| 'விக்கிலீக்ஸ்' அமைப்பு பிரசுரித்திருக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களில் ஒன்றைக்கூடப் பொய்யானதென்று கூற முடியவில்லை. |
நான்கு ஆண்டுகளாக அதிகம் வெளியே வந்திராத ஒருவர், லத்தீன் - அமெரிக்க நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தவர், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறவர், இணையதளத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு அவ்வப்போது மறுக்கப்படும் நிலைக்கு ஆளாகியிருப்பவர், உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் அதிபர் தேர்தல் முடிவை - எப்படி வந்திருக்க வேண்டுமோ அப்படி வரவிடாமல் திருப்பிவிட்டிருக்கிறார்; அப்படித்தான் மேற்கத்திய பத்திரிகையுலகின் செல்வாக்கு மிக்க சக்திகள் 'விக்கிலீக்ஸ்' புகழ் ஜூலியன் அசாஞ்சே பற்றிக் கூறுகின்றன.
ஒரு வாரமாகத் தொடர்ச்சியாக 'விக்கிலீக்ஸ்' முதன்மை ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சேவின் நோக்கம் என்ன, அவர் செய்தது என்ன என்பதைப் பற்றிய கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி தோற்றதற்குக் காரணம் அசாஞ்சே என்று அவை சுட்டுகின்றன. ரஷ்ய அதிபர் புதினுக்காக வேலை பார்க்கும் வலைதள ஊடுருவிகளுக்கு ஹிலாரி பற்றிய ஆவணங்கள் கசிய 'விக்கிலீக்ஸ்' உதவியிருக்கிறது என்ற அனுமானத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ட்ரம்ப்பின் வெற்றியும் ஹிலாரியின் தோல்வியும்
ஜனநாயக தேசியக் குழு (டிஎன்சி) உறுப்பினர்களுக்கிடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள், ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' அம்பலமாக்கியதாலேயே அந்தக் குழுவினர் பதவி விலக நேர்ந்தது. இது ஹிலாரியின் வெற்றிவாய்ப்புகளையும் குறைத்து, ட்ரம்ப் வெற்றிக்கு வழிவகுத்தது என்பது அவர்களுடைய வாதம். தங்களுடைய கணினி 'சர்வர்'களை ரஷ்ய 'இணைய ஊடுருவிகள்' தகவல்களைத் திருடிச் சேதப்படுத்திவருகின்றனர் என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் 2016 ஜூலை முதலே கூறிவருகின்றனர். அமெரிக்க உளவுத் துறை இதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியது.
சுதந்திரச் சிந்தனையாளர்களால் போற்றப்படும் அசாஞ்சேயும் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் ட்ரம்பும் இப்போது இந்த விஷயத்தில் ஒரே அணியில் இருப்பது அசாதாரணமானது. ஜனநாயகக் கட்சிக் குழுவின் தகவல்கள் அம்பலமானதில் ரஷ்யாவின் பங்கு ஏதுமில்லை என்று இருவருமே கூறுவதால், அமெரிக்காவைச் சேர்ந்த சுதந்திர சிந்தனையாளர்கள், இதில் அசாஞ்சேயின் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர் புதினுடன் சேர்ந்துகொண்டு அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டு, ட்ரம்ப் வெல்வதை உறுதிசெய்தார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
ரகசியங்கள் உண்மை
என்றாலும், இதை அப்படியே உண்மை என்று ஏற்பதற்கும் இல்லை. காரணம், இப்போதிருப்பது 'உண்மை கடந்த' சூழல். ஹிலாரி தோற்றதற்கு அசாஞ்சே மீது குற்றம்சாட்டுவது ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆனால், இப்படிக் கருதுவதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இவை எதுவுமே உறுதிப்படுத்தப்படாதவை; போதிய ஆதாரங்கள் அற்றவை என்பதே அது. எதுவுமே ஊடகங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த விவகாரத்தில் அசாஞ்சேவுக்கு இருக்கக்கூடிய உள்நோக்கம் என்ன, இதில் அவருடைய நம்பகத்தன்மை என்ன என்று கேள்வி எழுப்பினால், அமெரிக்கப் பத்திரிகைகள், உளவு அமைப்புகள் தொடர்பாகவும் அதே கேள்விகளைக் கேட்டாக வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 'விக்கிலீக்ஸ்' அமைப்பு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைப் பிரசுரித்திருக்கிறது. இதுவரையில் அவற்றில் ஒன்றைக்கூடப் பொய்யானதென்றோ, உறுதி செய்யப்படாதது என்றோ கூற முடியவில்லை. சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் இராக்கில் பெருமளவு ஆட்களைக் கொல்லும் பயங்கர ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பதாகத் தொடர்ந்து கூறிவந்த உளவு அமைப்புகளும் அமெரிக்கச் செய்தி ஊடகங்களும்தான் இப்போது அசாஞ்சேவின் செயலையும் விசாரிக்கும் நீதிபதிகளாகத் தங்களைக் கருதிக்கொள்கின்றன.
