முதுமலை பயணம். புறப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே மனம் வனத்தில் போய் உட்கார்ந்துகொண்டது. காடு, வனம், கானகம்... எந்த வார்த்தையில் சொன்னாலும் அது ஒரு தனி உலகம் அல்லவா? சூழலியல் ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள், ஊடகவியல் மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் கொண்ட ஒரு சின்ன அணியாகக் கைகோத்திருந்தோம். காடுகாண் அனுபவம் பலருக்கும் புதிது.
எங்கும் குப்பை
காடு நோக்கிச் செல்லும் மனம் எதிர்நோக்கும் காட்சிகள் வேறு. யதார்த்தம் நமக்குக் கொடுக்கும் காட்சிகள் வேறு. நகரங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், குப்பைகளைக் குவித்திருக்கிறார்கள் எங்கும். செல்லும் வழியில் ஆற்றோரம் உள்ள கோயில்களில் குப்பையும் அதிகம், சுகாதாரச் சீர்கேடும் அதிகம். மலையுச்சியில் உள்ள சின்னஞ்சிறு கோயில்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தென்கயிலை எனப் பக்தர்களால் கொண்டாடப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், கோவையின் மேற்கே ஏழு சிறு சிகரங்களைத் தாண்டி ஒரு பெருமலையின் மேல் அமைந்திருப்பது. இங்கு முதல் இரு சிகரங்களுக்குச் செல்லத்தான் படிக்கட்டுகள். அதற்கு மேல் கல்லும் மண்ணும்தான். சில இடங்களில் பாறை மீது மட்டும் கால்களை மாறி மாறி வைத்து ஏறிச் செல்ல வேண்டியிருக்கும். உடல் உறுதி உள்ளவர்கள் மட்டுமே கடைசி வரை போய்வர முடியும். முதல் மலைச் சிகரம் வரைகூட ஏற முடியாமல் திரும்புவர்களும் உண்டு. ஆனால், இங்கும் குப்பைமயம்தான். அதுவும், பெருந்திரளான மக்கள் ஏறி இறங்கும் முதல் இரண்டு சிகரங்களில் குப்பைகள் குவிந்து காணப்பட்டன.
குடிநீர் கொடுக்கும் மலை
“கோயில் இருக்கும் இடத்தில் குப்பை போடலாமா, வணங்குவதற்கு என்று வரக்கூடிய இடத்தையே எப்படி மாசுபடுத்துகிறார்கள்?” என்று கேட்டார் ஒரு நண்பர். அது ஒருபக்கம் இருக்கட்டும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குக் குடிநீரைத் தந்துகொண்டிருக்கும் சிறுவாணி, நொய்யல் ஆறுகள் உற்பத்தியாகும் இடமே இது தான். மலையில் சேரும் குப்பைகள் மழைநீரில் சிறுவாணி அணை வரை அடித்துக்கொண்டு வருகின்றன. விஷயம் யாருக்கும் தெரியாதது அல்ல. மலையேறிகளிடம் தொடர்ந்து விழிப் புணர்வுப் பிரசாரம் நடத்திக்கொண்டுதான் இருக் கிறார்கள். ‘இந்த இடம் அசுத்தப்படுவதை அந்த வெள்ளியங்கிரி ஆண்டவனும் விரும்ப மாட்டான்’ என்றுகூட விளம்பரப் பலகைகளை வைத்தாயிற்று. பிரயோஜனம் இல்லையே?
ஏன் யோசிக்க மறுக்கிறோம்?
