ஆண்டி மனி லாண்டரிங் சிஸ்டம்ஸ்).

தடுப்பு அமைப்புகள்

‘வாடிக்கையாளரை அறி’என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் இந்தத் தடுப்பு அமைப்புகள் தனிநபர், வியாபார நிறுவனம், தொழில் நிறுவனங்கள் என்று எல்லா வகை வாடிக்கையாளர்களையும் அவர்கள் கணக்கு திறக்கும்போதே பரிசோதிக்கும்.

முதலில், வாடிக்கையாளரின் அடையாளம் உறுதிசெய்யப்பட வேண்டும். “நான்தான் கோவிந்தசாமி” என்று வரும் புது வாடிக்கையாளர் கோவிந்தசாமிதானா என்று அடையாளம் காண பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை இப்படி அத்தாட்சி தேவை. கூடவே, வாடிக்கையாளர் கொடுத்த முகவரியில்தான் அவர் வசிக்கிறாரா என்றும் உறுதி செய்யப்படும். அடையாளம் காணும்போதே, கணினி அமைப்பு இவர் விரும்பத் தகாதவர் பட்டியலில் இருக்கிறாரா என்று கண்டுகொண்டுவிடும்.

எல்லா நாடுகளும் தங்கள் நாட்டுப் பொருளாதாரக் குற்றவாளிகள், தீவிரவாதிகள் என்று அவ்வப்போது பட்டியல்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்கின்றன. இது தவிர, பணச் சலவைக்கு எதிரான சர்வதேச அமைப்பும் (ஃபினான்ஷியல் ஆக்‌ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்) இப்படியான பாரா உஷார் பட்டியல்களை வெளியிடும். வங்கி மற்ற நிதி நிறுவனப் பணச் சலவைத் தடுப்பு அமைப்புகள், இந்தப் பட்டியல்களில் ஒலி அடிப்படையில் (ஃபோனிடிக் ஸர்ச்) தேடி, “இந்தாளு உபத்திரவமில்லாதவர்” என்று உள்ளே அனுமதிக்கும்.

இப்படி வடிகட்டப்பட்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய நிதிநிலை, வேலை, கல்வி இன்னோரன்ன தகுதிகளை வைத்துக் கணினி அமைப்பு ஒரு உத்தேசமான அடையாளக் குறிப்பை (கஸ்டமர் ப்ரொஃபைல்) தயாரிக்கும். இவர் வருமானத்தை உத்தேசித்து, மாதம் கிட்டத்தட்ட 20,000 ரூபாய் கணக்கில் வரவாகும். அதில் 18,000 செலவாகும். தீபாவளிபோல் பண்டிகை நேரத்தில் கணக்கில் இருப்பை முழுக்கத் துடைத்து எடுத்துவிடுவார். இவர் கணக்கில் வெளிநாட்டுப் பணம் வர வாய்ப்பில்லை. இப்படி, உத்தேசமான வரவுசெலவு விவரமும் (ட்ரான்ஸாக்‌ஷன் ப்ரொஃபைல்) உருவாக்கப்படும்.

இந்தக் கணக்கில் திடீரென்று லட்சக் கணக்கில் வரவுசெலவு நடக்க ஆரம்பித்தால், பணச் சலவைத் தடுப்பு அமைப்பு விழித்துக்கொண்டு கணக்கைக் கண்காணிக்க ஆரம்பித்துவிடும். அந்தப் பணம் சலவை செய்யவோ, தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் துணைபோகவோ வந்ததாக இருக்கலாம். இதுகுறித்து சந்தேக அறிக்கையும் (ஸஸ்பிஷஸ் ஆக்டிவிட்டி ரிப்போர்ட்) கணினி அமைப்பால் உருவாக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியின் கணினி வலைக்கு அனுப்பப்பட இயலும்.

ஒன்பது லட்சத்து தொண்ணுற்றைந்தாயிரம்

ஒவ்வொரு வங்கிக் கிளையும் அன்றாட வரவுசெலவில், யார் கணக்கில் இருந்தாவது பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்தால், அந்தத் தகவலை ரிசர்வ் வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். பணச் சலவைத் தடுப்பு அமைப்புகள் இந்த அறிக்கையைத் தயாரிப்பதோடு, ஒன்பது லட்சத்து தொண்ணூற்றைந்தாயிரம் ரூபாய் பணமாக எடுத்தது போன்ற விதிமுறைகளுக்கு அடங்கிய, ஆனால் சந்தேகத்துக்கு உரிய பட்டுவாடாக்கள் பற்றியும் ஆய்வறிக்கை தரும்.

இது மட்டுமில்லை, வங்கியின் பல கணக்குகளிலிருந்து வெளியே இன்னொரு வங்கியில் ஒரே கணக்குக்குப் பணம் போய்க்கொண்டிருக்கிறது போன்ற தகவல்களையும் கண்டுபிடித்து இந்த அமைப்பு கண்காணிக்கும். பணச் சலவை செய்ய சமூக விரோதிகள் புது வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும்போது, நிகழ்வுகளின் பொதுத் தன்மையை இனம்கண்டு அவைபற்றிக் கற்றுக்கொண்டு அசம்பாவிதங்கள் இனியும் நிகழாது காக்கவும் சாமர்த்தியம் மிக்கவை பணச் சலவைத் தடுப்பு அமைப்புகள்.

போகிற போக்கில், ஒரே நாளில் நாலு தடவை ஏ.டி.எம்-ல் ஐந்நூறு ஐந்நூறு ரூபாயாக எடுத்தால் வீட்டுக்கு வங்கி மேலாளர் வந்துவிடக்கூடும்.

-இரா. முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: eramurukan@gmail.com

SCROLL FOR NEXT