அசாஞ்சே மீது பழி
இராக் பற்றி அமெரிக்க உளவு அமைப்புகளும் அமெரிக்க ஊடகங்களும் செய்த தவறான பிரச்சாரம், இராக்கின் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கியதுடன், ஏராளமான பயங்கரவாத இயக்கங்களையும் தோற்றுவிப்பதில்தான் முடிந்தது. ஜனநாயகக் கட்சியின் குழு தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்கள், அசைக்க முடியாத ஆதாரங்களாக இருந்ததாலும், அதில் உள்ள உண்மைகள் சுட்டதாலும், அதைத் திரையிட்டு மறைக்க முடியாததாலும் பிரச்சினையைத் திசை திருப்புகிற வகையில் ஹிலாரியின் தோல்விக்கு அசாஞ்சே மீது பழிபோடப்படுகிறது. ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து ஹிலாரியைத் தோற்கடிக்கச் சதி செய்யக்கூடியவர் அல்ல அசாஞ்சே. அப்படியே செய்திருந்தாலும் அது தார்மிகரீதியில் தவறென்றோ, வில்லத்தனமான செயல் என்றோ கூறிவிட முடியுமா?
இரண்டு காரணங்களுக்காகத் தனது செயல் சரியென்று அசாஞ்சே கருதுகிறார். பிற ஜனநாயக நாடுகளின் நடைமுறைகளில் அமெரிக்கா தலையிடுவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதையே பிற நாடுகள் ஏன் அமெரிக்காவுக்குச் செய்யக் கூடாது? அத்துடன் ஹிலாரி அதிபரானால் அமெரிக்கா பிற நாடுகளில் ராணுவரீதியாகத் தலையிடுவது அதிகமாகிவிடும். அது உலக நாடுகளின் ஏழை மக்களுக்குத் தாங்கொணாத துயரங்களையே ஏற்படுத்தும். எனவே, அவருடைய வெற்றியைத் தடுப்பது தனது தார்மிகக் கடமை என்று கருதுகிறார் அசாஞ்சே.
ஒரே பாதையில் பயணம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி எப்படிப்பட்டவர் என்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் புதிய தகவலை அசாஞ்சே தந்தார். பிற ஊடகங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் அசாஞ்சே செய்தார். ஆனால், ஊடகங்கள் செய்யத் தவறின. அசாஞ்சே தகவல் அளித்ததாலேயே தேர்தல் முடிவு மாறிவிடவில்லை, வாக்காளர்கள் எடுத்த முடிவால்தான் மாறியது. தேர்தல் முடிவுக்காக அசாஞ்சேவையோ ரஷ்யாவையோ குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. அது அமெரிக்க வாக்காளர்களையும் இழிவுபடுத்துவது போலாகும்.
'விக்கிலீக்ஸ்' தொடங்கப்பட்ட காலத்தி லிருந்தே தனது பயணத்தை அசாஞ்சே யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவில்லை. “ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்கும் உள்ள மிகப் பெரிய இரண்டு எதிரிகள், செல்வாக்கில்லாத மக்களை அரசாங்கத்தால் பெரிய அளவில் உளவு பார்க்க முடிகிறது, செல்வாக்கு மிக்கவர்களின் நடவடிக்கைகள் வெளிக்கொண்டுவர முடியாதபடிக்கு பரம ரகசியமாகவே இருக்கிறது” என்கிறார் அசாஞ்சே.
செல்வாக்கு மிக்கவர்களுடைய செயல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், சாதாரண மக்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரியக் கூடாது என்பதே அவர் கூறும் மாற்று யோசனைகள். ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு முடிவுகளை அவர் வெளியிட்டதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், அவருடைய நிலையில் மாற்றமில்லை என்பதே உண்மை.
© 'தி இந்து' ஆங்கிலம் | தமிழில் சுருக்கமாக:சாரி