நம்மில் சிலர், முன்னரே கட்டி விற்கும் வீட்டை வாங்க விரும்புவோம்., இதில், பிரபலமான கட்டிட நிறுவனத்தின் உத்திரவாதம், உடனடியாகக் குடியேரும் வாய்ப்பு, சற்று நியாயமான விலை, அதீத விலையில் விற்கும் அடி நிலத்தை தனியாக வாங்க வேண்டியத் தேவையில்லை என்பன போன்ற பல அணுகூலங்கள் இருந்தும், வேறு சிலர் தானே திட்டமிட்டு, தன் விருப்பத்திற்கேற்ப வீட்டை வடிவமைத்துக் கட்டுவதையே விரும்புகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் தன் தனித்தேவையைப் பூர்த்திச் செய்வதிலுள்ள அவர்களின் நாட்டமே ஆகும்.
இது போன்ற தன்மை கொண்டோர், வியாபாரச் சந்தையில் பொருட்கள் வாங்கும்போதும் தங்கள் தேவைக்கேற்ப தாங்களே பொருட்களை வடிவமைத்துக் கொள்ள முடியுமா என ஆராய்கின்றனர். இதை மனதில் கொண்டே, சில பிராண்டுகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப தனித்தனியாக பொருட்களைத் (CUSTOMISED PRODUCT) தயாரித்து விற்க திட்டமிடுகின்றன. மேலைநாடுகளில் வழக்கத்திலிருக்கும் இந்த அணுகுமுறை இப்போது இந்தியாவிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு தொழில் நிறுவனம், இன்னொரு தொழில் நிறுவனத்தின் (BUSINESS- TO-BUSINESS) குறிப்பிட்ட தேவைக்காக, கனிணி மென்பொருளையோ, இயந்திரத்தையோ, வாகன உதிரி பாகத்தையோ, பிரத்யேகமாக வடிவமைத்து உருவாக்குவது என்பது வழக்கமான ஒன்று. இதில் இரு தொழில் நிறுவனங்களும் ஒருங்கே திட்டமிட்டு, கூட்டாக செயல்பட்டு, புதிய பொருட்களைத் தயாரித்து (CO-CREATION) முடிக்கின்றன.
இதை பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் (CONSUMER PRODUCTS) செயல்படுத்துவது என்பது கடினமானது. வாங்குவோர் எண்ணிக்கை சந்தையில் அதிமாக இருப்பதால், அதற்கேற்றார்போல் தொழிற்சாலையில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப பொருட்களை வேறுபடுத்தித் தயாரித்துக் கொடுப்பதென்பது அதிக செலவையும், மிகுந்த நேரத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு முறையாகும். இந்த தனித்தேவையைப் பூர்த்தி செய்யும் அணுகுமுறை அப்படி ஒன்றும் இதற்கு முன்னர் நாம் அறிந்திராத ஒன்றல்ல என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொருவரின் தகவலையும் தனித்தனியாக அறிந்து அதற்கேற்ப, பெருவாரியான மக்களுக்குத் தயாரித்துக் கொடுக்கப்படும் வங்கி கிரெடிட், டெபிட் அட்டைகள், அரசாங்கம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை, வாகனம் ஓட்டும் உரிம அட்டை மற்றும் நியாயவிலைக் கடை விநியோக அட்டை முதலியன எல்லாம் இம்முறையை (MASS CUSTOMISATION) அடிப்படையாகக் கொண்டதே.
சமீபத்தில், நம் நாட்டில் தபால்நிலையங்கள் கூட இதைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளன என்பது விந்தையானது. முதன்முறையாக, வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்தையே தபால்தலையில் (‘MY STAMP’) அச்சடிக்கச் செய்து வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம். இதுபோன்று நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், பிராண்டுகள் எப்படி இதை தான் விற்கும் பொருட்களில் சாதிக்க நினைக்கின்றன?
தையல்காரரிடம் நமக்கேற்ற அளவுக்கு ஆடை தைக்கும்போது அது நமக்கு பொருத்தமாக அமைய வாய்ப்புண்டு. ஆனால், ஆடையில் நவீன நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுவருவது கடினம். ஆயத்த ஆடை இதற்கு சரியான மாற்றாக அமைகிறது. ஆனால், சில சமயங்களில் அவை சரியான பொருத்தமின்றி அணிபவருக்கு அசெளகரியத்தையும் கொடுக்கிறது. இதை கருத்திற்கொண்டே ரேமண்ட் (RAYMOND) பிராண்ட், மேட்-டு-மெஷர் (MADE-TO-MEASURE) என்ற அமைப்பை அறிமுகப்படுத்தியது.
நிறுவனத்தின் அதே உயர்தர துணியை பயிற்சியளிக்கப்பட்ட தையல்நிபுணரின் மூலம், வாங்குபவரின் பிரத்யேக அளவிற்கேற்ப ஆயத்த ஆடையாக வடிவமைத்து தருகிறது. இது போன்று பொருத்தமான மேலங்கியும் (BLAZER) தைத்துத் தரப்படுகிறது. தேவையெனில், அதன்மேல் வாடிக்கையாளரின் பெயர்குறியும் (INITIALS) பொறித்துத் தரப்படுகிறது.
