சிறப்புக் கட்டுரைகள்

பங்களா ராஜாக்களுக்கு விடை கொடுப்போம்

செய்திப்பிரிவு

அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்

அடங்கெழி லஃதென்று -- அடங்குக வுள்ளே

இது நம்மாழ்வார் வாக்கு. அளவிட முடியாத செல்வங்களெல்லாம் இறைவனுடையது என்று அறிந்து, அச்செல்வங்களுக்குள் அடங்குக என்பது இப்பாசுரத்தின் பொருள். ஈசன் என்ற சொல்லை எடுத்துவிட்டு, மக்கள் என்ற சொல்லை நாம் பாசுரத்துக்குள் கொண்டுவந்தால், எல்லாச் செல்வங்களும் மக்களுடையதே என்ற பொருள் வரும். அவற்றுக்குள் மக்களுக்காக உழைப்பவர் என்று சொல்லிக்கொள்பவர் அடங்க வேண்டும்.

நம் நாட்டில் மக்களுக்காக உழைப்பவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் அடக்கத்துக்கும் இடையே இருக்கும் தூரம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் இன்று ஒருவர், எனக்கு அதிகாரத்துக்குரிய அடையாளங்கள் ஏதும் வேண்டாம் என்று சொன்னால் அது நமக்கு வியப்பை அளிக்கிறது. சொல்பவரைச் சந்தேகிக்க வைக்கிறது. இவ்வாறு நினைப்பதே, நாம் அதிகாரத்தின் பெருமிதத்தையும் ஆணவத்தையும் மக்களின் செல்வம் எங்கள் செல்வம் என்று அதிகாரம் உறுதியாக நம்பிச்செயல்படுவதையும் உள்வாங்கிக்கொண்டுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது.

மூன்று மறுப்புகள்

நமக்கு கெஜ்ரிவால் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவர் அதிகாரத்தின் அடையாளங்களைத் தனக்கு வேண்டாம் என்று மறுத்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக நினைப்பது சரியாக இருக்காது. அவர் சிவப்பு விளக்குகள் பொருத்திய வாகனங்களில் பயணம் செல்ல மறுத்திருக்கிறார். பரிவார தேவதைகள் புடைசூழ வருவதை அவர் விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பெரிய பங்களாவில் வசிக்கத் தயங்குகிறார். எனக்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு போதும் என்கிறார்.

சிவப்பு விளக்கு

அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் சிவப்பு விளக்கு பொருத்திய வாகனங்களில் உலாவருவது, அவர்கள் குறித்த நேரத்தில் அலுவலகங்களுக்கோ அல்லது கூட்டங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியத்தினால் என்று சொல்லப்படுகிறது. இது தேவையற்றது என்று நமது உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் இந்த வழக்கம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. மிக முக்கியமானவர்களுக்கு மட்டும் இந்த வசதி அளிக்கப்படலாம் என்று அது தனது முடிவில் கூறியிருக்கிறது.

முதலமைச்சர் பதவி ஏற்றால் சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் செல்ல எந்தத் தடையும் இல்லையென்றாலும், கெஜ்ரிவால் அந்த வசதி வேண்டாம் என்று சொல்கிறார். மக்களோடு தானும் பயணம் செய்தால் சாலைகளில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கின்றன என்பதுபற்றி அறிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பல சமயங்களில் போக்குவரத்து நெரிசலால் அவர் சாலைகளிலேயே பொழுதைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். உதாரணமாக, டெல்லியின் மையத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு டெல்லி அரசுச் செயலகத்திலிருந்து வர வேண்டுமென்றால், சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்.

பயணம் 20 நிமிடங்களில் முடியலாம். அல்லது இரண்டு மணி நேரம் எடுக்கலாம். ஆனால், கோப்புகளைப் படித்து முடிவெடுக்க அலுவலகச் சூழல் அவசியம் என்று நான் கருதவில்லை. சிவப்பு விளக்கு பொருத்தாத அரசு வாகனங்களிலும் கோப்புகளைப் படிக்கலாம். எனவே, சிவப்பு விளக்கு வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றி முடிவெடுப்பது அவருடைய விருப்பம். இதைப் பற்றி நாம் பேசுவதே அதிகார போதையின் வீரியத்தைக் காட்டுகிறது. புகைபிடிப்பவர்கள் அருகில் நாம் இருந்தால் புகை நம்மைப் பாதிக்கும். தொலைவில் இருந்தாலும் அதிகார போதை நம்மைப் பாதிக்கலாம்.