சேரும் குப்பைகளில் பெரும்பாலானவை மலையேறிகள் கொண்டுவரும் சோற்றுமூட்டை, தின்பண்டங்களின் எச்சங்களும் மிச்சங்களும் காலித் தண்ணீர் போத்தல்களும் பாலிதீன் பை களும்தான். ஒரு இடத்துக்குச் செல்லும்போது, தனக்கு என்னென்ன தேவை என்று யோசித்து எடுத்துக்கொண்டு வருபவர்களால், அந்த இடத்தை விட்டு அகலும்போது, நாம் விட்டுச் செல்லும் எச்சங்கள் அந்த இடத்தை எவ்வளவு நாசமாக்கும் என்பதை மட்டும் ஏன் யோசிக்க முடியவில்லை?
வெள்ளியங்கிரி மலை ஓர் உதாரணம்தான். நம்முடைய வனங்கள், மலைகள், கடற்கரைகள் என்று சுற்றுலாவுக்கு நாம் செல்லும் எல்லா இடங்களுமே வழியெங்கும் நீர்ப்புட்டிகள், காலி மதுக்குப்பிகள், பாலிதீன் குப்பைகளால்தான் நிறைந்து கிடக்கின்றன.
அந்தப் புலி...
உதகையிலிருந்து கல்லட்டி இறங்கி மசினகுடி, தெப்பக்காடு வழியாக ஜீப்பில் முதுமலைக்கு வந்து தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பந்திப்பூர் வனச் சரணாலயம் வரை சென்று வரத் திட்டமிட்டோம். வரும் இடமெங்கும் குப்பைகள். பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கிவிட்டது. வண்டி மெல்ல சாலையின் மேடு பள்ளங்களில் ஏறிக்கொண்டிருந்தபோதுதான் ஓட்டுநர் கத்தினார்: “சார்...புலி சார்...”
வண்டி அப்படியே நிறுத்தப்பட அமைதியாகக் கவனிக்கத் தொடங்கினோம். எங்களுக்கு இடப் புறம் உள்ள ஒரு மண் மேட்டின் மேல் நின்று கொண்டிருந்தது அந்தப் புலி. நிலவு வெளிச்சத்தில் வெளித்தோற்றம் மட்டுமே தெரிந்தது. அடுத்த நிமிடம் எமக்குப் பின்புறமிருந்து வேகமாக வந்த சரக்கு வாகனம் தந்த வெளிச்சம் புலியின் முழு உருவத்தையும் காட்டியது. எதிரில் வந்த வாகனங்களின் வெளிச்சமும் அந்த வன விலங்கை நெடுநேரம் இரவுப் பின்னணியில் பார்க்க வைத்தது.
புலி தலையை அப்படியும் இப்படியுமாகத் திருப்பு கிறதேயொழிய இடத்தை விட்டு நகர்வதாயில்லை. என்ன காரணம் என்று யோசிக்கத் தொடங்கினோம். இடப்புறம் இருந்த மண் மேட்டை விட்டு இறங் கினால் நாங்கள் போயிருந்த நெடுஞ்சாலை. அதைக் கடந்தால் கொஞ்சம் கீழே மோயாறு. அதிர்ந்துபோனோம். அது ஸ்தம்பித்திருந்தது. ஆனால், அதற்கு வேறு வாய்ப்பு இல்லை. யாருடைய இடத்தை எப்படியெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக் கிறோம்? தனது தாகத்தை அந்தப் புலி தணித்துக்கொள்ள விடாமல் நாமெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டும், வெளிச்சத்தைச் செலுத்திக்கொண்டும் இருக்கிறோம். அதற்கு மேல் அங்கு நிற்க மனம் இல்லை. முன்னும் பின்னு மாகச் சீறிவரும் வண்டிகளில் எங்கள் வண்டியும் புறப்பட்டது.
இரவு முழுவதும் அந்தப் புலிதான் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தது. இப்போது அந்தப் புலி என்ன செய்துகொண்டிருக்கும்? ஆற்றில் இறங்கித் தண்ணீர் குடித்திருக்குமோ? ஏதாவது வாகனத்தில் அடிபட்டிருக்குமா?
- அவைநாயகன், கவிஞர், சூழலியல் ஆர்வலர்,
தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com