இதையும் தாண்டி யோசித்த ஆலன் சோலி (ALLEN SOLLY) பிராண்ட், பெயிண்ட் நிறுவனங்கள் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டு, ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தி (COLOUR LAB) சட்டையை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணத்திலும், தேவையான அளவுக்கேற்பவும் தயாரித்து அவரவர் இல்லத்திற்கே அனுப்பிவைக்கிறது. தான் அணியும் உடையின் மூலம் தனது தனித்தன்மையான ஆளுமைக் குணாதிசயங்களை வெளிக்காட்ட விரும்புவோருக்கு இந்த பிராண்ட் மிகவும் பொருத்தமாக அமைந்துவிடுகிறது.
ஆதித்திய பிர்லா (ADITYA BIRLA) நிறுவனத்தால் இந்தியாவில் 1993ல் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமான இந்த ஆலன் சோலி பிராண்ட் முதன்முதலில் வழக்கமான சம்பிராயதத்தை எதிர்த்து, அலுவலகம் செல்வோர் அணியும் ஆடை, வெள்ளை, நீலம், சாம்பல் நிறங்களையும் தாண்டி, பல வகையான புதிய நிறங்களில் சற்று வித்தியாசமாகவும் இருக்கலாம் என எடுத்துரைத்தது. இந்த ஆயத்த ஆடைகளை அலுவலகத்தில் வாரக்கடைசியில் அணியும் ஆடை (FRIDAY DRESSING) என்று பெயரிட்டு சிறிய புரட்சியையே ஏற்படுத்தின.
இப்போது, மக்கள் தான் யாரென்பதை எடுத்துரைக்க வெறும் ஆடைகளை மட்டும் நம்பியிருப்பதில்லை. தான் உபயோகிக்கும் கடிகாரம், கைப்பை, அணிகலங்கள், கைபேசி, இதர தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற தனிநபர் பொருட்கள் மட்டுமின்றி, தன் குடும்பத்திற்கான வாகனங்களிலும் இதை சகஜமாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு உதவும் பிராண்டுகள் மக்களின் பேராதரவைப் பெறுகின்றன.
இதையறிந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (MAHENDRA & MAHENDRA) பிராண்ட் இப்போது ஒரு புதிய திட்டத்தின் (MAHINDRA CUSTOMISATION) மூலம், தன் வாகன பிராண்டுகள், பொலேரோ (BOLERO) ஸ்கார்பியோ (SCORPIO) தார் (THAR) எக்ஸ்யூவி (XUV) போன்றவற்றில் தனிநபர் விருப்பத்திற்கேற்ப வெளிப்புற முகப்பு, வர்ணம், விளக்கு அமைப்பு, உட்புறத் தோற்ற அமைப்பு, அமரும் இருக்கை போன்றவற்றை வேறுபடுத்திக் கொடுக்கிறது. வாகனத்தின் தொழில்நுட்பம், இயந்திரம், இதர பாகங்கள் போன்றவை பொதுவாக இருந்தபோதிலும், உட்புற மற்றும் வெளிப்புற வடிவத் தினை முழுமையாக மாற்றிட இப்பிராண்ட் வழிவகை செய்துள்ளது. ஒருவர் உபயோகிக்கும் வாகனம் வேறொரு வரிடமும் இல்லாதவகையில், தனக்கே உரித்தான அவர் கைரேகை போல் வித்தியாசமாக அமைந்து, வாகனம் உண்மையிலுமே அவருடையதாகவே மாறுகிறது.
இது போன்ற தனித்தேவையைக் குறிவைக்கும் பொருட்கள் சற்று விலை அதிகமாகவே உள்ளபோதிலும், வாடிக்கையாளர்கள் அதைப் பொருட் படுத்துவதில்லை. இது பிராண்டுகளுக்கு இரட்டை வெற்றியை அளிக்கிறது. ஒன்று, தனித்துவமான பொருளை விற்பதால் மற்றும் சந்தையில் நேரடியான போட்டியேதும் இல்லாததால், அதிக விலையை நியாயப்படுத்தி லாபத்தைப் பெருக்கமுடிகிறது. இரண்டு, வாடிக் கையாளர்கள் திருப்தியடைவதால், பிராண்டின் மீது அவர்களுக்குள்ள பற்றுறுதியை அதிகப் படுத்தி, தன்வசப்படுத்தி வைத்தல் எளிதாகிறது. இறுதியில், இந்தப் பரிமாற் றத்தில் வாடிக்கையாளர் பிராண்ட் இரு சாராரும் பயனடைவதால் இது ஒரு பரஸ்பர வெற்றியாகவே (WIN-WIN) கருதப்படுகிறது!!
krsvk@jsb.ac.in