பரிவார தேவதைகள்

நமது தலைவர்களில் பலர் பூனை, எலி, நரி போன்ற படை வியூகங்களின் உள்ளேயே பவனிவர விரும்புகிறார்கள். துப்பாக்கிகள் ஏந்திக் குறைந்தது இருவராவது பின்னால் நிற்காவிட்டால், அவர்களுக்குக் கூட்டங்களில் பேச வராது. கெஜ்ரிவால் அவ்வாறு விரும்பாதது நல்ல அறிகுறிதான். பாதுகாப்பு அவருக்கு இன்று அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், முதலமைச்சராகப் பணிபுரியும்போது அவர் எடுக்கும் முடிவுகள் பலரைப் பாதிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வன்முறையில் இறங்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே, இன்னும் சில நாட்களில் அவருக்குக் குறைந்தபட்சப் பாதுகாப்புக்கான தேவை ஏற்படலாம். தேவையா தேவையில்லையா என்பதை முடிவுசெய்வது அவராக இருக்க முடியாது. முடிவை வல்லுநர்களிடம் விட்டுவிட வேண்டும்.

பங்களா தேவையா?

பெரிய பங்களாக்களைத் தேடியலைவது டெல்லி அரசியல்வாதிகளைப் பீடித்திருக்கும் பெருவியாதி. டெல்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், முதலில் கவனிப்பது அதன் மையம் கிட்டத்தட்டக் காலியாக இருக்கிறது என்பதுதான். காரணம், இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நமக்குத் தொண்டுசெய்வதாகச் சொல்லிக்கொள்ளும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பெரிய அதிகாரிகளும் இருப்பது இங்கேதான். ‘லட்யெனின் டெல்லி’ என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி, சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

இதில் இருக்கும் பல பங்களாக்களின் மனைகள் ஒரு ஏக்கருக்கும் மேல். சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னதுபோல ‘உள்ளே போனால் தொலைந்து விடலாம்.’ இந்தப் பகுதிக்கு வெளியிலும் மத்திய அரசுக்குச் சொந்தமான பல பெரிய பங்களாக்கள் இருக்கின்றன. இதே போன்று பழைய டெல்லி பகுதியிலும் பல பங்களாக்கள் இருக்கின்றன. வெள்ளையர் நம்மை அரசாண்டபோது மக்களுக்குத் தெரியாமல், மக்களை நெருங்க விடாமல் வாழ்வதற்காகக் கட்டப்பட்ட பங்களாக்கள் இவை.

இன்றைய மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு பங்களாவின் விலையும் குறைந்தது ரூ. 500 கோடியாவது இருக்கும். இவற்றில் இருந்துகொண்டுதான் நம்மை ஆள்பவர்கள் நமக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சில அரசியல்வாதிகள் ஒரு பங்களா போதாதென்று இரண்டு பங்களாக்களைக் கையகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவை பழையன என்பதால் பராமரிக்கும் செலவுகளும் அதிகம். இந்த சௌகரியங்களை விட்டுக்கொடுக்க, சில கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தவிர, எந்த அரசியல்வாதிகளும் தயாராக இல்லை.

உலகில் எந்த ஜனநாயக நாடுகளிலும் அரசியல்வாதிகளுக்கோ அரசு அதிகாரிகளுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ - மிக முக்கியமானவர்களைத் தவிர - அரசு செலவில் வீடுகள் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சலுகைகளுக்கும் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. சிலர் சொல்கிறார்கள், தொகுதி மக்கள் வருகிறார்கள், அவர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று. தொகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை டெல்லி சென்று சந்திக்க வேண்டிய கட்டாயம் என்றால், உறுப்பினர் தொகுதிக்கு அதிகம் வருவதில்லை என்றுதானே பொருள்?

எனவே, நமது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், தங்களுக்கு தாமே அளித்துக்கொண்ட சலுகைகளை மக்கள் நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

டெல்லியின் மையத்தில் இருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையின் பரப்பளவு 330 ஏக்கர். அதை மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று காந்தி சொன்னார். நாம் மையத்துக்குப் பின்னால் செல்லலாம். விளிம்பிலிருந்து தொடங்கலாம். அதற்கான ஒரு வாய்ப்பை கெஜ்ரிவால் கொடுத்திருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

- பி.ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, தொடர்புக்கு: tigerclaw@gmail.com

SCROLL FOR NEXT